Ad

சனி, 3 அக்டோபர், 2020

`விஸ்வரூபமெடுத்த ஹத்ராஸ் சர்ச்சை!'- 2 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட மாவட்ட எல்லை

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பட்டியலின இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த இளம்பெண்ணின் குடும்பத்தாரையும் ஊர்மக்களையும் சந்திக்க பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி வருபவர்கள் மீது தடியடி போன்ற அடக்குமுறைகளை அம்மாநில போலீஸார் கையாண்டுவருகின்றனர்.

க்ரைம்

இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்திருக்கும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்தக் குழுவினர் அளித்திருக்கும் முதல் அறிக்கையின்படி ஹத்ராஸ் மாவட்ட எஸ்.பி விக்ராந்த் உட்பட ஏழு பேரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறார். அவர்களில் சம்பவம் நடந்தேறிய சந்தா காவல் நிலையத்தில் பணியாற்றிய மூன்று காவலர்களும், சாத்பாத் வட்ட காவல்துறை அதிகாரிகளான ராம், தினேஷ் குமார் வர்மா, துணை ஆய்வாளரான ஜக்வீர் சிங் மற்றும் தலைமைக் காவலர் மகேஷ் பால் ஆகியோர் அடங்குவர். சிறப்புப் புலனாய்வுக்குழு அளித்த பரிந்துரையின் பேரில் இவர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் Polygraph மற்றும் Narcotic சோதனை நடத்த அனுமதி வழங்கியிருக்கிறார்.

Also Read: உ.பி பாலியல் வன்கொடுமை: `என்னை போலீஸார் தரையில் தள்ளினர்...!’ - ஹத்ராஸ் செல்லும் வழியில் ராகுல் கைது #NowAtVikatan

சம்பவம் நடந்த கிராமத்துக்குள் நுழைவதற்கான இரண்டு வழிகளிலும் தடுப்புச் சுவர்களை அமைத்து தீவிரக் கண்காணிப்பில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். `கிராமத்துக்குள் நுழைய யார் முற்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீஸார் எச்சரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

போராட்டம்

திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த நால்வர் குழு எம்.பி டெரிக் ஓ பிரையன் தலைமையில் ஹத்ராஸ் செல்ல முயன்றபோது அம்மாவட்ட இணை மாஜிஸ்ட்ரேட் பிரேம் பிரகாஷ் மீனாவால் தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இது குறித்து ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி.பி அஜய் ஆனந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், `சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருப்பதால் ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால், வெளியாட்கள் மற்றும் அரசியல் கட்சியினர் செல்வதற்கான தடை நீடிக்கும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இரண்டு நாள்களுக்குப் பின்னர் ஹத்ராஸ் மாவட்ட எல்லைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஹத்ராஸ் மாவட்டத்துக்குள் ஊடகத்தினர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அம்மாவட்ட இணை மாஜிஸ்ட்ரேட் பிரேம் பிரகாஷ் மீனா தெரிவித்தார். அரசியல் கட்சியினர் உட்பட வெளியாட்கள் நுழைய விதிக்கப்பட்ட தடை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்தார். `பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை ஊடகங்கள் சந்திக்க எந்தவிதத் தடையுமில்லை’ என அவர் குறிப்பிட்டார்.



source https://www.vikatan.com/social-affairs/crime/media-allowed-enter-up-hathras-after-2-days

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக