தமிழ்நாட்டில், பா.ஜ.க-வை வளர்த்தெடுக்கும் முயற்சியாக அடுத்தடுத்து அரசியல் அதிரடிகளைக் கிளப்பிவருகிற தமிழக பா.ஜ.க-வுக்கு தி.மு.க தலைமையிலான தமிழக அரசும் தக்க பதிலடி கொடுத்துவருகிறது. குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்ததையடுத்து, `நம் மாநில அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுக்க பொதுமக்கள் மத்தியில் வலம்வரும்' என்று அறிவித்திருக்கிறார் தமிழக முதல்வர்.
இந்தச் சூழ்நிலையில், தமிழக பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனிடம் பேசினேன்....
''நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட வீரர்களுக்கு குடியரசு தின அணிவகுப்பில் மரியாதை செலுத்தத் தவறிவிட்டது மத்திய பா.ஜ.க அரசு என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?''
''சுதந்திரப் போராட்டத் தியாகிகளை சாதி வட்டத்துக்குள் கொண்டுபோய் அடைத்ததுபோல, இப்போது அரசியலிலும் சிலர் அடைக்கப்பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மீது அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் வைப்பது ஏற்க முடியாது.
தமிழகம் சார்பிலான அலங்கார ஊர்தி அணிவகுப்பில் இடம்பெற முடியாமல் போனதில் எல்லோருக்கும் வருத்தம்தான். இந்த விவகாரத்தில் முழுமையான விவரங்கள் தெரியாமல், தேவையற்ற அரசியல் சிக்கல்களை ஏற்படுத்துவதும் மக்களைக் குழப்பப்படுத்தும் முயற்சியிலும் யாரும் ஈடுபடக்கூடாது. இந்த விவகாரத்தில் உண்மையிலேயே யார் மீது தவறு என்பதை பொறுமையாக அலசி ஆராய்ந்து பிரச்னைகளைத் தீர்க்கும் முயற்சிகளைத்தான் செய்யவேண்டும்.''
''மத்திய அரசு சார்ந்த நலத் திட்டங்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளும் பிரதமர், அலங்கார ஊர்தி சர்ச்சை விஷயத்தில் மட்டும் பொறுப்பேற்காமல் விலகிக்கொள்ள முடியுமா?''
''குடியரசு தின அணிவகுப்புக்கான அலங்கார ஊர்திகளை பிரதமரே நேரடியாகத் தேர்வு செய்வதில்லை. மத்திய பாதுகாப்புத்துறைதான் இந்த விஷயத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது. பின் எப்படி இந்தப் பிரச்னையில் பிரதமரை முன்னிலைப்படுத்துகிறீர்கள்?''
''மத்திய சுகாதாரத் துறையின் தடுப்பூசி பணியினை தனது ஆட்சியின் சாதனையாகப் பெருமை பேசுகிற பிரதமர், தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்தானே?''
''இல்லையில்லை... இது தவறான உதாரணம். 130 கோடி மக்களையும் பாதுகாக்கிற முன்களப் பணியாளர்களின் கால்களைக் கழுவி, பாத பூஜை செய்தவர் நமது பிரதமர். மற்றபடி தடுப்பூசி செலுத்திய விவகாரத்தில், தனிப்பட்ட எனக்குத்தான் பெருமை என்று பிரதமர் எங்கேயும் சொல்லவில்லை. மத்திய அரசின் சீரிய முயற்சியால், 150 கோடி எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டிருக்கின்றன என்று அரசின் பணிகளைத்தான் பாராட்டுகிறார். இதன்மூலம் இந்தப் பெருமை 130 கோடி மக்களைத்தான் சேரும் என்று மக்களைத்தான் பெருமைப்படுத்துகிறார். இன்னும் சொல்லப்போனால், தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் பிரதமர் மோடி, மிகுந்த அக்கறை காட்டிவருகிறார்.''
''கடந்தகாலங்களில் கோயில் முகப்பு அமைப்புடன் கூடிய அலங்கார ஊர்திகள் தமிழகம் சார்பில் இடம்பெற்றிருந்ததாலேயே குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி கிடைத்தது என்றும் சொல்கிறார்களே?''
''இதுபோன்று தவறான பார்வையை நான் இதுவரை பார்த்ததில்லை. 2000-வது ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரையிலாக டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் பெரும்பாலும் நான் பங்கேற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அலங்கார ஊர்திகளில் எந்த மாதிரியான மத அடையாளங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றெல்லாம் நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது.
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் கழுகின் பார்வை அழுகிய இறைச்சியின் மீதுதான் என்பதுபோல, சிலரது பார்வை எப்போதும் தப்பாகவே இருக்கிறது. உயரச் செல்லச் செல்ல நமது பார்வைகளும் குறுகிய வட்டத்தைத் தாண்டி விசாலப்படவேண்டும்!''
''திருவள்ளுவரையும் தமிழ் மொழியையும் பா.ஜ.க-வினர் புகழ்வது, வாக்கு அரசியலுக்கான தந்திரம் என்கிறார்களே?''
''கடந்த 50 ஆண்டுகால திராவிட ஆட்சியில்தான் தமிழ்நாட்டில் தமிழ் மொழியே அழிந்து எல்லாம் ஆங்கில மயமாகிவிட்டன. காமராஜர் கொண்டுவந்த இலவசக் கல்வியை ஒழிக்கும் விதமாக, கல்வித்துறையில் தனியார்களை அனுமதித்து கல்வியைக் காசாக்கியதே இந்த திராவிடக் கட்சிகள்தான். அதனால்தான் இன்றைக்கு கிராமத்திலுள்ள குழந்தைகளுக்கே தமிழ் புரியவில்லை. அதேசமயம், ஆங்கிலத்தில் பேசினால் குழந்தைக்குப் புரிகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயிடம் கேட்டால், 'தமிழைப் படித்து என்ன பயன்' என்று திருப்பிக் கேட்கிறார்கள். இதுதான் இன்றைய தமிழக நிலைமை! ஆனால், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தான் செல்லும் இடங்களிலெல்லாம் தமிழின் பெருமையைப் பற்றிப் பேசத் தவறுவதே இல்லை!''
Also Read: ஜம்மு-காஷ்மீர்: ``இயல்பு நிலை திரும்பியவுடன் மாநில அந்தஸ்து!” - அமித் ஷா உறுதி
''ஆனால், மொழி வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு செய்யும்போது மட்டும் தமிழை மறந்துவிட்டு மிகச்சரியாக சமஸ்கிருத மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுகிறாரே பிரதமர்?''
''ஐ.நா சபையில்கூட, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என தமிழ் மொழியின் பெருமையைப் பேசுகிறார் நமது பிரதமர். 'சமஸ்கிருதத்தைவிடவும் பழமையான மொழி தமிழ்' என்கிறார். இதுபோன்ற தருணங்களில் நமது மொழியைப் புகழ்ந்துபேசிய பிரதமருக்கு நாமும் நன்றி தெரிவிக்கவேண்டும். அப்படிச் செய்தால்தான், மென்மேலும் நமது மொழியின் பெருமையை அதிகளவில் முன்னிலைப்படுத்துவதற்கான உற்சாகத்தை பிரதமருக்குக் கொடுக்கும். ஆனால், தமிழக ஆட்சியாளர்கள் அப்படிச் செய்வதில்லையே...!
ஆக, நாம்தான் தமிழை முன்னிறுத்தத் தவறியிருக்கிறோம். திருவள்ளுவர் உள்ளிட்ட நம் முன்னோர்களை தமிழ்நாடு தவிர்த்து மற்றவர்களின் கவனத்துக்கு எடுத்துச்செல்லவும் தவறியிருக்கிறோம்!''
''கடந்த காலத்தில், திருவள்ளுவரின் சிலையை நிறுவ உத்தரகாண்ட்டில் மதவாதிகள் எழுப்பிய எதிர்ப்பை நாம் கண்கூடாகப் பார்த்தோம்தானே?''
''திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கு முதலில் அனுமதி கிடைக்கவில்லை என்பது தவறுதான். ஆனால், அதன்பிறகும் சிலையை நிறுவாமல் அப்படியே விட்டுவிட்டார்களா... இல்லையே! திருவள்ளுவரை தமிழ்நாட்டைத் தாண்டியும் வெளியே கொண்டு செல்வதற்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காதவர்கள், மற்றவர்களை மட்டும் குறை சொல்லிக்கொண்டே இருப்பது எந்தவகையில் நியாயம்?
உதாரணத்துக்கு வள்ளுவர் கோட்டம் நிறுவி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.... இத்தனை ஆண்டுகளில் திருவள்ளுவரை உலக அளவில் எடுத்துச்செல்லும்விதமாக திருக்குறள் பற்றிய ஆய்வு ஏதேனும் நடத்தப்படவில்லை. திருவள்ளுவரை உலகுக்கு எடுத்துச்செல்ல வேண்டிய நமது பொறுப்பை நாம்தானே தவற விடுகிறோம்.''
Also Read: `தேசத்தின் நலன் கருதி' - பாக். உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்! பின்னணி என்ன?
''திருக்குறள் கூறும் அறத்தைப் பாடத்திட்டமாக்கியதில் ஆரம்பித்து வள்ளுவருக்கு வானுயர சிலை அமைத்தது வரையிலாக தமிழக அரசுகள் தங்கள் பங்கை சரிவர செய்திருக்கிறதுதானே?''
''பண்டைய தமிழ் முறைப்படி அமைதியாக சம்மணமிட்டு உட்கார்ந்திருந்த வள்ளுவரை நிற்கவைத்ததோடு ஸ்டெனோகிராபர் போல குறிப்பெடுக்க வைத்தப் பெருமை கருணாநிதிக்குத்தான் உண்டு. வள்ளுவர் சிலை எந்த நிலையில் அமைக்கப்பட்டிருந்தாலும் அதை நான் பாராட்டுகிறேன்... குற்றம் சொல்லவில்லை. அதேசமயம் இப்படி தோற்றத்தை ஆளாளுக்கு மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? பாரதியாரின் நெற்றியில் இருந்த குங்குமத்தை அழித்தது யார்? திலகத்தை அழிக்க வேண்டிய தேவை என்னவந்தது? பாரதியார் இந்து என்பதால், கிறிஸ்தவர், இஸ்லாமியர் யாரும் பாடாமல் இருந்தார்களா என்ன? ஏன் அடையாளத்தை அப்புறப்படுத்துகிறீர்கள்?
உதாரணமாக... கருணாநிதியின் உருவத்தை அடையாளப்படுத்தும்போது அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற துண்டுக்குப் பதிலாக வேறு ஒரு வண்ண துண்டு அணிவித்து 'இவர்தான் கருணாநிதி' என்று அடையாளப்படுத்தினால் ஏற்றுக்கொள்வார்களா? எனவே நாட்டின் பெரும் தலைவர்களது உருவங்களை தங்கள் இஷ்டத்துக்கும் மாற்றியமைப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது.''
''கீழடி ஆய்வுக்கான நிதி ஒதுக்கீட்டைக்கூட மறுத்ததோடு, மாநில அரசின் தொல்லியல் பணிகளுக்கும் பல்வேறு தடைகளை ஏற்படுத்திவந்தது மத்திய பா.ஜ.க அரசுதானே?''
''அப்படி எந்தவிதத் தடையையும் மத்திய அரசு உருவாக்கவில்லை. கடந்தகாலத்தில் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சராக பதவிவகித்த மாஃபா பாண்டியராஜன், மத்திய அரசு மீது இதுபோன்று ஏதாவது குற்றச்சாட்டு சொன்னாரா... இல்லையே!
நம்முடைய தொன்மையை மீட்டெடுப்பதில், நம்முடைய முயற்சிதான் முதலாவதாக இருக்கவேண்டும். உதாரணத்துக்கு... கடலால் மூழ்கடிக்கப்பட்ட குமரிக் கண்டத்தைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அதுதான் ஒட்டுமொத்த இந்தியாவின் முகத்தையும் வெளிக்கொண்டுவரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுகுறித்த முன்னெடுப்புகளில் தமிழக அரசுதான் ஆர்வம் காட்டவேண்டும்.
அதங்கோட்டு ஆசான், தொல்காப்பியர், வள்ளுவர் உள்ளிட்ட நம் முன்னோர்கள் எல்லோரும் இந்த குமரிக்கண்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்று சொல்கிறார்கள். அவ்வையார் அம்மன் கோயில் இப்போதும் குமரியில்தான் இருக்கிறது. எனவே, குமரிக்கண்டம் குறித்த ஆய்வுகளை முன்னெடுப்பதில் தமிழக அரசு முதலில் ஆர்வம் காட்டவேண்டும்.''
source https://www.vikatan.com/government-and-politics/politics/bjp-pon-radhakrishnan-shares-his-views-on-current-political-happenings
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக