Ad

திங்கள், 31 ஜனவரி, 2022

’புனிதக்குருதி’ என்றழைப்போம்! #MyVikatan

'பெண்கள அடிமை மாதிரி நடத்துறத மொத நிறுத்துங்கடா... புனிதக்குருதிங்கற பேருலாம் அப்புறம் வைச்சுக்கலாம்...' - சிலருடைய கடுப்பான மைண்ட் வாய்ஸை உணர முடிகிறது. இருந்தாலும் புனிதக்குருதி குறித்து சில கருத்துகளை பதிவு செய்கிறேன்.

ஆனந்த விகடனில் வெளியான எழுத்தாளர் நரனின் "வாரணாசி" சிறுகதையை படிக்க நேர்ந்தது. அந்தச் சிறுகதையின் முடிவில் "நான் மாதவிலக்கு அடைந்துள்ளேன்... ஆதலால் கடவுள் சம்பந்தப்பட்ட காரியங்களில் ஈடுபடக் கூடாது... தீட்டு ஆகிவிடும்..." என பெண் ஒருவர் சொல்ல, அவருக்குத் துணையாக இருக்கும் நட்ராஜ் என்ற கதாபாத்திரம் "அந்தக் கடவுளும் மாதவிடாய் ரத்தத்தில் இருந்துதான் உருவாகி இருக்க கூடும்... ஒன்றும் தீட்டில்லை..." என்று சொல்வார். இந்த வார்த்தைகளை படித்ததும் எழுத்தாளர் நரன் மீது பெரும் மதிப்பு உண்டானது. எவ்வளவு உண்மையான மனிதநேயமுள்ள வரிகள் இவை. மாதவிடாய் ரத்தத்தை "தீட்டு" என கருதும் அனைவரிடமும் இந்தச் சிறுகதையை பற்றி பேச வேண்டும் போல் இருந்தது.

அதேபோல பெரியாரின் தீவிர பற்றாளரான "மூடர்கூடம்" திரைப்பட இயக்குனர் நவீன் ஒரு பேட்டியில், "தீட்டு என்பது ரொம்ப அபத்தமான ஒரு வார்த்தை... மாதவிடாய் சுழற்சி என்பது ரொம்ப முக்கியமான ஒன்று. அந்த இயற்கை நிகழ்வு நடக்கவில்லை என்றால் நாம் எல்லோரும் பிறந்திருக்கவே மாட்டோம்... அப்படி இருக்கையில் அதை எதோ ரொம்ப அசிங்கமான ஒன்றாக நினைப்பது முட்டாள்தனம்" என்று கூறியிருந்தார். நரன், நவீன் இருவருடைய கருத்துகளையும் நினைக்கும்போது மாதவிடாய் ரத்தத்தை "புனிதக்குருதி" என்று அழைப்பது சரியான விஷயம்தான் என தோன்றுகிறது.

வாரணாசி

சில வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் வெளியான "ஆண்பால் பெண்பால் அன்பால்" என்ற பாலின சமத்துவ கட்டுரை தொடரில் இயக்குனர் வசந்தபாலன் எழுதிய கட்டுரையில் பெண்களின் மாதவிடாய் பிரச்னை குறித்து பேசப்பட்டிருக்கும். அதில் வசந்தபாலன் தனது இளம்வயதில் மாதவிடாய் குறித்து போதிய புரிதல் இல்லாததை எழுதியிருந்தார். அதை படிக்கும்போது "சிவப்பு மஞ்சள் பச்சை" திரைப்படக் காட்சியும், "அணிலாடும் முன்றில்" குறும்படக் காட்சியும் நினைவுக்கு வந்தது.

இயக்குனர் சசியின் "சிவப்பு மஞ்சள் பச்சை" என்கிற திரைப்படத்தில் ஜீவியின் அக்காவாக நடித்த சிறுமி வயதுக்கு வந்துவிடுவாள். அப்போது சிறுவயது ஜீவியாக நடித்த சிறுவன் "அக்காவுக்கு என்ன ஆச்சு?" எனக் கேட்க, அத்தையாக வரும் நக்கலைட்ஸ் தனம் அம்மாள் "அத எப்படிடா சொல்வேன்... அவ இனிமே மாசம் மாசம் அனுபவிக்க போகும் துன்பத்த என்னானு சொல்வேன்..." என்று பதில் கூறி வருந்துவார்.

இயக்குனர் ஜெய்லட்சுமி என்பவர் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக எடுத்த "அணிலாடும் முன்றில்" என்ற குறும்படத்தில் வடஇந்தியர்கள் வசிக்கும் வீட்டிற்கு வீட்டு வேலைக்காக ஒரு சிறுமி செல்வாள். சரியாக அந்த தினத்தில் அந்த வீட்டில் கிருஷ்ணர் பூஜை நடக்கும். அப்போது பாத்ரூம் கழுவ போகும் சிறுமி அந்த இடத்திலயே வயதுக்கு வந்துவிடுவாள். அந்த சிறுமியின் ரத்தம் வீட்டு தரையில் பட்டுவிடும். உடனே அந்த வீட்டில் உள்ள பெண்கள் "பூஜை நடக்கும் நேரத்தில் இந்த வீடு அசுத்தமாகிவிட்டது" என்பார்கள். அந்தச் சிறுமியை குற்றவாளியை போல பார்ப்பார்கள். இது இயல்பான ஒன்று என அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நிஜ சமூகமும் இப்படித்தான் இருக்கிறது.

நான் சிறுவயதில் டியூசன் சென்ற வீட்டில் டியூசன் அக்கா மாதவிடாய் அடைந்துவிட்டால் அவரின் குடும்பத்தினர் அவரை தனிமைப்படுத்திவிடுவார்கள். ஏன் அவரை தனிமைப்படுத்தினீர்கள் எனக் கேட்டால் "வீட்டுக்கு தூரமாயிட்டா... அவள தொட்டா தீட்டு ஆயிடும்... அதான்..." என்பார்கள். இப்போதும் அதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. தீட்டு என்ற வார்த்தைக்குள் எதோ அறிவியல் காரணங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

mensus

அம்மாவும் மனைவியும் மாதவிடாய் அடைவதை பெரிதாக கண்டுகொள்ளாத நமக்கு மகளின் மாதவிடாய் நேரத்தில் மனம் கலங்கவே செய்கிறது. பெண்களுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்... பெண்ணாக பிறந்தவர்கள் ரொம்பவே பாவம்... என்று வருத்தம் ஏற்படுகிறது. இன்னும் சிலர் நாப்கினை பேப்பரில் சுருட்டி மறைத்து வைத்துதான் வாங்கி செல்கிறார்கள். அதேபோல இந்தக் காலத்திலும் பெண்கள் சிலர் கிழிந்த பாவாடை துணியைதான் உபயோகின்றனர். பொன்.விமலா எழுதிய ’மரமல்லி’ சிறுகதைத் தொகுப்பில் உள்ள "தீட்டு" என்கிற சிறுகதையை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

ஒரு பெண் மாதவிடாய் அடைந்தால் "ஐய ச்சீ..." என்று நினைப்பதை, இனிமேலாவது தவிர்ப்போம்.



source https://www.vikatan.com/news/healthy/society-thoughts-mensus

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக