Ad

திங்கள், 31 ஜனவரி, 2022

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஒட்டுக் கேட்பு விவகாரம்... `பெகாசஸ்' பிரச்னை இனி என்ன ஆகும்?!

இந்திய அரசியலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் விஸ்வரூபமெடுத்த பெகாசஸ் விவகாரம், தற்போது மீண்டும் தேசிய அளவில் புயலைக் கிளப்பியிருக்கிறது. நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் பெகாசஸ் குறித்து வெளியான செய்தித் தொகுப்பைக் கொண்டு எதிர்க்கட்சிகள் பா.ஜ.க-வை வெளுத்துவாங்கி வருகின்றன. நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலும் இது குறித்த கேள்விகளை முன்வைக்கத் தயாராக இருக்கின்றன. பெகாசஸ் விவகாரம் இனி என்ன ஆகும்?

நியூயார்க் டைம்ஸ் செய்தி!

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், `நாட்டிலுள்ள முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உட்பட 160-க்கும் அதிகமானோரின் செல்போன்கள் பெகாசஸ் மென்பொருள் பயன்படுத்தி ஒட்டுக் கேட்கப்பட்டிருக்கிறது' என்று செய்தி வெளியிட்டது `தி வயர்'. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்தியில், `2017-ம் ஆண்டு, பெகாசஸ் மென்பொருளை இந்தியா, இஸ்ரேலிடமிருந்து வாங்கியது' என்று கூறப்பட்டிருக்கிறது. ​மேலும், ``2017-ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்றபோது சுமார் 15,000 கோடி மதிப்பில் பெகாசஸ், பிற பாதுகாப்பு ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகுதான் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ இந்தியா வந்தார்'' என்று குறிப்பிட்டிருக்கிறது நியூயார்க் டைம்ஸ்.

மோடி - நெதன்யாஹூ

Also Read: `பெகாசஸ் மென்பொருளில் லேட்டஸ்ட் வெர்ஷன் கேட்கும் நேரம்!’ - ப. சிதம்பரம் கிண்டல்

அதோடு அந்தச் செய்தியில், ``2019-ம் ஆண்டு ஐ.நா பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில், பாலஸ்தீன மனித உரிமைக் கழகத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது'' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை அப்போதைய ஐ.நா-வின் இந்தியத் தூதர் சையது அக்பருதீன் மறுத்திருக்கிறார்.

மத்திய அரசின் பதில் என்ன?

பெகாசஸ் விவகாரம் கடந்த முறை எழுந்தபோது, ``பெகாசஸ் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இந்தியாவில் குற்றவாளிகளை உளவுபார்க்க சட்டபூர்வமான நடைமுறைகள் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. தேசப்பாதுகாப்பு கருதி இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது'' என்று விளக்கமளித்திருந்தது மத்திய அரசு. தற்போது மீண்டும் இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்திருப்பதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தற்போது நியூயார்க் டைம்ஸின் செய்தி வெளியானதை அடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் `மத்திய அரசு, பெகாசஸ் குறித்துப் பொய் சொல்லிவிட்டது' என்ற கருத்தை முன்வைக்கத் தொடங்கியிருக்கின்றன.

பெகாசஸ்

உச்ச நீதிமன்ற விசாரணைக்குழு!

ஏற்கெனவே, பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் குழு ஒன்றை அமைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். பெகாசஸ் டார்கெட் லிஸ்டில் இடம்பெற்றிருந்த சிலர், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுதாரர்களின் செல்போன்களை ஆராய்ந்த சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள், பெகாசஸ் உளவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக் குழுவிடம் தகவல்களைச் சமர்ப்பித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பெகாசஸ் உளவு மென்பொருளால் டார்கெட் செய்யப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த மனுதாரர்களில், எழு பேரின் ஐபோன்களை சைபர் செக்யூரிட்டி வல்லுநர்கள் ஆய்வு செய்ததாகவும், அதில் இரண்டு பேரின் செல்போன்களில் பெகாசஸ் ஊடுருவியிருப்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பெகாசஸ் பிரச்னை இனி என்ன ஆகும்?

பெகாசஸ் விவகாரத்தைக் கூர்ந்து கவனித்துவரும் சிலர், ``24 மணிநேரமும் ஒருவரைக் கண்காணிப்பதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடமில்லை. அப்படிச் செய்யக்கூடியதற்கான மென்பொருள்தான் பெகாசஸ். இந்தியாவில், பெகாசஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தும், மத்திய அரசு தொடர்ந்து மௌனம் காப்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது. நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சியினர் எனப் பலரின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது ஆளும் பா.ஜ.க அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். உலக அரங்கில் பிரபலமடைந்திருக்கும் பிரதமர் மோடியின் இமேஜும் பெருமளவு சரிவைச் சந்திக்கும்.

மோடி

Also Read: 'Tek Fog' செயலி... அரசியல் எதிரிகளை அச்சமூட்டுகிறதா பா.ஜ.க?

நாட்டின் ஜனநாயகத்தையே அசைத்துப் பார்க்கும் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கினாலும், மக்களிடம் இது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. உச்ச நீதிமன்ற விசாரணைக்குழுவின் முழுமையான அறிக்கை வெளியான பிறகே, இந்த விவகாரம் இந்திய அரசியலில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவரும். பொறுத்திருந்து பார்க்கலாம்!'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-impact-of-pegasus-in-indian-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக