75-வது குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கக் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் விவகாரம் தேசிய அளவில் அனலைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், ``மத்திய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இடம்பெறும். தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும்'' என உத்தரவிட்டு அதிரடி காட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Also Read: குடியரசு தின விழா: தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்?! - முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் பதில்
இதையடுத்து, தமிழக பா.ஜ.க தலைவர்கள் பலரும், `அலங்கார ஊர்தி விவகாரத்தில், மக்களிடம் உண்மையை மறைத்து அரசியலாக்கி வருகிறது தி.மு.க' எனக் கொதித்தெழுந்தனர். பா.ஜ.க-வின் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், ``கொரோனா கட்டுப்பாடுகள், பாதுகாப்பு காரணம், பார்வையாளர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளை முடிப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ஊர்தி மட்டுமல்ல, பா.ஜ.க ஆளும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெற அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
அலங்கார ஊர்திகளை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழுவே தேர்வு செய்திருக்கிறது. இந்த உண்மைகளை மறைத்து, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாக தி.மு.க அரசின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன'' என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ``குடியரசு தின அணிவகுப்பில், நரேந்திர மோடி அரசு வந்த பின்னர், 5 முறை தமிழகத்திற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வேறு எந்த மாநிலத்துக்கும் இத்தனை வாய்ப்புகள் கிடைத்திருக்காது. குடியரசு அரசு தின அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்வது மத்திய அரசு அல்ல; பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் வல்லுநர் குழுதான் முடிவு செய்யும். ஆனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன'' என்று கூறியிருந்தார் அண்ணாமலை.
இது குறித்து தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் சிலர், ``தென்னிந்தியாவில், பா.ஜ.க ஆளும் கர்நாடக மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த காலங்களில் தமிழகத்தின் குடியரசு தின அலங்கார ஊர்திகளில், கோயில் கோபுரங்கள் இடம்பெற்றிருந்ததால், அதை அனுமதித்தார்கள். இந்த முறை செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், புரட்சிக் கவி பாரதியார் உள்ளிட்டோரின் படங்கள் இடம்பெற்றிருந்தால் நிராகரித்திருக்கிறார்கள். கேரள மாநிலத்தின் அலங்கார ஊர்தியில், சாதி எதிர்ப்பு சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. ஆனால், நாராயண குருவுக்குப் பதிலாக அத்வைத தத்துவத்தை முன்னிறுத்திய ஆதி சங்கரரின் படத்தை இடம்பெறச் செய்யுமாறு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது மத்தியப் பாதுகாப்புத் துறையின் வல்லுநர் குழு. மத்திய பா.ஜ.க அரசு ஒரு மதம் சார்ந்தே இயங்குகிறது என்பது இதிலிருந்தே தெரிகிறது.
வட இந்தியாதான் ஒட்டுமொத்த இந்தியா என்று உலகிற்குக் காட்டத்தான் இந்த நிராகரிப்புகள். ஐந்து மாநிலங்களில் மட்டுமே இப்போது தேர்தல் வருவதால், எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மற்றைய மாநிலங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள். ஒருவேளை தமிழகத்தில் தேர்தல் வருவதாக இருந்தால், நிச்சயம் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால், வேலுநாச்சியார், பாரதியாரின் பெருமைகளைப் பிரதமர் மோடியே பறைசாற்றியிருந்தார். அதுவும் வேலுநாச்சியார் பற்றி தமிழில் பதிவிட்டிருந்தார். ஆனால், இப்போது 75-வது குடியரசு தின விழாவில் அவர்களது படங்கள்கொண்ட ஊர்தி நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
மோடியும், அமித் ஷாவும் வேலுநாச்சியார் குறித்துப் பதிவிட்டதற்குப் பின்னால் சாதி அரசியல் இருந்ததைப் பலரும் சுட்டிக் காட்டினர். இப்போது வேலுநாச்சியார் படம் கொண்ட அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்ட செய்தி தீயெனப் பரவியதும், பதறியடித்துக் கொண்டு விளக்கமளித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் அண்ணாமலை. இந்த விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவது பா.ஜ.கதானே தவிர தி.மு.க இல்லை. இதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்'' என்கிறார்கள்.
பா.ஜ.க-வினரோ, ``எதற்கெடுத்தாலும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் குறை சொல்வதையே வேலையாக வைத்திருக்கின்றன எதிர்க்கட்சிகள். அலங்கார ஊர்தி தேர்வுக்காக, என்னென்ன புகைப்படங்கள்கொண்ட வாகனங்களின் மாதிரிகள் வந்தது என்பதுகூட பிரதமருக்குத் தெரிந்திருக்காது. வல்லுநர் குழு தேர்வு செய்யும் என்பதை மக்களிடம் மறைத்து, பா.ஜ.க குறித்து அவதூறு பரப்புகிறது தி.மு.க. பா.ஜ.க, எப்போதுமே தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கும் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். பிரதமர், உலக அரங்கு தொடங்கி உள்ளூர் நிகழ்ச்சி வரை திருக்குறளைத் தனது உரையில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அதனால் தி.மு.க-வின் பொய்யுரைகள் மக்களிடம் பலிக்காது'' என்கின்றனர்.
இது குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தில் நாட்டு விடுதலைக்காகப் போராடிய வேலுநாச்சியாரையும், வ.உ.சிதம்பரானாரையும் நிராகரித்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர். இவர்கள் இருவரின் படங்கள் அடங்கிய மேற்கு வங்க அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்புமிக்க 75-வது குடியரசு தின விழாவில், முக்கியமான தலைவர்களின் பெயர்களை மறைப்பது போல இருக்கிறது மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகள். என்னதான் ஊர்திகளைத் தேர்வு செய்வது வல்லுநர் குழுதான் என்று சொல்லி பா.ஜ.க தப்பிக்கப் பார்த்தாலும், இந்த விவகாரத்தில் பா.ஜ.க-வின் தலையீடு நிச்சயம் இருக்கும்.
Also Read: பாஜக - 2; காங்கிரஸ், ஆம் ஆத்மி எத்தனை? - ஐந்து மாநிலத் தேர்தல் களத்தில் முந்துவது யார்?!
தேர்தல் நடக்கவிருக்கும் ஐந்து மாநிலங்களில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தவிர மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், நான்கு மாநிலங்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களாக இருக்கின்றன. மேலும், சில மாநிலங்களின் அலங்கார ஊர்திகளில் மதம் சார்ந்து சில மாற்றங்களைச் செய்ய வல்லுநர் குழு அறிவுறுத்தியதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் பா.ஜ.க அரசியல் ஆதாயம் தேட நினைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. அதே நேரத்தில், அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளும் கட்சிகளும், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து தங்களது மைலேஜை கூட்டிக் கொள்ளத் தவறவில்லை'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-vs-bjp-in-republic-day-tableaux-rejection-issue
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக