Ad

திங்கள், 24 ஜனவரி, 2022

`நாற்பதே தொகுதி; கட்சித்தாவியதோ 60% உறுப்பினர்கள்... தவிக்கும் கோவா! - இந்த தேர்தலில் நிலை என்ன?

கட்சித்தாவல் தடைச் சட்டம் 1985-ம் ஆண்டு அரசியல் சாசனத்தின் 10வது அட்டவணையின் கீழ் இணைத்துள்ளது. அதன் நோக்கம், உறுப்பினர்கள் கட்சி மாறுவதைத் தடுத்து ஆட்சியின் உறுதித்தன்மையை வலுப்படுத்துவதாக அமைந்தது. 1967 பொதுத் தேர்தலுக்குப் பிறகு பல மாநில அரசுகள் எம்.எல்.ஏக்களால் கவிழ்க்கப்பட்டதன் விளைவாக இச்சட்டம் உருவாக்கப்பட்டது. கட்சித்தாவல் என்பது அரசியலில் சாதாரணமானது என்றாலும்கூட, தனிப்பட்ட வகையில் ஒரு கட்சியில் இருந்து வெற்றிபெற்றுவிட்டு மற்றொரு கட்சிக்கு மாறும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு சிக்கல்களை உண்டாக்குகிறது கட்சித்தாவல் தடைச் சட்டம்.

பிஜேபி

ஆனால், கோவா மாநிலத்தில் ஐந்து ஆண்டுக் காலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 60% எம்.எல்.ஏ க்கள் கட்சித் தாவியுள்ளனர். 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில், 2017-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அங்கு ஆட்சி அமைக்க 21 தொகுதிகளை வென்றிருக்க வேண்டும். ஆனால் கோவாவில் ஆட்சி அமைத்த பா.ஜ.க வென்றது 13 தொகுதிதான்.

ஆனாலும் ஆட்சி அமைத்ததற்கான காரணம், பா.ஜ.க கட்சிக்குத் தாவிய பல எம்.எல்.ஏ-க்கள் தான். 17 தொகுதிகள் வென்ற காங்கிரஸிலிருந்து கோவா சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த சந்திரகாந்த் கவ்லேகர் தலைமையில் 12 எம்.எல்.ஏ க்கள் கூண்டோடு பாஜகவில் ஐக்கியமானார்கள். அதுமட்டுமில்லாமல், அந்த சட்டமன்ற தேர்தலில் வென்ற கோவா பார்வர்டு கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்களையும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 3 உறுப்பினர்களில் 2 உறுப்பினர்களையும் தன்பக்கம் இழுத்தது பா.ஜ.க.

அதே போல, 2017-இல் கோவாவில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்த முன்னாள் பாஜக முதல்வர் பர்சேகர் உட்படச் சிலர் தேர்தல் நெருக்கத்தில் பாஜகவிலிருந்தும் விலகியுள்ளனர். தேசியவாத காங்கிரஸுக்கு இருந்த ஒரு உறுப்பினரும் தேர்தல் நெருக்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் கட்சித்தாவல்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

தேர்தல் ஆணையம்

இவர்களைத் தவிர, சுயேச்சையாக வென்ற இருவர் பா.ஜ.க வில் இணைந்தனர். இப்படி தான் பா.ஜ.க 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்ய இருக்கிறது.

வாக்காளர்கள், தாம் வாக்களிக்கும் ஒரு வேட்பாளர், அல்லது கட்சி சரியானது என்ற நம்பிக்கையில் வாக்களிக்கின்றனர். ஆனால் தன்னால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர், இறுதி வரை அதே கட்சியில் தான் இருப்பார் எனபதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத சூழல் தற்போது கோவாவில் உருவாகியுள்ளது. காங்கிரஸை விரும்பி வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவில் உள்ளனர். சிறிய கட்சிகளை நம்பி வாக்களித்த வாக்காளர்களின் நிலைமையும் இதேதான். பாஜக உறுப்பினர்கள் பலரும்கூட இப்போது ராஜினாமா செய்துள்ளனர். எனவே வரும் தேர்தலில் யாரை நம்பி வாக்களிப்பது? அப்படி வாக்களித்தால் அவர்கள் நாம் வாக்களித்த கட்சியிலேயே இருப்பார்களா? என்ற குழப்பத்தில் கோவா வாக்காளர்கள் உள்ளனராம்.

பாஜக - காங்கிரஸ்

கடந்த படிப்பினை காரணமாக, இந்த முறை அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் மிகவும் உஷாராகி உள்ளதாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் அவரவர் வழிபாட்டு இடங்களுக்குக் கூட்டிச்சென்று சத்தியம் வாங்குகிறதாம் காங்கிரஸ் கட்சி. ஆம் ஆத்மி கட்சியோ, சட்ட ரீதியான ஒப்பந்தமும் செய்கிறது எனத் தகவல்கள் கூறப்படுகிறது. சீட்டு கட்டுகளைப்போல மாறி, மாறி சேரும் எம்.எல்.ஏ க்களை பார்த்து வெதும்பிப்போன கோவா வாக்காளர்கள் யாரைத்தான் நம்புவதோ எனக் குழப்பத்தில் உள்ளனர்.

Also Read: கோவா: மனோகர் பாரிக்கர் மகனுக்கு `நோ’ சொன்ன பாஜக! - தந்தை தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங்குகிறார்



source https://www.vikatan.com/news/politics/goa-politicians-are-confusing-the-people-by-changing-their-party

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக