Ad

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

``பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம்!" - உத்தவ் தாக்கரே

மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பிறந்த தினத்தையொட்டி மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ஆன்லைன் மூலம் கட்சி தொண்டர்களிடம் உரையாற்றினார். அதில் பேசியதாவது, ``பாஜக-வுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகளை வீணாக்கிவிட்டோம். ஒரு நேரத்தில் நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. நாங்கள் அவர்களை வளர்த்தோம். அதனால்தான் 25 ஆண்டுகளை அவர்களுடன் கூட்டணி வைத்து வீணாக்கிவிட்டோம் என்று சொல்கிறேன். சிவசேனா தனது இந்துத்துவா கொள்கையை கைவிடவில்லை. இந்துத்துவாவிற்காகவே நாங்கள் அதிகாரத்தை விரும்புகிறோம்.

இப்போது இவர்கள்(பாஜக) கடைப்பிடிக்கும் இந்துத்துவா என்பது வெறும் பாசாங்கு மட்டுமே. அதிகாரத்துக்குத்தான் அவர்களின் இந்துத்துவா. அவர்கள் இந்துத்துவா என்ற போலி தோலை மட்டுமே அணிந்துள்ளனர். மக்கள் எங்களிடம் இந்துத்துவா கொள்கையை விட்டுவிட்டீர்களா என்று கேட்கிறார்கள்.

உத்தவ் தாக்கரே

நாங்கள் பாஜகவை மட்டும்தான் விட்டுள்ளோம். இந்துத்துவாவை விடவில்லை. பாஜக என்பதன் அர்த்தம் இந்துத்துவா கிடையாது. ஆட்சியை பிடிப்பதற்காக மட்டுமே பாஜக மாநில கட்சிகளுடன் கூட்டணி சேருகிறது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதுதான் பாஜகவின் கொள்கையாகும். தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்ததை நினைத்துப்பார்க்கவேண்டும். அந்த நேரத்தில் நாங்கள் தேவைப்பட்டோம். அதனால்தான் பிராந்திய கட்சிகளான சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கூட்டணி சேருகின்றனர். வாஜ்பாய் ஆட்சி அமைத்த போது மனப்பூர்வமாக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தோம்.

இப்போது இந்துத்துவாவை சொந்த நலனுக்குத்தான் பயன்படுத்துகின்றனர். சிவசேனா தொண்டர்கள் சட்டமன்றம், மக்களவை தேர்தலோடு நின்றுவிடக்கூடாது. வெற்றி தோல்வியைப்பற்றி கவலைப்படாமல் அனைத்து தேர்தலிலும் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்யவேண்டும். வங்கி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நடக்கும் தேர்தலுக்கும் சம உரிமை கொடுக்கவேண்டும். இப்போது நாம் கோவா, உத்தரதேச தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். எதிர்காலத்தில் மற்ற மாநிலத்திலும் போட்டியிடுவோம். மற்ற மாநிலங்களிலும் சிவசேனா வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியை பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

பாஜக - சிவசேனா கூட்டணி

உத்தவ் தாக்கரே முதுகு தண்டு வடப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரது மகன் ஆதித்யா தாக்கரே தான் இப்போது, உத்தவ் தாக்கரே ஆலோசனையின் பெயரில் முக்கிய முடிவுகளை எடுக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/we-have-wasted-25-years-in-alliance-with-bjp-maharashtra-chief-minister-uddhav-thackeray

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக