Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

காங்கிரஸ்: `மோடி அரசின் மோசமான சதியை தோற்கடிக்க வேண்டும்!' - சோனியா காந்தி

பீகார், மத்திய பிரதேச இடைத்தேர்தல்களை சந்திக்க உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, "விவசாயத்திற்கு எதிரான கருப்பு சட்டங்கள், பட்டியலினத்தவர்கள் மீதான அட்டூழியங்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி என இந்தியாவின் பொருளாதார நிலையை" சுட்டிக்காட்டி பா.ஜ.க அரசை கடுமையாக சாடியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று காணொளி வாயிலாக நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். அப்போது பேசிய சோனியா காந்தி, `இந்தியா, மிகவும் இக்கட்டான காலங்களை கடந்து செல்கிறது’ என்றும் `சதி வேளைகளில் ஈடுபடும் பா.ஜ.க அரசை தோற்கடிக்க வேண்டும்’ என்றும் பேசினார்.

சோனியா காந்தி

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள், குத்தகை விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் சிறு கடைக்காரர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. மோடி அரசின் இந்த மோசமான சதித்திட்டத்தை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து கைகோர்த்து பாடு பட வேண்டும்” என்றார்.

பொருளாதாரம் குறித்து பேசிய சோனியா காந்தி, "மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், பிற பொருளாதார குறியீடுகளிலும் நாடு இதுபோன்ற கடும் வீழ்ச்சியை கண்டதில்லை, அதே நேரத்தில் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. இந்தியர்களின் கடின உழைப்பு மற்றும் அடுத்தடுத்த காங்கிரஸ் அரசாங்கத்தால் கடினமாக கட்டமைக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை பா.ஜ.க அரசாங்கம் ஒரே நேரத்தில் இடித்துவிட்டது” என்றார்.

மேலும், ``மோடி அரசாங்கம் தற்போது அதன் அரசியலமைப்பு பொறுப்புகளை கூட மதிக்கத் தவறிவிட்டது. ஜிஎஸ்டி இழப்பீட்டின் பங்கு மாநிலங்களுக்கு மறுக்கப்படுகிறது. அரசாங்கம் தனது அரசியலமைப்பு கடமைகளை நிராகரித்தால், மாநில அரசுகள் மக்களுக்கு எவ்வாறு உதவ முடியும்?” என்று கேள்வி எழுப்பிய சோனியா, ``மத்திய அரசு பொருளாதார அராஜகம் செய்வதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்றார்.

கோவிட் -19 தொற்றுநோயை மோடி அரசாங்கம் கையாளுவதை விமர்சித்து பேசிய சோனியா காந்தி, "மிகப்பெரிய திட்டமிடப்படாத, நிர்வகிக்கப்படாத கொடூரமான கையாளுதல் இது" என்றார். மேலும், `மக்களின் துயரங்களில் மோடி அரசாங்கம் `ஊமை பார்வையாளராக' மட்டுமே இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

21 நாட்களில் கொரோனாவை முறியடிப்பதாக பிரதமர் கூறினார். ஆனால், இப்போது நாடு தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளுமாறு விட்டு விட்டார். தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டார். கொரோனாவை ஒடுக்க எவ்வித கொள்கையோ, வியூகமோ அரசிடம் இல்லை என்றார்.

சோனியா காந்தி

மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில், "பட்டியலினத்தவர்கள் மீதான அட்டூழியங்கள் ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சட்டத்தை மதித்து, இந்தியாவின் மகள்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக, பாஜக அரசாங்கம் குற்றவாளிகளுக்கு ஆதரவாக உள்ளது. ஒடுக்கப்பட்ட குடும்பங்களின் குரலை அரசே அடக்குகிறது. இது ராஜதர்மமா?” என்று கேள்வி எழுப்பினார்.

கட்சி நிர்வாகிகளின் இந்த சந்திப்பு பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கும், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் இடைத்தேர்தல்களுக்கும் முன்னதாக நடைபெற்றது. தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடி அரசாங்கத்தின் "உழவர் எதிர்ப்பு மற்றும் தொழிலாளர் எதிர்ப்பு முகத்தை" உயர்த்துவதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். மேலும், 19 வயது பட்டியலின சிறுமி, நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் சம்பவ பிரச்னையை எழுப்புவதன் மூலம் மத்திய மற்றும் மாநிலங்களில் பா.ஜ.க தலைமையிலான அரசாங்கத்தின் `பட்டியலின எதிர்ப்பு’ கொள்கைகளையும் முன்னிலைப்படுத்தலாம் என்றும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/sonia-gandhi-attacks-modi-government-in-party-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக