அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் கட்சியின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும், எம்.பி-யுமான டி.கே.எஸ் இளங்கோவனின் மகள் திருமண விழா சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். இந்த விழாவில் அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். ``டி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி ஆகியோர் நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடர்பாக எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். ஒரு முறை மத்திய அமைச்சருடன் விவாதித்தபோது அனுபவம் இல்லாத காரணத்தால் சண்டை போடும் அளவுக்கு நான் பேசிவிட்டேன். அப்போது சகோதரி கனிமொழி குறுக்கிட்டு ‘பொறுமையாக இருங்கள் நான் பேசுகிறேன்’ என்று என்னை ஆற்றுப்படுத்தினார். நான் சர்ச்சையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் கனிமொழி மிகவும் கவனமாக இருந்தார். நாடாளுமன்ற நிகழ்வுகள் எப்படி நடைபெறும் என்பதையும் கனிமொழி எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் அதிகப் பற்று கொண்டவர் சகோதரி கனிமொழி. ஆர்.எஸ்.பாரதியும் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார்.” என நவநீத கிருஷ்ணன் தி.மு.க எம்.பி.-க்கள் கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன் உட்படப் பலரையும் புகழ்ந்து பேசினார்.
அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது மட்டுமல்லாமல் தி.மு.க-வினரைப் பாராட்டிப் பேசியது அ.தி.மு.க-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்சியில் அவர் வகித்த பதவியிலிருந்து நீக்குவதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டனர்.
ஜெயலலிதாவின் வழக்குகளைக் கவனித்து வந்த பிரதான வழக்கறிஞராக இருந்தவர். 2015 முதல் இப்போது மாநிலங்களை உறுப்பினராகவும் அ.தி.மு.க உறுப்பினர் குழுத் தலைவராகவும் இருப்பவர், அ.தி.மு.க ஆட்சியில் பல்வேறு அரசுப் பதவிகளிலிருந்தவர் நவநீதக் கிருஷ்ணன். அவரைக் பதவியில் இருந்து நீக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பின்னணி குறித்து விசாரித்தோம்...
``அ.தி.மு.க-வினர் தி.மு.க-வினரின் இல்ல திருமணத்துக்குப் போகவே மாட்டோம். அதுவும் அறிவாலயத்தில் நடக்கிறது என்றால் யாருடைய வீட்டு விழாவாக இருந்தாலும் அந்தப் பக்கம்கூட எட்டிப் பார்க்க மாட்டோம். அப்படி இருக்கும்பட்சத்தில் நவநீதன் தி.மு.க தலைவர்களைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனடிப்படையில் தான் அ.தி.மு.க தலைமை நவநீதனைப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது” என்றவர்கள் “நவநீதன் தி.மு.க பக்கம் செல்லப் போகிறார். அதனால்தான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக எம்.பி-க்கள் அமித் ஷா-வைச் சந்திக்கச் செல்லும்போது எங்கள் கட்சி சார்பாக யாரையும் அனுப்பும் எண்ணம் தலைமைக்கு இல்லை. ஆனால், நவநீத கிருஷ்ணனாக வந்து நானும் கலந்து கொள்கிறேன் எனக் கேட்டுச் சென்று வந்தார். டி.ஆர்.பாலுவோடு இணைந்து டெல்லியில் பல்வேறு விவகாரங்களில் அ.தி.மு.க-வுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்.
கட்சியின் முடிவு ஒன்றாக இருக்க மாநிலங்களவையில் இவர் தாமாக ஒரு கருத்தைப் பேசி வந்தார். கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கு முன்பிருந்தே தி.மு.க-வுக்குச் செல்வதற்கான அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். இதெல்லாம் தலைமையின் காதுக்கு வந்தும், அவராகச் சொல்லும் வரை காத்திருக்கலாம் என இருந்தனர்.” என்றவர்கள்... “நவநீத கிருஷ்ணன் மேல் நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியனும்தான் அழுத்தம் கொடுத்தார்கள்” என்றனர்.
``நவநீத கிருஷ்ணன் அம்மா காலத்தில் அவரின் வழக்குகளைக் கையாண்டு வந்தார் என்ற மரியாதையில்தான் அவரைக் கட்சியில் இதுவரை வைத்திருந்தார்கள். மற்றபடி கட்சியில் அவருக்குப் பெரியளவில் எந்த மதிப்பும் இல்லை. இதனால்தான் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது, தி.மு.க அரசு எங்கள் முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டுகள் நடத்தித் தொல்லை கொடுத்த போது அது குறித்த ஆலோசனை, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டங்கள் என எதற்கும் அவரை அழைக்கவில்லை. அவரும் அதற்காகப் பெரிய அளவில் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அவரின் பதவிக்காலம் முடிந்ததும் அவருக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் கட்சியிலிருந்து விலக்கி வைக்கவே தலைமை முடிவு செய்திருந்தது. ஆனால், அவராக தன்னுடைய தி.மு.க ஆதரவை வெளிப்படுத்திவிட்டார். கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்து கொள்பவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இவர் மீது எடுத்திருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கட்சியின் கொள்கைக்கு எதிராக நடந்து கொள்பவர்களுக்கு ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கொடுத்திருக்கும் ஓர் எச்சரிக்கை மணிதான் நவநீதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை” என்றவர்களிடம் அடுத்து வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்புக்கு யார் வருவார்கள் என்ற கேள்வியை முன் வைத்தோம்...
``முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அ.தி.மு.க எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை ஆகியோரில் யாராவது ஒருவருக்கு இந்தப் பதவியைத் தலைமை ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. இது எங்கள் பார்வைதான். ஆனால், இறுதி முடிவு கட்சித் தலைமை தான் எடுக்க வேண்டும்.” என்றனர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/reason-behind-navaneedhakrishnan-dismiss-by-admk-leaders
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக