Ad

சனி, 22 ஜனவரி, 2022

செவ்வாய் தோஷம் தீர்க்கும், செல்வ வளம் சேர்க்கும்... வடபழநி ஆண்டவர் திருத்தலம் குறித்த 10 தகவல்கள்!

பழநிக்கு இணையான தலமாகப் போற்றப்படுவது சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் திருக்கோயில். பழநிக்குச் செல்ல முடியாத பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்து வடபழநி ஆண்டவனை வேண்டிச் சென்றனர். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக மாறிவிட்ட இந்தத் திருக்கோயிலில் 2007-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கப்பட்டது. அந்தத் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த பத்து நாள்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. இன்று (23.1.2022) திருக்கோயிலில் கும்பாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. இந்த அற்புதமான திருநாளில் வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குறித்து அறிந்துகொள்ள வேண்டிய பத்து தகவல்களைக் காண்போம்.

வன்ண மயமான யாகசாலை

சாதுக்களால் பிரதிஷ்டை செய்தப்பட்ட இந்தத் தலத்தில் வள்ளி தெய்வயானை சமேதராக மூலவர் வடபழநி ஆண்டவர் என்னும் திருநாமத்தோடு அருள்பாலிக்கிறார். இங்கு முருகப்பெருமான் பாத ரட்சையுடன் (காலணிகள்) அருள்பாலிப்பது விசேஷம்.

இங்கு முருகப்பெருமான் தாமரைப் பீடத்தின் மீது வலது பாதத்தை முன் வைத்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். பக்தர்களின் வேண்டுகோளுக்கு உடனே வந்து அருள் செய்ய முருகப்பெருமான் ஓர் அடி எடுத்த நிலையில் அருள்பாலிக்கிறார் என்பது பக்தர்களின் விளக்கம்.

வடபழநி ஆண்டவரை வழிபட்டால் செல்வ வளம் சேர்வதோடு அனைத்திலும் விருத்தி கிடைக்கும். இங்குள்ள முருகப்பெருமானை வழிபட கல்யாண வரமும், பிள்ளை பாக்கியமும் கிடைக்கும். பழநிக்கு நிகரான இந்தத் தலத்தில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டு முடி காணிக்கை செலுத்தினால் சகல தொல்லைகளும் விலகும் என்பது நம்பிக்கை. பழநிக்கு வேண்டிக்கொண்டு செல்ல முடியாதவர்களும் இங்கே வந்து நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

அண்ணாசாமி தம்பிரான் என்பவர்தான் இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர் என்கிறது தல புராணம். அந்தக் காலத்தில் தீராத பிரச்னைகள் தீர்ந்தால் தன் நாக்கை அறுத்து இறைவனுக்குக் காணிக்கையாக்குவதாக வேண்டிக்கொள்ளும் வழக்கம் இருந்தது. அதற்கு பாவாடம் என்று பெயர். அப்படி திருத்தணி முருகனை வேண்டிக்கொண்டு பாவாடம் செலுத்தியவர் இவர். ஒருமுறை இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அந்நோய் தீருவதற்கு அவர் தவறாமல் திருத்தணி மற்றும் திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். இவரின் நிலையைக் கண்ட சாது ஒருவர் பழநி முருகனை வழிபடுமாறு கூறினார். எனவேதான் இவர் தன் குடிசையில் பழநி முருகன் உருவப்படத்தை வைத்து வழிபடலானார். அதன் பின் அவரின் நோய் நீங்கியது. அவர் பூஜை செய்த பழநி ஆண்டவரின் படம் இன்று பிராகாரத்தின் வடக்கு மண்டபத்தில் உள்ளது.

வட பழநி முருகன் கோயில்

ரத்தினசாமி தம்பிரான் என்பவர் காலத்தில்தான் முருகப் பெருமானுக்கு திருமேனி செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் சீடர் ஆவார். இவரும் முருகனுக்குப் பாவாடம் செலுத்தியவர் என்கிறார்கள்.

தற்போது இருக்கும் வடபழநி கோயிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிராகாரத் திருச்சுற்றுச்சுவர் கருங்கல் திருப்பணியும் செய்வித்தவர் பாக்ய லிங்க தம்பிரான். கோயில் எழும்பியபின் அதன் புகழ் பெருகத் தொடங்கியது, கோயிலை உருவாக்கி வளர்த்தெடுத்த இந்த மூன்று குருமார்களின் சமாதியும் கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கின்றன. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் தீராத வினையெல்லாம் தீர்கின்றது என்கிறார்கள் பக்தர்கள். இம்மூன்று சாதுக்களுக்கும் நெற்குன்றம் பாதையில் திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இங்கு சிறப்பு பூஜைகளும் இவர்களின் குருபூஜை வைபவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் செவ்வாய் பகவானுக்கு (அங்காரகன்) தனி சந்நிதி அமைந்துள்ளது. இதனால் செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் நன்மைகள் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சனேயர் சந்நிதி இங்கு உண்டு.

வடபழநி ஆண்டவர் திருக்கோயில் திருமணங்கள் நடைபெறும் தலமாகவும் அமைந்துள்ளது. ஓர் ஆண்டுக்கு சுமார் 7000 திருமணங்கள் இங்கு நடைபெறுகின்றன. இங்கு திருமணம் செய்துகொள்வதன் மூலம் தங்களின் இல்வாழ்க்கை சிறக்கும் என்று நம்புகிறார்கள் பக்தர்கள்.

விளக்கொளியில் மிளிரும் வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

இந்த கோயிலின் ராஜ கோபுரம் 72 அடி உயரம் உள்ளது. இந்தக் கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன. கோயிலின் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன. இக்கோயிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.

இங்கு தமிழ் மாதங்கள் பன்னிரெண்டிலும் சிறப்பு விழாக்கள் வைபவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக வைகாசி விசாகத் திருவிழா பதினோரு நாள் உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்படும். ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூஜைகள் இங்கு நடைபெறும். ஐப்பசி மாதத்தில் 6 நாள்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் வெகு விமர்சியாக நடைபெறும். சஷ்டித் திருவிழாவின் ஆறு நாள்களிலும் முருகப் பெருமானுக்கு ‘லட்சார்ச்சனை’ நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/spiritual/temples/must-know-10-things-about-vadapalani-murugan-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக