Ad

வெள்ளி, 28 ஜனவரி, 2022

Indo China war-ல் இந்திய வீரர்களின் உயிர்காத்த தமிழ் மருத்துவர் சேஷய்யா!

இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான பத்ம ஸ்ரீ, சென்னையைச் சேர்ந்த நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் வீராசாமி சேஷய்யாவிற்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் வீராசாமி சேஷய்யா

பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்குபவர்களுக்கு, மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கிச் சிறப்பித்துவருகிறது. கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள், சிவிலியன் விருதுகள் என வழங்கப்படும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வோர் ஆண்டு குடியரசு தின விழாவின்போது அறிவிக்கப்படும் இந்த விருதுகள், இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் வீராசாமி சேஷய்யா (மருத்துவம்), கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் (இலக்கியம்), எஸ்.தாமோதரன் (சமூக பணி), பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (கலை), சதிர் நடனக்கலைஞர் ஆர்.ஆர் முத்துகண்ணமாள் (கலை), கிளாரினெட் கலைஞர் ஏ.கே.சி நடராஜன் (கலை), பல்லேஷ் பஜந்திரி (கலை) ஆகிய 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள்
Gestational Diabetes Mellitus (GDM) என்று அழைக்கப்படும் கர்ப்பகால நீரிழிவு நோயைக் கண்டறியும் எளிய பரிசோதனை முறையைக் கண்டறிந்து, பரவலாக்கியதற்காக மருத்துவர் சேஷய்யாவுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.

சென்னை பெரம்பூரில் 10 மார்ச் 1938-ல் பிறந்த சேஷய்யா, மருத்துவரான அவரது அண்ணன் வீ. பெருமாளிடம் இருந்து ஊக்கம்பெற்று மருத்துவத் துறைக்குள் நுழைந்தார். சென்னை மருத்துவக் கல்லூரியில் 1957-ல் சேர்ந்த சேஷய்யா 1962-ல் படிப்பை நிறைவுசெய்தபோது, இந்திய-சீன போர் மூண்டிருந்தது. மருத்துவர்கள் ராணுவ சேவைக்கு வரவேண்டும் என்கிற அழைப்பைத் தொடர்ந்து, ராணுவ மருத்துவப் படையில் சேர்ந்தார் சேஷய்யா.

தன்னுடைய மருத்துவப் பணியை, போர்ச் சூழலில் ஜம்மு & காஷ்மீரிலிருந்து தொடங்கினார் சேஷய்யா. மூன்று ஆண்டுகள் தொடர் சேவையைத் தொடர்ந்து, 1965-ல் மூண்ட இந்தோ-பாகிஸ்தான் போரில் சேவையாற்றினார். ‘சமர் சேவா ஸ்டார் 1965’, ‘சைன்ய சேவா பதக்கம்’ ஆகிய விருதுகள் சேஷய்யாவின் ராணுவ சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டுள்ளன.

கேப்டன் சேஷய்யா & கேப்டன் சந்திரசேகரன் - 1963

1967-ல் சென்னை திரும்பிய சேஷய்யா, தமிழ்நாடு மருத்துவ சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்தியாவின் முதல் நீரிழிவு நோயியல் நிபுணராக உருவெடுத்த சேஷய்யா, 1979-ல் இந்தியாவிலேயே முதன்முறையாக நீரிழிவு நோய்க்கான தனி துறையை சென்னை மருத்துவக் கல்லூரியில் உருவாக்கினார். இதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் ஜி.பி.மோஸஸ், எம்.விஸ்வநாதன் ஆகியோரின் துணையுடன், 1980-ல் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான மருத்துவ மையத்தை சேஷய்யா நிறுவினார்.

அந்தக் காலகட்டத்தில் நீரிழிவு நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை முறைகள் அதிக நேரம் எடுக்கும், சிக்கல் நிறைந்த வழிமுறையாக இருந்தது. கர்ப்ப காலத்திலிருக்கும் பெண்களுக்கு இது மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில், Gestational Diabetes Mellitus (GDM) என்று அழைக்கப்படும் கர்ப்பகால நீரிழிவு நோயைக் கண்டறியும் எளிய பரிசோதனை முறையைக் கண்டறிந்து உலகுக்கு வழங்கினார் மருத்துவர் சேஷய்யா. Single Test Procedure என்று மருத்துவ உலகில் வழங்கப்படும் இந்த பரிசோதனை முறையை அங்கீகரித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...
Single Test Procedure-ஐக் கண்டறிந்து பரவலாக்கியதற்காக மருத்துவர் சேஷய்யாவுக்கு பல்வேறு அங்கீகாரங்கள் தேடி வந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது பிறந்த தினமான மார்ச் 10, ‘தேசிய கர்ப்ப கால நீரிழிவு நோய் விழிப்புணர்வு தின’மாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், எகிப்து ஆகிய நாடுகளிலும் இந்தப் பரிசோதனை முறை வழக்கத்தில் உள்ளது.

83 வயதாகும் மருத்துவர் சேஷய்யா, தன்னுடைய பங்களிப்பை முன்னிட்டு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டிருப்பது, கர்ப்ப கால நீரிழிவு நோய்க்கான விழிப்புணர்வை மேலும் அதிகப்படுத்தும் என்று நம்புகிறார்!



source https://www.vikatan.com/social-affairs/medicine/veteran-diabetologist-veerasamy-seshiah-conferred-padma-shri-award

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக