Ad

செவ்வாய், 18 ஜனவரி, 2022

காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம்! - சர்ச்சையும்... பின்னணியும்!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் என்பதுதான் நேற்று காலை முதல் இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்த செய்தி. மாலையில் திட்டமிட்டபடி செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், ``ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்த விவகாரத்தில் பெங்களூரை சேர்ந்த தேவாஸ் மல்டிமீடியா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை தள்ளுபடி செய்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கப்பட்ட NCLAT (National Company Law Appellate Tribunal) உத்தரவையும் உறுதி செய்திருக்கிறது. தேவாஸ் மல்டிமீடியா இப்போது கலைக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனத்தை மூட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.” என நேற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து விவரித்தார்.

மேலும், ``உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காங்கிரஸ் தன் ஆட்சிக்காலத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான ஆதாரம்” என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார்.

மத்திய அரசு

அதோடு, ``இது ஒரு பெரிய அளவிலான மோசடி வழக்கு, பெரும்பாலும் இதுபோன்ற முக்கிய வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் தேர்தல் செய்திகளின் இடையே புதைந்து விடும். அப்படியில்லாமல் தேசிய நலன் கருதி, இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பேராசையால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார இழப்பைச் சந்திக்க இருந்தது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடியதன் பலனாக தற்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வரி செலுத்துவோரின் பணத்தைச் சேமிப்பதற்காக மத்திய பா.ஜ.க அரசு நடத்திய போராட்டத்தில் வெற்றி கிடைத்திருக்கிறது. நாம் மட்டும் போராடாமல் விட்டிருந்தால் காங்கிரஸ் செய்த இந்தத் தவற்றுக்கு நாம் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருந்திருக்கும்” எனக் காங்கிரஸ் மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

மத்திய நிதி அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், ஐந்து மாநிலத் தேர்தல்களை விடவும் முக்கியக் கவனம் பெற வேண்டியது என ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் ஒப்பந்தச் சர்ச்சை குறித்துப் பேசியிருக்கிறார். அந்த ஒப்பந்தம் குறித்தும் காங்கிரஸ் மீது நிர்மலா சீதாராமன் வைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணையில் இறங்கினோம்…

Also Read: Antrix-Devas: காங்கிரஸை பகிரங்கமாக தாக்கிய நிர்மலா சீதாராமன்; பின்னணியில் 5 மாநில தேர்தலா?

`ஆன்ட்ரிக்ஸ்-தேவாஸ் ஒப்பந்தம்’

இஸ்ரோவின் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் அலைக் கற்றைகள் ஆகியவற்றை ஒப்பந்த அடிப்படையில் சந்தைப்படுத்தப் பிற நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஆன்ட்ரிக்ஸ் எனும் வர்த்தக அமைப்பு. இஸ்ரோவின் முன்னாள் தலைவர்கள் மற்றும் ஊழியர்களால் நிர்வகிக்கப்படும் தனியார் நிறுவனம் தேவாஸ். இது 2004-ம் ஆண்டு முதல் பெங்களூருவை மையமாகக்கொண்டு தொடங்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. தேவாஸில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர். இஸ்ரோவின் சேவைகளை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக 2005-ம் ஆண்டு ஜனவரி 28-ம் தேதி இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு இடையே 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

இஸ்ரோ

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஜிசாட்-6, ஜிசாட்-6 ஏ ஆகிய செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி எழுபது மெஹாஹெர்ட்ஸ் எஸ்-பேண்டு (S-Band) அலைவரிசை மூலமாக இருபது ஆண்டுகளுக்கு செல்போன்களில் வீடியோ, எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட சேவைகளை வழங்கும் உரிமையை தேவாஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

ஒப்பந்தத்தில் சர்ச்சை

ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ் இடையே ஒப்பந்தம் போடப்பட்டதுமே மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. அதையடுத்து அந்த ஒப்பந்த விவகாரங்களை மத்திய பொது கணக்குத் தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வினடிப்படையில் தணிக்கை துறை வெளியிட்ட அறிக்கையில், தேவாஸ் நிறுவனத்துக்கு மிகவும் குறைந்த தொகைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்தது தெரியவந்தது. இதனால் இஸ்ரோவுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டது. மேலும், தேவாஸ் நிறுவனம் 578 கோடி ரூபாய் லாபம் பெறும் வகையில் இஸ்ரோ வர்த்தக அமைப்பு அதிகாரிகள் வழிவகுத்ததுள்ளதாகவும் புகார் எழுந்தது. மத்திய தணிக்கைத் துறையின் இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் 2011-ம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு ஆன்ட்ரிக்ஸ் மற்றும் தேவாஸ்-க்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தேவாஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான ஆன்ட்ரிக்ஸ் மீது சர்வதேச வர்த்தக கூட்டமைப்பில் வழக்கு தொடர்ந்தது.

மன்மோகன் சிங்

வழக்கை விசாரித்த சர்வதேச வர்த்தக கூட்டமைப்பு இஸ்ரோ சார்பில் 4,400 கோடி ரூபாய் தேவாஸ் நிறுவனத்துக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது. ஆனால் இந்த தொகை போதாது எனச் சர்வதேச தீர்ப்பாயங்களில் மேல் முறையீடு செய்தது தேவாஸ் நிறுவனம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த வரை இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையிலேயே இருந்து வந்தது.

ஆட்சிக்குக் வந்ததும் ஒப்பந்த விவகாரத்தை கையில் எடுத்த பா.ஜ.க

மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பா.ஜ.க வழக்கு விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ, மாதவன் நாயர் உள்ளிட்ட முன்னாள் இஸ்ரோ அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதேபோல தேவாஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த மேல்முறையீட்டில் தீர்ப்பு வழங்கிய தீர்ப்பாயம், ``மோசடி செய்வதற்காகவே சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது தான் தேவாஸ் நிறுவனம்” எனத் தீர்ப்பில் குறிப்பிட்டது. மேலும், தேவாஸ் நிறுவனத்தின் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தேவாஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ததோடு தேவாஸ் நிறுவனத்துக்கு இந்திய அரசு இழப்பீடு செலுத்தத் தேவையில்லை எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

மத்திய அரசு - உச்சநீதிமன்றம்

``ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி காங்கிரஸ் மீது பழியைச் சுமத்தவே மத்திய பா.ஜ.க அரசு திடீரென இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது” என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். அரசியல் தவிர்த்துப் பார்த்தால் காலம் கடந்து நடந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு உண்மையில் கவனிக்கப்பட வேண்டியதே எனவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்திருக்கின்றன.



source https://www.vikatan.com/government-and-politics/politics/antrix-devas-case-what-is-the-background-and-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக