Ad

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம்... தமிழகத்துக்கு ஒத்துவருமா அன்புமணி ராமதாஸ் யோசனை?!

`சிறியதுதான் அழகு' என்ற தத்துவத்தை முன்னிறுத்தி, 'தமிழகத்தின் பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்' என்பது பா.ம.க-வின் நீண்டநாள் கோரிக்கை! 'மாநில வளர்ச்சி மற்றும் நிர்வாக வசதி'யை முன்னிறுத்தி பா.ம.க இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது.

இதுகுறித்து பா.ம.க இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஆந்திராவிலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டபோது, மொத்தம் 10 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இந்த 10 மாவட்டங்களும் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு 33 மாவட்டங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாடு மாவட்ட வரைபடம்

அதேபோல், 13 மாவட்டங்களைக் கொண்டிருந்த ஆந்திரா அம்மாவட்டங்களைப் பிரித்து மொத்தம் 26 மாவட்டங்களாக எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. மாநில வளர்ச்சி, நிர்வாக வசதி மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு இம்மாநிலங்கள் மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கியிருக்கின்றன.

இதே வரிசையில், தமிழ்நாடும் 12 லட்சம் பேரைக்கொண்ட மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் என்ற ரீதியில், புதிய மாவட்டங்களை உருவாக்கினால், மாநில வளர்ச்சி, நிர்வாக வசதி மற்றும் பொதுமக்களின் நலன் மேம்படும்!" என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே இதேபோன்றதொரு அறிக்கையை பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், கடந்த 2019-ம் ஆண்டிலேயே வெளியிட்டிருந்தார். அதில், 'தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற வீதத்தில் மொத்தம் 60 மாவட்டங்களை உருவாக்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையின் மறுபதிப்பாகவே தற்போதைய அறிக்கையும் பா.ம.க-விலிருந்து வெளியாகியிருக்கிறது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், 2019-ம் ஆண்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. கடைசியாக, மயிலாடுதுறையைத் தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் பல புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பா.ம.க முன்வைக்கும் கோரிக்கையின் பின்னணியில் உள்ள மக்கள் நலன் மற்றும் நிர்வாக வசதி குறித்துப் பேசுகிற ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன்,

பாலச்சந்திரன்

''தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிமிதமான வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், நிர்வாக வசதிக்கென்று புதிதாக மாவட்டங்களைப் பிரிப்பதென்பது தேவையில்லை. ஏனெனில், புதிதாக மாவட்டங்களைப் பிரிக்கும்போது, மாவட்ட ஆட்சியரில் ஆரம்பித்து புதிய நிர்வாகங்கள், பணியாளர்கள் என்று செலவினங்கள் அதிகரித்துக்கொண்டே போகும்.

இன்று, நமது முதல்வர் சென்னையில் இருந்துகொண்டே, தமிழகத்தின் எந்தவொரு மாவட்டத்தில் நடைபெறுகிற திட்டத்தையும் காணொளி மூலமாகவே திறந்துவைக்கிறார். அந்தளவு தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவிட்டது. ஆனால், பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில், ஒரு ஆட்சியர், துணை ஆட்சியரைச் சந்தித்துப் பேசி ஒரு பிரச்னையைத் தீர்க்கவேண்டும் என்றால், அதற்கான பயணத்துக்காகவே சில நாள்களை செலவிடவேண்டிய சூழல் இருந்தது. ஆனால், இன்றைய நவீன உலகில், வாகனம், சாலை வசதி என போக்குவரத்து கட்டமைப்புகள் விரைந்து செல்லும் வசதியை உருவாக்கியிருக்கிறது.

எனவே, இன்றைய சூழலில், மக்களே நேரடியாக அதிகாரிகளைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க முடியும். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சிகளையும் அர்ப்பணிப்போடு எடுத்துச் செய்கிற அதிகாரிகள்தான் இங்கே அவசியம்.

'சிறியதே அழகு' என்ற தத்துவம் ஓ.கே. ஆனால், மாவட்ட ஆட்சியர் என்பவர் மிகப்பெரிய அதிகாரம் படைத்தவர். அவரை சிறியதில் கொண்டுபோய் அடைப்பதென்பது சரியானதில்லையே! உதாரணமாக 1987 முதல் 1989 வரையிலான இரண்டு ஆண்டுகள் நான் மேற்குவங்கத்தில் உள்ள மித்னாப்பூர் மாவட்ட ஆட்சியராகப் பணி செய்துவந்தேன். அந்த மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 15 ஆயிரம் சதுர கிலோமீட்டர். மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 84 லட்சம். அன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனத்தொகை 84 கோடி.

ராமதாஸ்

அப்போது, 1.6 கி.மீ தூரத்துக்குள்ளாக மக்களுக்கு குடிநீர் வசதியை செய்துதர வேண்டும் என மத்திய அரசு திட்டத்தை அறிவித்தது. நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், வெற்றிகரமாக செயல்படுத்திய மாவட்டம் என்ற வரிசையில் மித்னாப்பூர் மாவட்டம்தான் முதலிடம் பெற்றது. காரணம்.... அதிகாரிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புதான். எனவே, மக்கள் நலனைப் பூர்த்தி செய்வதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்பதுதான் இங்கே முக்கியம். எனவே அதை நடைமுறைப்படுத்துவதற்கு என்னென்ன வழிமுறைகளைக் கையாளவேண்டும் என்று சிந்திப்பது மட்டுமே மக்கள் நலனைப் பாதுகாக்கும்'' என்கிறார் அழுத்தமாக.

இதையடுத்து, அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான துரை கருணாவிடம், பா.ம.க-வின் கோரிக்கை குறித்து கருத்து கேட்டபோது, ''தமிழ்நாட்டை வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு என இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்று பா.ம.க கடந்தகாலத்தில் தீர்மானமே இயற்றியுள்ளது. அதனுடைய நீட்சியாகத்தான் இப்போது மாவட்டங்களையும் பிரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க முன்வைக்கிறது என்று மக்கள் நினைக்கிறார்கள்.

அதாவது, 'நிர்வாக ரீதியாக தங்கள் கோரிக்கைகளை ஆட்சியரிடம் எடுத்துச் சொல்லி நிறைவேற்றவும் மாவட்ட நிர்வாகத்தையே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்குமான இன்னொரு அரசியல் பரிமாணமாகத்தான் பா.ம.க இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது. மேலும் தேர்தல் காலங்களில், கட்சியின் செல்வாக்கு இத்தனை மாவட்டங்களில் வலுவாக இருக்கிறது என்று கணக்கு காட்டவும் பா.ம.க-வுக்கு இது பயன்படும்' என்பதுதான் பொதுவெளிக் கருத்தாக இருக்கிறது.

என்னைப் பொருத்தவரையில், நிர்வாக வசதிக்காக மாவட்டம் மற்றும் கோட்டங்களைப் பிரிப்பதென்பது சரியான யோசனைதான். அதேசமயம் இதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் நிர்வாக செலவினம் பன்மடங்கு அதிகரிக்கும்.

துரை கருணா

காமராஜர் ஆட்சிக்காலத்திலிருந்தே, 'பெரிய மாவட்டங்களைப் பிரிக்க வேண்டும்' என்ற கோரிக்கை இருந்து வருகிறது. ஆனாலும் காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால், ராஜாஜி அமைச்சரவையில் 12 அமைச்சர்கள் பங்கு பெற்றிருந்தனர். ஆனால், காமராஜர் முதல்வரானதும் இந்த எண்ணிக்கையை 8-ஆகக் குறைத்துவிட்டார். ஆக, பெரியவர் காமராஜர் பார்வையில் பார்ப்பதென்றால், இப்போது இருக்கின்ற நிர்வாகமே போதுமானதாகத்தான் இருக்கிறது'' என்கிறார்.

பா.ம.க-வின் புதிய மாவட்டக் கோரிக்கையும் அதையொட்டி எழும் மாற்றுக் கருத்துகளையும் குறிப்பிட்டு, பா.ம.க செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான பாலுவிடம் கருத்து கேட்டபோது,

Also Read: ``கேட்ட இடங்களைத் தருவது குறித்து திமுக பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறது!' - கே.எஸ்.அழகிரி

''மதுக்கடைகளை மூடச் சொல்கிறோம், வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரிக்கை வைக்கிறோம், நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடுகிறோம், புகையிலையை ஒழிக்கச் சொல்கிறோம், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தொடர்ந்து போராடிவருகிறோம்... இப்படி பா.ம.க முன்வைக்கிற கோரிக்கைகள் எல்லாமே மக்கள் நலன் மற்றும் நிர்வாக நலனைக் கருத்திற்கொண்ட யோசனைகள்தான்.

நம் பக்கத்து மாநிலமான ஆந்திரா, தெலங்கானாவில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, 'இது நிர்வாக செலவினம் அதிகரிக்கக்கூடிய செயல்' என்று யாரும் சொல்லவில்லையே! சென்னையை மூன்று மாநகராட்சிகளாக தமிழ்நாடு அரசு பிரித்திருக்கிறதுதானே... ஆக, நிர்வாக வசதி சரியாக இருந்தால்தான் அனைத்து மக்களுக்கும் சமமான அளவில் நலத்திட்டங்கள் சென்றடையும்.

பாலு

ஒரு மாவட்டத்தின் அடிப்படை வசதிகளான சாலைப் போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், கல்விக் கட்டமைப்பு என அனைத்தையும் ஆட்சியர்தான் செய்துதர வேண்டும். மாவட்ட ஆட்சி நிர்வாகம் என்பது வெறுமனே ஆன்லைன் வழியாக மட்டுமே செய்துமுடிக்க வேண்டிய பணி அல்ல. திட்டத்தின் முழுப் பயனும் பயனீட்டாளர்களைப் போய்ச்சேரவேண்டும்.

ஒரே மாவட்ட நிர்வாகத்தின் அடிப்படையில் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படுமேயானால், அந்தத் திட்டத்தின் முழுப்பயனும் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள சாமான்யனுக்கு முழுமையாகப் போய்ச்சேராது என்பதுதான் உண்மை. ஆக, நிர்வாக செலவு அதிகரிக்கும் என்று யோசிப்பவர்கள், திட்டத்தின் பயன் முழுமையாக மக்களைப் போய்ச் சேருவதில்லை என்ற இழப்போடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அப்படி ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான், நிதிச்செலவினம் என்பது பெரிய விஷயம் இல்லை என்பது புலப்படும். எனவே நிர்வாக சீரமைப்பு என்பது இங்கே மிகமிக முக்கியமான அம்சம்.

Also Read: கனடாவில் உறைபனியில் கிடந்த இந்தியர்கள் சடலங்கள் அடையாளம் காணப்பட்டன! - கனடா போலீஸ் தகவல்

ஆனால், 'மாநிலப் பிரிவினை என்ற உள்நோக்கத்தோடு பா.ம.க இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறது' என்றெல்லாம் சொல்வது, குறிப்பிட்ட கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்கிற பார்வை. இது வேறு... அது வேறு! ஏனெனில், நாங்கள் முன்வைக்கிற இந்தக் கோரிக்கை வட மாவட்டங்களுக்கு மட்டுமேயானது அல்ல... தென் மாவட்டங்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குள் 6 சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன என்றால், அது ஒரு முறையான சீரமைப்புடன் இருக்கவேண்டும் என்பது அவசியம். அதனால்தான் '12 லட்சம் பேர் அடங்கிய மக்கள் தொகைக்கு ஒரு மாவட்டம் என்ற வகையில், புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு மாவட்ட மறுவரையறை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைக்கவேண்டும்' என்று கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம்.

அன்புமணி ராமதாஸ்

மாவட்ட மறுவரையறை ஆணையம் என்பது அரசியல்வாதிகளை கூட்டிவைத்துக்கொண்டு அமைப்பதல்ல. எல்லா துறையைச் சேர்ந்த நிபுணர்களும் இந்த ஆணையத்தில் பங்கேற்றிருப்பார்கள். ஆக, பா.ம.க எழுப்பிவருகிற இந்தக் கோரிக்கையை எந்தளவுக்கு நாம் தள்ளிப்போடுகிறோமோ... அந்தளவுக்கு நமக்கான சுமையும் அதிகரித்துக்கொண்டேதான் போகும்.

நீர்வழிப் பாதையை யாரும் பயன்படுத்தக்கூடாது - பதிவு செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது, நீர் நிலங்களுக்கு அப்ரூவல் கொடுக்கக்கூடாது என்றும் சட்டம் இருக்கிறது. ஆனாலும்கூட இன்றைக்கு நீர்வழிப் பாதையைக் கையகப்படுத்துவதற்காக உயர் நீதிமன்றம் புதிதாக உத்தரவு போட்டிருக்கிறது. காரணம்... இந்த சட்டங்களை எல்லாம் மீறி நிறைய இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன; அவை எல்லாம் மீட்கப்படவேண்டும். தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானதுதான்.

எனவே, புதிய மாவட்ட சீர்திருத்தம் என்பது தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். இதுதான் காலத்தின் தேவையும்கூட'' என்கிறார் உறுதியாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/a-district-for-12-lakh-people-does-anbumani-ramadoss-idea-work-in-tamil-nadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக