Ad

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

Doctor Vikatan: பிரசவ வலியா; சாதாரண வலியா; கண்டுபிடிக்க முடியுமா?

நான் 8 மாத கர்ப்பிணி. பிரசவ வலி குறித்த பயம் பெரிதாக இருக்கிறது. லேசான இடுப்புவலி வந்தாலே பிரசவ வலியாக இருக்குமோ என பயப்படுகிறேன். இதுதான் பிரசவ வலி என்பதை ஒரு பெண்ணால் சரியாக உணர முடியுமா?

- மஞ்சுளா (விகடன் இணையத்திலிருந்து)

ஜெயராணி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

``இடுப்புப் பகுதியில் ஏற்படுகிற வலியின் தன்மையை வைத்தே அது நிஜமான வலியா, பொய்யானதா என உணரலாம். இழுத்துப் பிடித்து பிறகு விடுவதும், மீண்டும் இழுத்துப் பிடிப்பதும் விடுவதுமாக வலி தொடரும். இது ஒவ்வொரு பத்து, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை தொடர்வது போல உணர்ந்தால் அது நிஜமான பிரசவ வலியாக இருக்கலாம். இந்த வலி எத்தனை நிமிடங்கள் நீடிக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணியுங்கள். அது முதலில் 20 நிமிடங்கள் வந்துவிட்டு, பிறகு 10 நிமிடங்கள், மீண்டும் 8 நிமிடங்கள் என மாறி மாறி வந்தால் பொய் வலியாக இருக்கலாம். ஒருவேளை உங்களால் இந்த வித்தியாசத்தை உணர முடியவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பிரசவ நாள் நெருங்கும்போது அடிவயிற்றில் ஏற்படுகிற வலி தொடர்ந்து 3 முதல் 4 மணி நேரம் நீடித்தால் அது பிரசவ வலியாக இருக்கலாம். ஒரேநாளில் இப்படி பலமுறை வலியை உணர்ந்தாலும் கர்ப்பப்பை வாயானது அகன்று குழந்தையை வெளியே அனுப்பத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

Also Read: Doctor Vikatan: இளம் பெண்களுக்கு இர்ரெகுலர் பீரியட்ஸ்; திருமணமானால் சரியாகிவிடுமா?

முதல்முறை வலி ஏற்பட்டதுமே ஏதேனும் ஆகிவிடுமோ என பயப்படத் தேவையில்லை. அந்த வலி தீவிரமாகி முழுமையான பிரசவ வலியாக மாறுவதற்குள் மருத்துவரை அணுகலாம்.

பனிக்குடம் உடைவது பிரசவ வலிக்கான அறிகுறியாக இருக்கும். பனிக்குடக் கசிவையோ, அந்தரங்க உறுப்புக் கசிவையோ உணர்ந்தாலும் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது. பிரசவம் நெருங்கும் நேரத்தில் திடீரென ரத்தப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு விரைய வேண்டும். பிரசவம் நெருங்கும் நேரத்தில் ஏற்படுகிற ரத்தப்போக்கு என்பது அவசரகால சிகிச்சையாகக் கருதப்பட்டு உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் வழக்கமான வாந்தி, மயக்கம், தலைவலி போன்று இல்லாமல் திடீரென உணரும் வித்தியாசமான, கடுமையான தலைவலியும் அசௌகர்யமும் கூட பிரசவம் நெருங்கிவிட்டதன் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் மருத்துவரைப் பாருங்கள். இவை தவிர சில மணி நேரத்துக்கு குழந்தையின் அசைவே இல்லாவிட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Pregnant Woman (Representational Image)

Also Read: Doctor Vikatan: முதல் கர்ப்பத்தைத் தள்ளிப்போட எது சிறந்த முறை?

பிரசவகால அனுபவங்கள் பெண்ணுக்குப் பெண் வேறுபடும். எனவே, மற்றவர்கள் சொல்கிற விஷயங்களை நினைத்து அனாவசிய பயமும் பதற்றமும் கொள்ள வேண்டாம். அதே நேரம் அசாதாரண அறிகுறி எதையும் அலட்சியமும் செய்ய வேண்டாம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?


source https://www.vikatan.com/health/healthy/how-to-differentiate-between-labor-pain-and-normal-pain

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக