`சார்பட்டா பரம்பரை', `மகாமுனி' உள்ளிட்ட படங்களில் நடித்த கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜி.எம்.சுந்தர். பல வருடங்களாக திரைத்துறையில் நடிகராக இருப்பவர். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் `வலிமை' படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சினிமா அனுபவம் குறித்தும், வலிமை படம் குறித்தும் அவரிடம் பேசினோம்.
"வலிமை பட வாய்ப்பு எப்படி அமைஞ்சது?"
" `மகாமுனி' படத்துல நான் பண்ண போலீஸ் கதாபாத்திரம்தான் இதுக்குக் காரணம். `மகாமுனி' இயக்குநர் சாந்தக்குமார், `மௌனகுரு' படத்திற்கு பிறகு ஏனோ ரொம்ப நாள் எந்த படமும் இயக்கல. ஒரு நாள் ஃபோன் பண்ணி, ஒரு படம் பண்றேன், நீங்களும் நடிக்கணும். ஆஃபீஸ் வாங்கனு சொன்னார். அங்கே போய் கதை, அதுல என்னோட கதாபாத்திரம் எது-னு எல்லாம் பேசுனப்புறம் மேக் அப் டெஸ்ட். மேக் அப் டெஸ்ட்-க்கு அப்புறம் அவரு என்னிடம் நீங்க வேற கதாபாத்திரம் பண்ணுங்கனு சொன்னாரு. அது நான் மகாமுனி படத்துல பண்ண போலீஸ் கேரக்டர். ஏனோ அந்த கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு அவருக்குத் தோனிருக்கு. நானும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிச்சேன். குறிப்பா, கிளைமாக்ஸில் ஒரு காட்சி வரும்.
ரொம்பவும் மோசமான கேரக்டரான போலீஸ் ஒரு ஜோக் சொல்வதுதான் அந்த சீன். இந்தக் காட்சியை இயக்குநர் எதுக்கு வெச்சுருப்பார்-னு யோசிச்சுட்டே நானும் பிராக்டீஸ் பண்ணேன். அந்தக் காட்சியை நல்லா பண்ணனும்னு திரும்பத் திரும்ப அதை உள்வாங்க முயற்சி பண்ணேன். கேரவனிலேயே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பிராக்டீஸ் பண்ணேன். அப்போதான் அந்த சீனோட முக்கியத்துவம் எனக்கு புரிஞ்சது. போலீஸ் கதாபாத்திரத்தின் எசன்ஸ் அந்தக் காட்சியில் வெளியாகும். நானும் அதை நல்லாவே பண்ணேன். சாந்தகுமாருக்கு தான் நன்றி சொல்லணும். மகாமுனி படம் பார்த்த ஹெச்.வினோத் என்னை அழைத்துப் பேசினார். அவரிடம் என் நம்பர் இல்லை. நலனிடம் நம்பர் வாங்கிதான் அழைத்தார். வலிமை-ல ஒரு கதாபாத்திரம் நீங்க பண்ணணும்னு கேட்டார். நானும் கண்டிப்பா சார், நான் பண்றேன்னு சொன்னேன். இப்படித்தான் வலிமை வாய்ப்பு எனக்கு வந்தது."
"திரைப்படத் துறையில இருக்கீங்க. அஜித் பத்தி நிறைய கேள்விப்பட்டிருப்பீங்க. முதல்முறையா அவரோட சேந்து ஒரு படம் பண்ணின அனுபவம் எப்படி இருந்தது? நீங்க கேளவிப்பட்டதுக்கும், நேர்ல பார்த்ததுக்கும் என்ன வித்தியாசம்?"
"வித்தியாசம் அப்படின்னு எதும் சொல்ல முடியாது. கேள்விப்பட்டதைவிட அவரு ஸ்பெஷல். அஜித் ரொம்ப நல்லவர், ஜென்டில்மேன்னு கேள்விப்பட்டிருக்கோம். அதை நேரில் பார்க்கும், உணரும் வாய்ப்பு எனக்கு கெடச்சது. முதல்முறை அவர பாக்குறப்போ, “ஐ ஆம் ஹானர்டு டு வொர்க் வித் யூ சார்” -னு சொன்னேன். அவரும் “ஐ ஆம் ஆல்ஸோ ஹானர்டு டு வர்க் வித் யூ” -னு சொன்னாரு. நான் ஏதோ சின்ன நடிகர் நீங்களும், டைரக்டரும் வாய்ப்பு குடுத்ததுக்கு நன்றி சார் என்றேன். எனக்கும் ஒரு இயக்குநர் வாய்ப்பு கொடுத்ததால்தான் நானும் இந்த இடத்தில் இருக்கேனு சொன்னார். அவரைப் பத்தி நாம் கேள்விப்படுவதைவிட 100 மடங்கு சிறப்பு வாய்ந்தவர் அஜித்.
வலிமை பட மேக்கிங் வீடியோ ஒன்னு ரிலீஸ் பண்ணோம். அதுல காந்தி சொன்ன வாசகம் ஒன்னு வரும். “We may stumble and fall but shall rise again; it should be enough if we did not run away from the battle” - அஜித், ஹெச்.வினோத் இருவரையும் பத்தி தெரிஞ்சுக்க இந்த வாசகம் போதும். ரெண்டு பேருமே ஃபைட்டர்ஸ். அஜித்திற்கு உடலில் பல காயங்கள். சர்ஜரிக்குப் பிறகும் கூட அவரு அவ்ளோ உழைக்கிறார். பல கஷ்டங்களைக் கடந்து கம்பேக் கொடுத்திருக்கார். ரொம்ப இன்ஸ்பயரிங் ஆன மனிதர்."
"அஜித்துக்கும் - வினோத்துக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி பத்தி சொல்லுங்க?"
"ரெண்டு பேருமே கிரேட் மைன்ட்ஸ். இருவருமே பல ஸட்ரகில்ஸ்-ஐ கடந்து வந்தவங்க. தெளிவான சிந்தனை உடையவர்கள். ஸாக்ரடீஸ் சொன்னதுபோல ஒரு இன்டென்ஷனோடு செயலில் இறங்குபவர்கள். டெடிகேஷனோட வொர்க் பண்ணுவாங்க."
"நிறைய இயக்குநர்கள் கிட்ட படம் பண்ணிருக்கீங்க. ஹெச்.வினோத்திடம் நீங்கள் கவனித்த தனித்துவமான விஷயம் என்ன?"
"மிகத் தெளிவான சிந்தனை உடையவர். அதிகம் பேச மாட்டார். பத்து நிமிடம் அவரு பக்கத்துலயே இருந்தாலும் ரெண்டு வரிதான் நம்மிடம் பேசியிருப்பார். சதுரங்க வேட்டை வெளியானபோதே அவரிடம் போய் சான்ஸ் கேட்டேன். அப்போ எதுவும் கிடைக்கலை. இப்போ அவராவே கூப்பிட்டு வாய்ப்பு தந்தார். இந்த கதாபாத்திரத்துக்கு இவர் செட் ஆவார்-னு அவருக்குத் தோனணும்."
"வலிமை படத்தின்மீது என்ன எதிர்பார்ப்பு வெச்சுருக்கீங்க?"
"இந்த கேள்வி நீங்க ஃபேன்ஸ்கிட்டதான் கேக்கணும். அவங்கதான் நிறைய எதிர்பார்ப்பு வெச்சிருக்காங்க. இந்தப் படத்துல நிறைய பேரோட உழைப்பு இருக்கு. எல்லாரும் இந்தப் படத்தை பெரிதும் நம்பி இருக்கோம்."
"நீங்களும் அஜித்தும் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. அது பத்தி சொல்லுங்க?"
"பட ஷீட்டிங் முடிஞ்சு பேக்கப் பண்ற சமயம். இரவு 3 மணி இருக்கும். அவர் கேரவனுக்குப் போய் பேசினேன். உங்களோட நடிச்ச அனுபவம் நல்லா இருந்தது. நன்றி சார்னு சொல்லிட்டு இருந்தேன். அவர் ஒரு ஃபோட்டோ எடுக்கலாம் என்றார். அப்படி எடுத்ததுதான் அந்தப் புகைப்படம். ரெண்டு பேருமே டயர்டா தான் இருந்தோம், ஆனாலும் சிரிச்ச முகமா புகைப்படம் எடுக்க வந்தார்"
"மலையாளத்தில் `ஜன கன மன' படம் பண்ணி இருக்கீங்க. அது எப்படி வந்துருக்கு?"
"ப்ரித்விராஜ் சார் ஹீரோவா நடிச்சிருக்கார். படம் ஒரு சீக்வல் போல இருக்கும். ப்ரித்வி போர்ஷனுக்குப் பிறகு சூரஜ் போர்ஷன் வரும். இந்தப் படத்தோட இயக்குநர் சார்பட்டா பரம்பரை பாத்துட்டு என்னைக் கூப்பிட்டார். “ஜனகனமன” படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. பான்-இந்தியா லெவல்ல படம் பண்றாங்க. எனக்கு அதில் ஒரு ரோல் கிடைச்சதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் ஓப்பனிங்கே எனக்கு இந்தப் படம் அமைஞ்சது ரொம்ப சிறப்பான ஒரு விஷயமா பாக்கறேன்."
"ப்ரித்விராஜ் சாரோட நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது?"
"நல்ல அனுபவமாக இருந்தது. சார்பட்டா பரம்பரை படம் அவர் பார்த்திருக்கிறார். என்னோட நடிப்பப் பாராட்டவும் செஞ்சார். சூரஜ் சாரும் என்னை வாழ்த்தினார்."
"2021-ல மூன்று படங்கள் பண்ணீங்க மூன்றுமே நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றன."
"ரொம்ப நன்றி. மண்டேலா ஆகட்டும், சார்பட்டா பரம்பரை ஆகட்டும் ஓடிடி-யில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. ரைட்டர் இன்னும் திரையரங்குகள்-ல ஓடிட்டு இருக்கு. ஒரு நடிகனா எனக்கு நல்ல ரோல் கிடைச்சது, நானும் அதை சிறப்பா பண்ணேன் என்கிற திருப்தி போதும்."
source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-gm-sundar-interview-about-valimai-movie-and-his-career
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக