தனது ஊராட்சியில் வசிக்கும் பெண்களுக்கு, சுயதொழில் வேலைவாய்ப்புப் பயிற்சி கொடுத்த ஓர் ஊராட்சிமன்றத் தலைவர் பற்றி, விகடன் இணையதளத்தில் கட்டுரை எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரையை படித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பற்றி பாராட்ட, பெரும் உற்சாகத்தில் இருக்கிறார், அந்த ஊராட்சிமன்றத் தலைவர் கந்தசாமி.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள வரவணையின் ஊராட்சிமன்றத் தலைவர், கந்தசாமி. ஓய்வுபெற்ற ஆசிரியரான இவரை, கடந்த தேர்தலில் வரவணை ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி, மக்களே கேட்டுக்கொண்டனர். அதன்படி தேர்தலை சந்தித்து, அமோக வெற்றிபெற்றார். தன்னை நம்பி ஊராட்சிமன்றத் தலைவராக்கிய தன் ஊராட்சி மக்களுக்கு, பதவிக்காலம் முழுவதும் பல நன்மைகளைச் செய்யவேண்டும் என்று சபதம் எடுத்தார். ஊர் பொது இடத்தில், 'சமுதாயக் காய்கறித் தோட்டம்' என்ற பெயரில் இயற்கை காய்கறித் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
Also Read: `இவங்க வாழ்வாதாரம் உயரணும்!' கிராம பெண்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கும் பஞ்சாயத்து தலைவர்
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்னை வர, தனது சொந்த செலவில் வரவணை ஊராட்சியில் உள்ள 1,565 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை சாமான்களை இலவசமாக வழங்கினார்.
அடுத்ததாக, மக்களுக்கு நிரந்தரமாக வருமானத்தை ஏற்படுத்தித் தரும் பொருட்டு, 'கைத்தொழில் பழகு' என்ற பெயரில் பெண்களுக்கு தனது சொந்த செலவில் சுயதொழில் பயிற்சியை தர நினைத்தார். முதற்கட்டமாக, பனைஓலைகளில் கலைப்பொருள்களை செய்யும் பயிற்சியை, நிபுணர்கள் மூலம் வழங்கினார்.
அது குறித்து கடந்த 14 - ம் தேதி விகடன் இணையதளத்தில், 'இவங்க வாழ்வாதாரம் உயரணும்!' - கிராமப் பெண்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கும் பஞ்சாயத்து தலைவர்' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிட்டோம்.
இந்தச் செய்தி, தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கவனத்துக்குச் செல்ல, அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கந்தசாமியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதனால் பெரும் உற்சாகத்தில் இருக்கும் கந்தசாமியிடம் பேசினோம்.
"மக்களே என்னை விரும்பி தேர்தலில் நிக்கவெச்சு, வெற்றியடைய வெச்சதால, அவங்களுக்கு பதவிக்காலம் முழுக்க சேவை செய்யணும் என்பதில் உறுதியா இருக்கேன். அதற்காக, சில முன்முயற்சிகளைச் செய்றேன். ஆனா அதை விரும்பாத சிலர், அதற்கு இடைஞ்சலாகத்தான் இருக்காங்க.
சமுதாயக் காய்கறித் தோட்ட முயற்சியை, 'பொது நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறார்'னு அபாண்டமாக குற்றம்சாட்டி, அந்தத் தோட்டத்தை அழிக்க வெச்சாங்க. இப்போ, பெண்களுக்கு 'கைத்தொழில் பழகு' என்ற பெயரில் சுயதொழில் பயிற்சி கொடுத்ததையும், 'இதெல்லாம் வேண்டாத வேலை. ஊராட்சிமன்றத் தலைவருக்கு மண்டை குழம்பி போயிட்டு'னு ஏதோதோ பேசினாங்க. ஆனா, பெண்கள் ஆர்வமா அதில் கலந்துக்கிட்டாங்க.
இப்படி, தொடர்ச்சியா நான் செய்த நல்ல முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட சிலர் முயன்றனர்.
இதனால, எனக்கு அவ்வப்போது உற்சாகம் குறையும். இந்த நிலையிலதான், விகடன் செய்தியை பார்த்துட்டு, அதைத் தனது டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் பாராட்டியிருக்கிறார். இது எனக்குப் பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கு. 'போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும். என் பணி மக்களுக்காக உழைப்பதே'னு தொடர்ந்து செயல்பட, அமைச்சரின் இந்தப் பாராட்டு பெரிய டானிக்கா அமைந்துள்ளது. மக்களின் நலனுக்காக இன்னும் பல முயற்சிகளைச் செய்ய ஓடுவதற்கு, இது புது தெம்பை தந்திருக்கு. தமிழக அரசு கவனம் வரை எனது முயற்சி செல்லக் காரணமா இருந்த விகடனுக்கு மிக்க நன்றி'' என்றார் நெகிழ்ச்சியுடன்.
source https://www.vikatan.com/business/karur-village-panchayat-president-happy-over-ministers-appreciation-for-his-works
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக