Ad

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

டாம் அண்ட் ஜெர்ரி: கார்ட்டூனிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம் வாழ்வியல் பாடங்கள்!

வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் கார்ட்டூன் டாம் அண்ட் ஜெர்ரி. டாம் என்ற பூனையும் ஜெர்ரி என்ற எலியும் ஒன்றுக்கொன்று எதிராகச் செயல்படும் போராட்டம்தான் அதன் மையம். டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனில் இருந்து நாம் அறிய வேண்டிய பாடங்கள் உண்டு. அப்படிப்பட்ட சில வாழ்வியல் பாடங்கள் இதோ உங்களுக்காக...

டாம்

பொதுவான நியதிகளுக்கு நாம் விதிவிலக்காகலாம்

நாய் வந்தால் பூனை ஓடி ஒளிந்து கொள்ளும். பூனையைக் கண்டால் எலி நடுநடுங்கும். இவைதான் பொதுவான பிம்பங்கள். ஆனால் ஜெர்ரி என்ற எலி நேருக்கு நேர் நின்று டாமென்ற பூனைக்கு சவால்விடும். ஆக காலங்காலமாக இதுதான் நடந்து வந்திருக்கிறது என்று மரபு, விதி ஆகியவற்றின் மீது பழிபோட்டு அடங்கிப் போகும் வாழ்க்கையை நாம் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடந்த காலத்துக்குச் சென்று எதையும் சரிசெய்ய முடியாது. ஆனால் இப்போது தொடங்கி புது வரலாறு படைக்கலாம் என்கிற எண்ணத்தோடு செயல்படும்போது மாற்றங்கள் தானாக நடக்கும்.

உடல் வலிமையை விட அறிவாற்றல் வெற்றியைத் தரும்

டாம் எப்போதும் தன் உடல் வலிமையை நம்பி ஜெர்ரியை ஒடுக்கப் பார்க்கும். ஆனால் சின்னச் சின்ன தந்திரங்கள் மூலம் ஜெர்ரி மிக எளிதாக டாமின் வியூகங்களை உடைத்து வெற்றி பெறும். இதைத்தான் 'கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு' என்ற திரைப்பட பாடல் வரி உணர்த்துகிறது.

டாம் & ஜெர்ரி

யாருடைய அதிகாரமும் நிரந்தரமானதல்ல

டாம் பல விதங்களில் ஜெர்ரியை பயமுறுத்தும். ஆனால் அந்த இரண்டும் வசிக்கும் வீட்டின் எஜமானி பலவித கடினமான உத்தரவுகளை டாமுக்கு இடுவாள். விதியை நொந்தபடியே அந்த வேலைகளைச் செய்யும் டாம். நமக்கு கீழே உள்ளவர்களை பரிவோடு அணுக வேண்டும். இல்லையெனில் நமக்கு மேலே உள்ளவர்கள் நம்மை ஆட்டிப் படைக்க வாய்ப்பு அதிகம். இதைத்தான் 'கர்மா தியரி'யும் கூறுகிறது.

தொடர் முயற்சிகள் நிச்சயம் தேவை

முடிவு எப்படி இருந்தாலும் டாம் அண்ட் ஜெர்ரி ஒன்றுக்கொன்று எதிராகத் திட்டமிடுவதில் சளைப்பதே இல்லை. சில நொடிகளுக்குத் துவண்டு போனாலும் தங்களை புதுப்பித்துக் கொண்டு புதிய புதிய முயற்சிகளில் அவை ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தக் கோணத்தில் இவையும் நமக்கு ரோல் மாடல்கள்தான். தோல்வி காணும்போது இதனால் அந்தத் தோல்வி என்பதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதை சரி செய்து கொண்டு மீண்டும் களத்தில் இறங்குவதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.

தோல்வி நிரந்தரமல்ல

பகிர்தலே நிம்மதிக்கான வழி

ஒன்றுமில்லாத விஷயத்திற்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பாத்திரங்கள் டாம் மற்றும் ஜெர்ரி. இப்படி சண்டை போடாமல் சமாதானமாகக் கிடைத்ததை பகிர்ந்து கொண்டு வாழ்ந்திருந்தால் இவை நிம்மதியாக இருந்திருக்கும். இதைத்தான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று முன்னர் கூறி வைத்தார்கள். எதிராளியை எப்படி வீழ்த்துவது என்பதிலேயே கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தால் நம் நிம்மதி போவதோடு நாம் உருப்படியாகச் செய்ய வேண்டிய காரியங்களையும் செய்யாமல் இருந்து நம் வாழ்வின் முன்னேற்றத்தைக் கெடுத்துக்கொள்வோம்.



source https://www.vikatan.com/lifestyle/miscellaneous/some-life-lessons-from-tom-and-jerry-cartoon

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக