Ad

சனி, 3 அக்டோபர், 2020

ஹத்ராஸ் சம்பவம்: `செய்தியாளரின் செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டதா?' - ஆடியோவால் புதிய சர்ச்சை

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதுகுத் தண்டவத்தில் பாதிப்பு, கை, கால்கள் செயலிழந்த நிலையில், டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட இளம்பெண்ணின் உடல் கடந்த 1-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் அவசர அவசரமாக எரிக்கப்பட்டது. குடும்பத்தினரின் ஒப்புதல் பெறாமல் போலீஸார் அந்தப் பெண்ணின் உடலைத் தகனம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

ஹத்ராஸ் சம்பவத்தை எதிர்த்து போராட்டம்

ஆனால், பெண்ணின் தந்தையின் ஒப்புதல் பெறப்பட்டபிறகே தகனம் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும், அந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்ததாகவும் உ.பி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Also Read: `விஸ்வரூபமெடுத்த ஹத்ராஸ் சர்ச்சை!'- 2 நாள்களுக்குப் பின் திறக்கப்பட்ட மாவட்ட எல்லை

இந்தநிலையில், ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரித்த இந்தியா டுடே தொலைக்காட்சியின் செய்தியாளர் தனுஸ்ரீ பாண்டே, அந்த இளம்பெண்ணின் சகோதரரிடம் பேசிய செல்போன் உரையாடல் வெளியான விவகாரம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ.க ஆதரவு இணையதளம் ஒன்றில் வெளியான அந்த செல்போன் உரையாடலி, செய்தியாளர் தனுஸ்ரீ பாண்டே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்ட வீடியோ ஒன்றை மேற்கோள் காட்டி பேசுகிறார்.

அந்த வீடியோவில், போலீஸ் விசாரணையில் திருப்தியில்லை என இளம்பெண்ணின் தந்தை கூறுவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைக்குறிப்பிட்டு பெண்ணின் சகோதரரிடம் பேசும் தனுஸ்ரீ, போலீஸார் விசாரணையில் திருப்தியில்லை என அவரது தந்தை கூறுவதை வீடியோ எடுத்து அனுப்புமாறு கேட்கிறார். அதற்கு அந்த இளம்பெண்ணின் சகோதரரும் ஒப்புதல் கொடுப்பதாக நீள்கிறது அந்த செல்போன் உரையாடல்.

இந்த செல்போன் உரையாடல் வெளியான விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. ஹத்ராஸ் சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளரின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்பட்டது ஏன் என உ.பி அரசுக்கு இந்தியா டுடே கேள்வி எழுப்பியுள்ளது. அதேநேரம், பத்திரிகையாளரின் செல்போன் உரையாடல் ஒட்டுக்கேட்கப்படவில்லை, அந்த இளம்பெண்ணின் சகோதரரின் போன்தான் ஒட்டுக்கேட்கப்பட்டது எனில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் செல்போன் உரையாடல் எந்த சட்டப்பிரிவின் கீழ் ஒட்டுக்கேட்கப்பட்டது என்றும் அந்த நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் குடும்பத்தினரின் செல்போனை அரசு ஏன் ஒட்டுக்கேட்க வேண்டும் எனவும் சர்ச்சையாகியிருக்கிறது இந்த விவகாரம்.

போலீஸ்

அதேநேரம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைக் கட்டாயப்படுத்தி அரசுக்கு எதிராக ஊடகங்கள் பேச வைக்க முயற்சி செய்வதாக பா.ஜ.க தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ள தகவல்களை ஊடகங்கள் திரித்துக் கூறுவதாகவும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக அந்தத் தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய பா.ஜ.க ஐ.டி விங்கைச் சேர்ந்த அமித் மால்வியா பேசுகையில், அந்த குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி தவறான செய்திகளை வெளியிட்டதாலேயே ஹத்ராஸுக்குச் செல்ல ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகக் கூறினார்.

Also Read: உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

மேலும், இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டிய மால்வியா, அவரின் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் வேறுவிதமாகக் கூறியிருப்பதாகவும் சொன்னார். விசாரணைக்குப் பின்னரே இதன் பின்னணியில் உள்ள உண்மை தெரியவரும் என்றும் அமித் மால்வியா குறிப்பிட்டிருக்கிறார்.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனில், எதற்காக போலீஸார் முதலில் பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பதாகக் குறிப்பிட்டனர் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இளம்பெண்ணை நான்கு பேர் எதற்காகக் கடத்திச் சென்றனர் என்றும் போலீஸார் அவசர அவசரமாக அதிகாலை 2.30 மணியளவில் சடலத்தைத் தகனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்றும் அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/hathras-case-controversy-irks-after-tv-reporters-phone-tap-audio-gone-viral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக