நீடித்த நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு (ASHA), பாதுகாப்பான உணவுக்கான இந்தியா (IFSF), தற்சார்பு வேளாண்மை மையம் (சி.எஸ்.ஏ) மற்றும் குஜராத்தின் ஜத்தன் அமைப்பால் பி.டி பருத்தி குறித்து சர்வதேச வெபினார் ஒன்று நடத்தப்பட்டது. இதில் விவசாயிகள் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.
இந்தியாவில் வணிக சாகுபடிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஒரே மரபணு மாற்றப்பட்ட பயிர், பருத்தி ஆகும். முதன்முதலில் 2002-ல் அனுமதிக்கப்பட்டு போல்கார்ட்-1, பின்னர் போல்கார்ட்-2 என்று இரு வகைகள் வந்தன. இவை முக்கியமாகக் காய்ப்புழுவிலிருந்து பருத்தியைக் காப்பாற்ற கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. போல்கார்ட் ஒன்று முதலில் வந்து, சில ஆண்டுகளிலேயே காய்ப்புழுக்கள் இதற்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்க, பின் போல்கார்ட்-2 வந்தது. அதுவும் சில ஆண்டுகளில் தோல்வியைத் தழுவியது. மகசூலைப் பெருக்கவும், பூச்சிக்கொல்லிகளின் உபயோகத்தைக் குறைக்கவும் கொண்டுவரப்பட்ட இந்த பி.டி பயிர் பெரும் தோல்வியைக் கண்டது. அரசின் தரவுகளே இதை நிரூபிக்கின்றன. சர்வதேச விஞ்ஞானிகள் பி.டி பருத்தியின் தோல்வியை நிரூபித்து, அதற்கான மாற்று வழிகளையும் முன் வைக்கின்றனர்.
பி.டி பருத்தி என்பது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் மற்றும் ஒரே மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆகும். இது 20 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படுகிறது, முதலில் சட்டவிரோதமாகவும் பின்னர் சட்டரீதியாகவும். அரசியல் தலைவர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்தியாவில் பி.டி பருத்தியின் நேர்மறையான, மிகைப்படுத்தப்பட்ட கருத்தையே அடிக்கடி முன்வைக்கின்றனர். உண்மையில், விவசாயிகள் பி.டி பருத்திக்கு மாற்றாகப் பயிரிட மற்ற பருத்தி வகைகளையே தேடுகின்றனர்.
உலகின் மிகச்சிறந்த பருத்தி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் பேராசிரியர் ஆண்ட்ரூ பால் குட்டரெஸ், இந்தியாவில் கலப்பின (ஹைப்ரிட்) பி.டி பருத்தி ஏன் தோல்வியுற்றது என்பதற்கான சுற்றுச்சூழல் காரணங்கள் குறித்து விளக்கங்களை அளித்தார். 1960 மற்றும் 70-களில் கலிஃபோர்னியாவில் நடந்த தவறுகளிலிருந்து இந்தியா எளிதில் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ``மானாவாரி பகுதிகளில் நீண்ட கால (பயிர்) கலப்பின பி.டி பருத்திச் சாகுபடி இந்தியாவுக்கு தனித்துவமானது. இது ஒரு பொறியாகும். இது மகசூலுக்கு பங்களிக்காது, குறைந்த மகசூல் தேக்கத்துக்கு முக்கிய பங்களிப்பாகும். மேலும், உற்பத்திச் செலவுகளை அதிகரிக்க பங்களிக்கிறது. பருத்தி விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பு, அதன் விளைவாக ஏற்படும் பொருளாதார துயரத்துடன் தொடர்புடையது. தற்போதைய மரபணு மாற்றுக் கலப்பின முறைக்கு ஒரு சாத்தியமான தீர்வு மேம்படுத்தப்பட்ட மரபணு மாற்றுப்பயிர் அல்லாத விதைகள், உயர் அடர்த்தி சாகுபடி மற்றும் குறுகிய கால பருத்தி வகைகளை ஏற்றுக்கொள்வதாகும்” என்று வலியுறுத்தினார் பால் குட்டரெஸ்.
டாக்டர் கேசவ் கிராந்தி பேசும்போது, ``அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின் ஆய்வில் 2005-ம் ஆண்டில் பி.டி பருத்தி பரப்பளவு 11.5% ஆகவும், 2006-ல் 37.8% ஆகவும் 2011-க்குப் பிறகு ஒரு தேங்கி நிற்கும் புள்ளியாக இருந்தபோதிலும், பி.டி-ஹைபிரிட் தொழில்நுட்பம் கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் மகசூல் அல்லது பூச்சிக்கொல்லி பயன்பாடு சார்ந்த எந்தவொரு உறுதியான நன்மையையும் வழங்கவில்லை” என்றார்.
மகாராஷ்டிராவில் பருத்தி மகசூல் உலகிலேயே மிகக் குறைவு. மகாராஷ்டிராவின் பருத்தி மகசூல் ஆப்பிரிக்காவின் மானாவாரியயைவிடக் குறைவாக உள்ளது. அங்கு பி.டி, கலப்பினங்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசனம் போன்ற தொழில்நுட்பங்களின் பயன்பாடு எதுவுமே இல்லை. இந்திய பருத்தி விளைச்சல் உலகில் 36-வது இடத்தில் உள்ளது! மேலும், கடந்த 15 ஆண்டுகளில் தேக்க நிலையில் உள்ளது. பி.டி பருத்தியின் பரப்பளவு அதிகரித்த போதிலும் பூச்சிக்கொல்லி பயன்பாடு 2005-க்குப் பிறகு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பி.டி பருத்திக்கு இளஞ்சிவப்பு காய்ப்புழு எதிர்ப்பைக் கட்டுப்படுத்துதல், உறிஞ்சும் பூச்சித் தொற்று அதிகரித்தல், பூச்சிக்கொல்லி மற்றும் உரப் பயன்பாட்டில் அதிகரிக்கும் போக்கு, அதிகரிக்கும் செலவுகள் மற்றும் எதிர்மறை நிகர வருமானம், இவையாவும் 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் பி.டி கலப்பின தொழில்நுட்பம் தோல்வியுற்றது என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது.
டாக்டர் ஹான்ஸ் ஹெரன் பேசியபோது, ``இந்த மரபீணி என்னும் தொழில்நுட்பம் ஒரு பிரச்னையைத் தேடும் தொழில்நுட்பம், தீர்வை கொடுப்பது அல்ல. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபணவை மாற்றியமைப்பது, குறுகிய கால லாபங்களுக்காக விவசாயிகள், நுகர்வோர் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றின் மத்திய மற்றும் நீண்ட கால நன்மையைக் காவு கொடுப்பதாகும். இந்தத் தொழில்நுட்பம் என்பது பிரச்னையின் மூல காரணங்களைக் கையாள்வதைவிட, (நோயின்) அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதாகும், அதாவது உற்பத்தி, நீடித்து நிலைக்கும் தன்மை மற்றும் உயிர் பன்மைய உணவு முறைகளை உருவாக்குவதற்கும், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நிலையான மலிவு தீர்வுகளை வழங்குவதற்குமான அணுகுமுறையை எடுக்காமல் செயல்படும் குறுகிய தீர்வாகும்.
பி.டி பருத்தியின் தோல்வி என்பது அதன் பின்னால் உள்ள ஒரு உற்பத்தி முறை அல்லது தொழில்நுட்பத்தின் தோல்வி மட்டுமல்ல, இது தாவரப் பாதுகாப்பின் ஆதாரமற்ற விஞ்ஞானம், விவசாய வளர்ச்சியின் தவறான திசைக்கு வழிவகுக்கும். இந்தியாவில் பி.டி-ஹைபிரிட் தொழில்நுட்பம் பிழை நிறைந்த கொள்கையை பிரதிபலிக்கிறது. இது இந்தியாவில் பருத்தியின் மறுமலர்ச்சிக்கான உண்மையான தீர்வுகளை மறுப்பதற்கு வழிவகுத்தது. தீர்வு, ஹெச்.டி.எஸ்.எஸ் (உயர் அடர்த்தி குறுகிய பருவம்) முறையில் பி.டி அல்லாத நடவு, ஜி.எம்.ஓ பருத்தி அல்லாத, நமது பாரம்பர்ய தேசிய இனங்கள் அல்லது அமெரிக்க பருத்தி இனங்களின் தூய வரி வகைகளில் உள்ளது. பூமியின் நலனின் அக்கறை கொண்ட நாம் உயிர்வாழ்வதற்கும், நமது எஸ்.டி.ஜி (நிலைத்த) இலக்குகளை பூர்த்தி செய்வதற்கும் ஒரே வழி, வேளாண்மையையும் உணவு முறையையும் வேளாண் அறிவியலாக மாற்றுவதன் மூலமும், இதில் மீளுருவாக்கம், உயிர்ம, பயோடைனமிக், ஃபெர்மாகல்ச்சர் மற்றும் இயற்கை விவசாய முறைகள் மூலமுமே.
`உலகிற்கு அதிக உணவு தேவை’ என்ற ஆதாரமற்ற வாதங்களுடன் நல்ல மாற்றத்தைத் தடுக்கும் சொந்த நலன்களை நாம் ஒதுக்கித் தள்ளி, காலநிலை நெருக்கடியைக் கையாளும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயைக் குணப்படுத்த உதவும் கொள்கைகளை வடிவமைத்து செயல்படுத்த வேண்டும். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான இயற்கை வேளாண் அறிவியல் அணுகுமுறைகள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன என்பதற்குத் தேவையான அனைத்து அறிவியல் மற்றும் நடைமுறை ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன” என்றார்.
இந்தியாவில் ஒப்புதல் மற்றும் பரிசோதனை திட்டத்தில் வரிசையாக ஏராளமான மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள், வணிக சாகுபடிக்கான ஒழுங்குமுறை அனுமதிக்குக் காத்திருப்பில் உள்ளன. அதில் ஒரு புதிய பி.டி கத்திரிக்காய் (மஹிகோவின் பி.டி. EE-1 தவிர) டெல்லி பல்கலைக்கழகத்தின் களைக்கொல்லி சகிப்புத்தன்மை மரபணு கடுகு, மான்சாண்டோவின் களைக்கொல்லி சகிப்புத்தன்மை மற்றும் பி.டி ஜிஎம் மக்காச்சோளம் போன்றவை. இவை எல்லாம் நம் விவசாய வாழ்வாதாரங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், நுகர்வோரின் நலனுக்கும் கேடு விளைவிப்பவை. அவற்றை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும்" என்றார்.
- அனந்து,
ஒருங்கிணைப்பாளர்,
பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு.
source https://www.vikatan.com/government-and-politics/agriculture/why-bt-cotton-has-failed-in-india
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக