Ad

செவ்வாய், 18 ஜனவரி, 2022

`பெயர் மாற்றம் ஒன்றே மாறாதது!' - தொடரும் கழகங்களின் பெயர்மாற்ற அரசியல்கள்!

`மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற வாசகம் தமிழக அரசியலில் தவறாகப் பொருள்கொள்ளப் பட்டுவிட்டது போலும். முந்தைய ஆட்சியில் திமுக கொண்டுவந்த திட்டங்களை அதிமுக பெயர்மாற்றுவதும், அதிமுக கொண்டுவந்த திட்டங்களை இந்த ஆட்சியில் திமுக பெயர்மாற்றுவதும் காலங்காலமாக நடந்துவரும் வேடிக்கை அரசியலாகிவிட்டது. கருணாநிதி-ஜெயலலிதா விட்டுச்சென்ற இந்தப் `பெயர்மாற்ற அரசியலை ' அவர்களின் அரசியல் வாரிகளும் இப்போது செய்யத்தொடங்கியிருப்பதுதான் வேதனை. அம்மா சிமெண்ட்டை வலிமை சிமெண்ட் என்றும், அம்மா கிளினிக்குக்கு மாற்றாக மக்களைத்தேடி மருத்துவம் என்றும், அம்மா உணவகத்துக்குப் போட்டியாக கலைஞர் உணவகம் என்றும் தமிழகத்தின் பெயர்மாற்ற அரசியல் தற்போது சூடுபிடித்திருக்கிறது.

அதிமுக - திமுக

கடந்த மே 2021-ல் ஸ்டாலின் தலைமையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க, முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பில் போட்டுவருவதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, `அம்மா' எனத்தொடங்கும் திட்டங்களையெல்லாம் தி.மு.க திட்டமிட்டு மறைத்துவருவதாக ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.கவினர் கடுமையாக குற்றம்சாட்டினர். அதற்கேற்றார்போலவே தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகளும் அப்படியேப்பொருந்தியது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, புதிதாக 500 கலைஞர் உணவகங்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் என்றார். ஏற்கெனவே அம்மா சிமெண்ட் இருக்கும்நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு சார்பில் `வலிமை' சிமெண்ட்டை அறிமுகப்படுத்தினார். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களைத்தேடி மருத்துவத் திட்டம் சிறப்பாக செயல்பட்டுவருவதாகவும், தமிழகத்தில் உள்ள 2,000 அம்மா மினி கிளினிக்குகளை மூட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அறிவித்தார்.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் இந்தப் பெயர்மாற்ற அரசியல் இன்றுநேற்று தொடங்கியது அல்ல! சுமார் இருபதாண்டுகளுக்கு முன்பே 1997-ல் கருணாநிதி கொண்டுவந்த `நமக்கு நாமே' திட்டத்தை, 2001-ல் ஆட்சிக்குவந்த ஜெயலலிதா `கிராம தன்னிறைவு திட்டம்' என்று பெயர்மாற்றினார். அப்போதே தி.மு.க கடுமையாக எதிர்த்தது. மீண்டும் 2006-ல் ஆட்சிக்குவந்த தி.மு.க, முந்தைய ஜெயலலிதா ஆட்சித்திட்டங்களை கிடப்பில்போட்டு, தன்னுடைய திட்டங்களுக்கு புத்துயிரூட்டியது. அதேபோல, அந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட கலைஞர் வீடு வழங்கும் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டங்களை, 2011-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, `பசுமை வீடுகள் திட்டம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம்' (பின்னர் அம்மா மருத்துவக்காப்பீட்டு திட்டமாக பெயர்மாற்றப்பட்டது) என்றும் பெயர்மாற்றம் செய்தார். மேலும், தி.மு.க-வின் அண்ணா மறுமலர்ச்சி திட்டமும் கூட, தாய் திட்டமாக உருமாறியது.

கருணாநிதி - ஜெயலலிதா

ஏன், இதைத்தாண்டி தனது சொந்தக்கட்சி கொண்டுவந்த திட்டத்தின் பெயரை மாற்றிய விநோதம்கூட நிகழ்ந்திருக்கிறது. 2016-ல் ஜெயலலிதா கொண்டுவந்த `அம்மா அழைப்பு மையம்' திட்டத்தை, அவர்மறைவுக்குப் பின்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, `முதலமைச்சர் உதவி மையம்’ எனப் பெயர்மாற்றினார். இந்த விவகாரம் அ.தி.மு.க-வுக்குள்ளாகவே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அம்மா பெயரை எடப்பாடி பழனிசாமியே மறைத்துவிட்டதாகக்கூட கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

துரைமுருகன்

இந்த வரிசையில், தற்போது `அம்மா' திட்டங்களை தி.மு.க பெயர்மாற்றியும், மூடுவிழா செய்தும் வருவதாக பெரும்சர்ச்சை கிளம்பியிருக்கிறது. கடந்த 2022 ஜனவரி 6-ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அம்மா உணவகம்குறித்த குற்றச்சாட்டை முன்வைக்க, இடையே குறுக்கிட்டுப்பேசிய அமைச்சர் துரைமுருகன், `அம்மா உணவகத்தை மூடினால்தான் என்ன? கலைஞர் பெயரில் உள்ள எத்தனையோ திட்டங்களை நீங்கள் மூடி இருக்கிறீர்களே! என காட்டமாக பதில்கேள்வி எழுப்பினார்.

மறுநாள் தொடங்கிய கூட்டதில் பதிலளித்துப்பேசிய ஸ்டாலின், `உங்களைப்போல முந்தைய ஆட்சியின் திட்டங்களை முடக்கும் நோக்கம் எனக்கு ஒருபோதும் இல்லை. அம்மா உணவகம் மூடப்படாது' என உறுதியளித்தார். ஆனால், அதுவெறும் பேச்சு மட்டும்தான், சட்டமன்றத்தில் சும்மா சொல்லிவிட்டு, நிஜத்தில் பணியாளர்கள் குறைப்பு, உணவுப்பொருட்கள் குறைப்பு போன்றவற்றை செய்துவருகிறார்கள் என்ற குற்றசாட்டு எழுந்திருக்கிறது. திமுகவினரின் நோக்கமே அம்மா பெயரை இருட்டடிப்பு செய்வதுதான் என கொந்தளிக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்

நம்மிடையே தொடர்ந்து பேசிய அவர், ``தமிழில் விஜயகாந்துக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு, அதேமாதிரி ஸ்டாலினுக்கும், தி.மு.கவுக்கும் பிடிக்காத வார்த்தை அம்மா! அம்மா என்கிற வார்த்தையக் கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி. அதனால்தான் அம்மா பெயரில்வரும் அம்மா இருசக்கர வாகனம், அம்மா மினிகிளினிக், அம்மா உப்பு, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட் போன்ற எல்லா திட்டத்தையும் மூடிவருகிறார்கள்! அந்தவரிசையில் இப்போது அம்மா உணவகத்தையும் படிப்படியா மூடிவரும் திட்டத்தை வைத்திருக்கிறார்கள்" என்றார். மேலும்,

அம்மா உணவகம்

``இது ஒரு துக்ளர் தர்பார்! ஆக்கப்பூர்வமான புதிய திட்டங்களைத் தீட்டும் அளவுக்கு திமுகவினருக்கு புத்தி கிடையாது; ஆனால், அம்மா சிந்தனையில் உதித்து, நாங்கள் கொண்டுவந்த அனைத்து திட்டங்களும் பொதுமக்கள் மத்தியில் எடுபட்டது. நடுத்தர, அடித்தட்டுமக்களைச் சென்றடைந்தது. ஆட்சிமாறிய பின்பும் மக்களிடம் எங்கள் புகழ்நிலைத்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாத திமுக, நாங்கள் கொண்டுவந்த திட்டங்களை கிடப்பில்போட்டும், வேறுபெயரை மாற்றியும் அவர்கள் பெயரெடுத்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

அம்மா சிமெண்ட்

இப்படியெல்லாம் இவர்கள் செய்வதால் ஒன்றும் எங்கள் அம்மா புகழ் மறைந்துவிடாது. இந்த உலகம் இருக்கும்வரை அம்மா புகழ்நிலைத்திருக்கும். இனியாவது ஸ்டாலின், அரசியல் காழ்ப்புணர்ச்சிகொண்டு அரசியல் செய்யாமல், தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்! பழிதீர்க்கும் மலிவான அரசியலை நிறுத்திக்கொள்ளவேண்டும்" என கண்டனம் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் கருத்துகேட்டபோது, ``பலமுறை நாங்கள் சொல்லிவிட்டோம் ஜெயலலிதா மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. அம்மா கிளினிக் தற்காலிக திட்டம் என்பது அவர்கள்போட்ட அரசாணையிலேயே இருக்கிறது. அது ஒரு ஃபெயிலியர் திட்டம் என்பது சைதாப்பேட்டையில் ஒரு சுடுகாட்டில் இருக்கும் கிளினிக்கே சாட்சி. அதேபோல நான் இருக்கும் அண்ணாநகரில் உள்ள அம்மா உணவகம் குப்பைத்தொட்டி அருகில் இருக்கிறது. 2016-ல் சி.ஏ.ஜி வெளியிட்ட அறிக்கையில் 5.69 கோடிக்கு அம்மா உணவகத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறியிருக்கிறது. இப்படி, அவர்கள் கொண்டுவரும் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தினால் நாங்கள் ஏன் கைவைக்கப்போகிறோம்? முதலில் ஒரு தலைவரின் பெயரில் எத்தனைத் திட்டங்களுக்குத்தான் பெயர் வைப்பீர்கள்?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தொடர்ச்சியாக கலைஞர் உருவாக்கிய கோயம்பேடு பேருந்துநிலையம், தொல்காப்பியர் பூங்கா, புதிய தலைமைச்செயலகம் என அனைத்திலும் கலைஞர் பெயரை எடுத்துவிட்டு இருட்டடிப்பு செய்தவர்தான் ஜெயலலிதா. ஒன்றரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும், மாநில அரசுக்கு வருமானத்தையும் கொடுக்கக்கூடிய மதுரவாயல்-துறைமுகம் பறக்கும்சாலை திட்டத்தை கிடப்பில்போட்டவர். `கலைஞர் டிவி' என்று மக்கள் அழைத்துவிட்டதால், வாங்கிவைத்த டி.வி.யை மக்களுக்கு கொடுக்காமல் நாசமாக்கியவர்கள் அதிமுகவினர். இப்படி கலைஞர் என்ற பெயர் இருக்கும் ஒரே காரணத்துக்காக அவர்கள் கைவிட்ட திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மருத்துவ காப்பீடு திட்டம்!'

கருணாநிதி கொண்டுவந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, ஜெயலலிதா கல்யாண சந்தையாக மாற்றமுடிவெடுத்தபோது கல்வியாளர்கள், பொதுமக்களே எதிர்த்துப் போராடினார்கள். நீதிமன்றம் தலையிட்டு தடுத்துநிறுத்தியது. இப்படி, உண்மையிலேயே அவர்களின் திட்டம் மக்களுக்குப் பயனளித்தது என்றால், அப்பகுதி மக்கள் எப்படி எங்களை அப்புறப்படுத்த விடுவார்கள்?"

காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுதிட்டத்தை, சத்துணவு திட்டமாக மாற்றிய எம்.ஜி.ஆரின் திட்டத்தை நாங்கள் அப்படியேதான் செயல்படுத்தி வருகிறோம். கூடுதலாக முட்டை, வாழைப்பழம் கொடுத்து செழுமைப்படுத்தியிருக்கிறோம். எங்களுக்கு ஜெயலலிதா மீதோ, அதிமுகவினர் மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. மக்களுக்குப் பயன்படுகிற திட்டங்களை யார் கொண்டுவந்தாலும் அதை தொடர்ந்து செயல்படுத்துவோம். இதுபோன்ற பெயருக்கு கொண்டுவந்த தேவையில்லாத திட்டங்களை நாங்கள் நிச்சயமாக மூடுவோம்!" என்றார் தடாலடியாக!

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்

``தி.மு.க - அ.தி.மு.க இரண்டும் இதற்கு விதிவிலக்கல்ல. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நேரு, இந்திரா, ராஜீவ் பெயரை திட்டங்களுக்கு சூட்டிக்கொண்டதும், தற்போதைய பாஜக ஆட்சியில் அந்தப் பெயர்களைமாற்றி இந்துத்துவத் தலைவர்களின் பெயர்களை வைப்பதுபோலத்தான், மாநிலத்தில் இந்த இரண்டு கட்சிகளும் செய்துவருகின்றன" என்றார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன்.

எஸ்.பி.லட்சுமணன்

``முந்தைய ஆட்சியில் அச்சடிக்கப்பட்டு மீந்துபோன ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம்பெற்ற இலவச புத்தகப் பைகளை கைவிடாமல், அவற்றை மாணவர்களுக்கு வழங்கி 13 கோடி ரூபாய் மிச்சம்செய்து பெருந்தன்மை காட்டிய ஸ்டாலின், இந்த விவகாரத்திலும் காட்டவேண்டும். அடித்தட்டுமக்களுக்கு பயனளிக்கக்கூடிய, பல மாநிலங்களால் பாராட்டப்பட்ட ஒரு திட்டம்தான் அம்மா உணவகம். சட்டப்பேரவையில் அம்மா உணவகத்தின் பெயரை மாற்றமாட்டோம் எனக்கூறியதை வெறும்பேச்சோடு நிறுத்தாமல் செயல்பாட்டில் கொண்டுவரவேண்டும்.

வலிமை சிமெண்ட்

பெயர்மாற்றம் என்பதெல்லாம் ஒருநாள் கூத்து. ஏழை, அடித்தட்டு மக்களை பாதிக்காதவரை இதையெல்லாம் மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் நல்ல திட்டமா, இல்லையா என்றுதான் பார்ப்பார்களே ஒழிய, பெயர் முக்கியமல்ல! அம்மா சிமெண்டடை வலிமை சிமெண்ட் என்று மாற்றுவது சாதனையல்ல; அது தரமாகவும், சாமானியமக்கள் வாங்கக்கூடிய விலையில் இருக்கவேண்டும் என்பதுதான் விஷயமே! இவர்கள் அடிக்கக்கூடிய அரசியல் கூத்துக்களை பற்றியெல்லாம் மக்களுக்கு ஒதுபோதும் கவலை கிடையாது!" என காட்டமாகக் கூறினார்.

`பெயர்' மாற்றம் ஒன்றே மாறாததோ!



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-vs-admk-name-changing-revenge-politics-tragedies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக