Ad

திங்கள், 3 ஜனவரி, 2022

பெண் உடலைப் பேசுவோம் - 8 - விருப்பமில்லாத இணை... வேறோர் ஆணிடம் ஈர்ப்பு... உளவியலும் தீர்வுகளும்...

‘நீங்க தொட்டா கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு’ - விருப்பமில்லாத திருமணமும் மனதுக்குப் பிடிக்காத ஆணும் தன் வாழ்க்கையில் நுழைந்தால் ஒரு பெண் எப்படி உணர்வாள் என்பதை விளக்கும் ‘மெளனராகம்' பட வசனம் இது. சினிமா என்பதால், கிளைமாக்ஸில் நாயகி, நாயகனை விரும்ப ஆரம்பித்து விடுவார். ஆனால், நிஜத்தில் பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை என்பதற்கு, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட தற்கொலைகள் தொடர்பான அறிக்கையே ஆதாரம்.

ஷாலினி

இந்த அறிக்கையின்படி, 2020-ல் நிகழ்ந்த தற்கொலைகளில் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை மட்டும் 14.6 சதவிகிதம். சென்ற வருடத்தில் மட்டும் 22,372 குடும்பத்தலைவிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு 25 நிமிடத்துக்கும் ஒரு குடும்பத்தலைவி தற்கொலை செய்துகொள்வதாகச் சொல்கிறது தேசிய குற்ற ஆவணக் காப்பகம். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தற்கொலை தரவுகளைப் பதிவு செய்யத் தொடங்கிய 1997-லிருந்தே ஆண்டுதோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தலைவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இதற்கான காரணங்களாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பெரும்பாலும் சுட்டுவது குடும்ப வன்முறையையும் விருப்பமில்லாத திருமணத்தையும்தான்.

‘`பெண்கள் தம் மனதையும் உடலையும் பகிர்ந்துகொள்ளும் துணை, அவர் களுக்குப் பிடிக்காமல் இருப்பது பெரும் கொடுமை. ‘நாங்க உனக்கு நல்லதுதான் செய்வோம்’, ‘கல்யாணமாகிட்டா எல்லாம் சரியாகிடும்’ என்றெல்லாம் சொல்லி, அவளுக்குப் பிடிக்காத ஆணுடன் சேர்ப்பது பெண் மீது நடத்தப் படுகிற ஆகப்பெரும் வன்முறை’’ என்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

‘`பெரும்பாலான பெண்கள் இதைப் பெற்றோர்களுக்காக சகித்துக் கொள்கிறார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு, அவர்களுக்காகச் சகித்துக் கொள்கிறார்கள். துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, கல்வி மற்றும் பொருளாதார சுதந்திரம் வழியாக மறுபடியும் பெண்கள் மீட்டெடுப்பது மட்டுமே இதற்கான தீர்வு’’ என்றவர், திருமணம் தாண்டிய உறவை நோக்கி பெண்களைத் தள்ளும் விஷயங்கள் பற்றி பேசுகிறார்.

‘` ‘கணவன் தன் மேல அன்பு செலுத்தணும்; தனக்காக நேரம் ஒதுக்கணும்’ என்ற பெரும் எதிர்பார்ப்பு பெண்களிடம் உண்டு. மற்ற நாடுகளில் பல காலமாக டேட்டிங் கலாசாரம் இருப்பதால், பெண் மனம் பற்றி ஓரளவுக்காவது புரிந்துகொண்டு தான் திருமணத்தில் இணைகிறார்கள். பெரும்பான்மை இந்தியக் கணவர்களோ, மனைவியைப் பயன்பாட்டுப் பொருள்களில் ஒன்றாகத்தான் இன்னமும் நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். ‘என் அம்மா இப்படித்தானே வாழ்ந் தாங்க’ என்று அதை நியாயப்படுத்தவும் செய் கிறார்கள். ‘அன்பு செலுத்து; எனக்கு நேரம் ஒதுக்கு’ என்கிற மனைவியை ‘ரொம்ப எதிர்பார்க்கிறா’ என்று கடந்துவிடுகிறார்கள்.

அகநானூற்றை வாசித்தால், பாடல்கள் அத்தனை யும் தலைவன், தலைவி சர்ச்சையாகவே இருப்பதை கவனிக்கலாம். அந்தளவுக்கு அந்தக் காலத்திலிருந்தே பெரும்பான்மை பெண்கள் அதிருப்தியான திருமண வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக் கிறார்கள். அந்த அதிருப்தியைத் தெரிந்துகொண்டு காய் நகர்த்துகிற ஆண்களின் வார்த்தை ஜாலங்களில் யோசிக்காமல் சிக்கிக்கொள்கிறார்கள் பெண்கள். ‘தங்களுடைய பதின்பருவத்தில் மனதில் வடித்து வைத்த ஆண் இவன்தான்போல’ என்கிற உளவியல் குழப்பமும் இதற்கொரு காரணம். பெரும்பாலும் எமோஷனல் தேவைக்காகவே பெண்கள் இந்த இக்கட்டில் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதால், இதில் வயது விதிவிலக்கு இல்லை என்பதை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

இப்படியோர் ஈர்ப்பு தனக்கு வருகிறது என்பது தெரிந்தவுடன், அதுபற்றி பெண்கள் தனக்கு நம்பிக்கையானவர்களிடமோ அல்லது உளவியல் நிபுணரிடமோ கலந்து பேசி அதிலிருந்து மீண்டு வந்துவிட வேண்டும். ஒன்றைவிட ஒன்றைச் சிறந்த தாக நம்புவது மனித மனதின் இயல்புதான் என்பதால், ஈர்ப்பு வந்ததற்கு வெட்கப்பட வேண்டிய தில்லை. ஆண்களைப்போலவே பெண்களின் உலகமும் விரிந்துகொண்டே வருகிறது. இவ்வளவு காலமாக ‘கணவன் மனம் கோணாது நடந்துகொள்ள வேண்டும்’ என்று பெண்களுக்குச் சொல்லிக் கொடுத்ததுபோல, ‘மனைவியின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும்’ என்று ஆண்களுக்கும் சொல்லித் தர ஆரம்பிப்போம்’’ என்கிறார் ஷாலினி.

- பேசுவோம்...



source https://www.vikatan.com/lifestyle/women/series-about-women-body-and-health-8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக