Ad

வியாழன், 27 ஜனவரி, 2022

`படேல், நேதாஜியை கையிலெடுக்கும் பிரதமர், நேருவை மறைக்கிறார்' - கே.எஸ்.அழகிரி விமர்சனமும் அலசலும்!

73-வது குடியரசு தின விழாக் கொண்டாட்டம் தேசிய அரசியலில், பா.ஜ.க - காங்கிரஸ் இடையிலான முட்டல் மோதல்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறது. குடியரசு தின விழாக் கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக டெல்லியில் நடைபெறும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில், பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டன என்ற விமர்சனம் நாடு முழுவதும் எதிரொலிக்கிறது.

குறிப்பாக, மத்திய பா.ஜ.க அரசை நேருக்கு நேர் விமர்சித்துவரும் மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது அரசியல் ரீதியாக பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இந்த நிலையில், 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சத்தியமூர்த்தி பவனில், கொடி ஏற்றிவைத்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ''பா.ஜ.க-வினர் மகாத்மா காந்தியை மறக்கவும், நேருவை மறைக்கவும் நினைக்கிறார்கள். சர்தார் வல்லபாய் படேல் புகழைப் பாடிய பிரதமர் நரேந்திர மோடி, தற்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புகழைப் பாட ஆரம்பித்திருக்கிறார்.

சர்தார் வல்லபாய் படேல் சிலை

குஜராத் மாநிலம் என்றாலே மகாத்மா காந்திதான். ஆனால், அங்கே காந்தியின் சீடரான வல்லபாய் படேலின் சிலையைக் கொண்டுபோய் நிறுவியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு. காரணம்.. குஜராத் மாநிலத்தில் யாரும் காந்தியைப் பற்றிப் பேசக்கூடாது. ஆக, மகாத்மா காந்தியின் புகழை மறைக்கின்ற முயற்சி இது. இந்த இழிவான அரசியலிலிருந்து பா.ஜ.க-வினர் வெளியே வரவேண்டும்'' எனக் கடுமையாக சாடியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசுகிற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, ''ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர்களாக இருந்த சாவர்க்கர், கோல்வால்கர், கே.பி.ஹெட்கேவர், ஷ்யாம்பிரசாத் முகர்ஜி போன்றவர்களுடைய புகழை பா.ஜ.க-வினர் தாராளமாக பரப்பட்டும். ஆனால், இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் எந்தவிதப் பங்களிப்பையும் செய்திராத இந்தத் தலைவர்களைப் பற்றி பா.ஜ.க-வினர் பிரசாரம் செய்தால் மக்களிடையே அதற்கு வரவேற்பு இல்லை.

எனவே சுதந்திரப் போராட்ட வீரர்களான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் படேல் போன்ற மாபெரும் தலைவர்களை சொந்தம் கொண்டாடி, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தங்களுக்கும் உரிமை இருப்பதுபோல் காட்டிக்கொள்கின்றனர். கூடவே, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் தலைவர்களின் புகழை மறைக்கவும் முற்படுகின்றனர்.

குஜராத் என்றாலே மகாத்மா காந்திதான் நினைவுக்கு வருவார். ஆனால், அந்த நினைவை மறைக்கும்விதமாக, வேண்டுமென்றே குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு மூவாயிரம் கோடி ரூபாய் செலவில், 600 அடி உயரத்தில் சிலை எழுப்பியிருக்கிறார்கள். இதன்மூலம் மகாத்மா காந்தியின் புகழை சிறுமைப்படுத்தியிருக்கின்றனர். அதாவது காந்தி பிறந்த மண்ணிலேயே படேலுக்கு சிலை வைத்துவிட்டு, காந்தியைப் புறக்கணிப்பதென்பது எவ்வளவு பெரிய வன்மம்!

கோபண்ணா

அதேபோல், இப்போது டெல்லியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு 125 அடி உயரத்தில் சிலை எழுப்பப் போகிறார்கள். நேதாஜிக்கோ அல்லது வல்லபாய் படேலுக்கோ சிலை எழுப்புவதிலும் அவர்களது பெருமைகளை உலகறியச் செய்வதிலும் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால், தலைவர்களிடையே பாரபட்சம் காட்டக்கூடாது. ஆனால், பா.ஜ.க-வினரோ மற்றத் தலைவர்களது உழைப்பை, தியாகத்தை இருட்டடிப்பு செய்யும் வேலைகளைத்தான் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம்.

நாட்டின் தலைநகரில் நேதாஜிக்கு சிலை எழுப்புகிறவர்கள் இந்தத் தேசத்தின் தந்தையாக இருக்கக்கூடிய மகாத்மா காந்திக்கு சிலை எழுப்ப வேண்டாமா? 'தேசப்பிதாவே எங்களை வாழ்த்துங்கள்' என்றுதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸே மகாத்மா காந்தியைக் கேட்டுக்கொண்டார். பர்மா கூட்டத்தில் உரையாற்றச் சென்ற நேதாஜி, மேடையின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த தனது புகைப்படத்தை அகற்றச் சொல்லிவிட்டு, அதற்குப் பதிலாக மகாத்மாவின் படத்தை இடம்பெறச் செய்துவிட்டே உரையாற்றத் தொடங்கினார்.

தனது விடுதலைப் படைப்பிரிவிலும்கூட காந்தி, ஜான்ஸிராணி, ஜவஹர்லால் நேரு, அபுல்கலாம் ஆசாத் ஆகிய தலைவர்களது பெயர்களைச் சூட்டியிருந்தார் நேதாஜி. ஜவஹர்லால் நேருவும் நேதாஜியும் கொள்கை ரீதியிலும்கூட நெருக்கமானவர்கள். எனவே, சுதந்திரப் போராட்ட வரலாற்றில், மகாத்மா காந்தி, நேதாஜி, நேரு போன்ற தலைவர்களை யாராலும் பிரிக்க முடியாது. ஆனால், பா.ஜ.க-வினரோ இந்தத் தலைவர்களின் புகழைப் பரப்புவதில் பாரபட்சம் காட்டி மூவரையும் பிரிக்க நினைக்கிறாரகள்.

நாட்டின் தலைநகரில் சிலை வைப்பதாக இருந்தால், தேசத்தந்தை மகாத்மா காந்தி, நேரு, வீரத் திருமகன் நேதாஜி ஆகிய மூவருக்கும்தானே வைக்கவேண்டும். அதுதானே இந்திய விடுதலைப் போராட்டத்தை மதிப்பவர்களின் செயலாக இருக்கும்.

நேதாஜி - நேரு

இதுமட்டுமல்ல.... வங்கதேசம் என்ற ஒரு புதிய தேசத்தை உருவாக்கியதன் வெற்றிச் சின்னமாக அமர்ஜவான் ஜோதியை நிறுவினார் அப்போதைய பிரதமரான இந்திரா காந்தி. ஆனால், இந்திரா காந்தியின் பெயர் வரலாற்றில் இடம்பெறக்கூடாது என்பதற்காகவே, இப்போது அமர்ஜவான் ஜோதியை எடுத்துக்கொண்டு போய் தேசிய போர் நினைவு சின்னத்தோடு ஐக்கியப்படுத்திவிட்டார்கள்.

ஆக, சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரிப்பதும் மாபெரும் தலைவர்களின் தியாகத்தை மறைப்பதுமாக பா.ஜ.க-வினர் திட்டமிட்டு வேலை செய்துவருகின்றனர். காரணம் இவர்கள் சிறுமையானவர்கள்... விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்துக்கொள்ளாத இவர்களுக்கு பெருமைமிகு வரலாறு எதுவும் கிடையாது. இந்த மண்ணுக்கும் இவர்களுக்குமே எந்தவித சம்பந்தமும் கிடையாது. அதனால்தான் மக்களிடையே மதவெறியைத் தூண்டி, ஆதரவு தேடிக்கொள்ள முனைகிறார்கள்'' என்றார் கொதிப்புடன்.

Also Read: `பொங்கல் பொருள்களின் தரத்தை உறுதிசெய்வதில் மெத்தனம்; மூத்த அதிகாரி பணியிடை நீக்கம்!' - தமிழக அரசு

பா.ஜ.க மீதான காங்கிரஸின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், ''கே.எஸ்.அழகிரி, அனுபவமிக்க ஒரு தலைவர். அவர் இப்படியெல்லாம் பேசுவதை நான் வேடிக்கையாகத்தான் பார்க்கிறேன். மகாத்மா காந்தி, நேரு போன்ற தலைவர்களுக்கெல்லாம் கடந்தகால அரசியலில் ஏற்கெனவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும்கூட பிரதமர் நரேந்திர மோடியும் இந்தத் தலைவர்களுக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்.

உதாரணமாக, தூய்மை இந்தியா திட்டத்துக்கே மகாத்மா காந்தியின் பெயரைத்தான் பிரதமர் சூட்டியுள்ளார். தூய்மையின் சின்னமே காந்திதான் என்பதை அடையாளப்படுத்துவதுபோல், திட்டத்துக்குப் பெயர் சூட்டியதோடு தினம்தோறும் அவரது புகழைப்பற்றியும் தொடர்ந்து பேசிவருகிறார் பிரதமர்.

கரு.நாகராஜன்

ஆனால், வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் நல்ல சிந்தனைகளையும் நோக்கங்களையும் இந்திய மக்களிடையே எடுத்துச்செல்ல காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது. இந்தத் தலைவர்களின் வரலாறெல்லாம் மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறாகவே தொடர்ந்தது. எனவேதான் இந்த வரலாற்றையெல்லாம் வெளிக்கொண்டுவரும் முயற்சியில் பிரதமர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஈடுபட்டு பாடுபட்ட தியாகிகள், தலைவர்களை நினைவு கூறும் வகையில், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கிவருகிறது. இந்தத் தேசத்துக்காகப் பாடுபட்ட போராட்ட வீரர்களது நினைவிடங்களுக்குச் செல்லுங்கள். அந்தத் தியாகிகளின் வீடுகளுக்குச் சென்று அவர்களது வாரிசுகளை சந்தியுங்கள் என்றெல்லாம் பிரதமர் மோடி பா.ஜ.க அமைச்சர்களுக்கு கட்டளையிடுகிறார். ஏனெனில், இந்தியா என்பது ஒருசில குடும்பங்களுக்கு மட்டுமேயான தேசம் இல்லை.

Also Read: `தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம்' - ரிசர்வ் வங்கி விளக்கம்!

நாட்டின் விடுதலைக்காக பல்வேறு இன்னல்களை அனுபவித்த வ.உ.சி., பாரதியார் போன்ற தலைவர்களைவிடவும் பாடுபட்ட தலைவர் என்று யாரும் உண்டா? எல்லாத் தலைவர்களுக்குமே பா.ஜ.க முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. தலைவர்களிடையே நாங்கள் ஒருபோதும் பாகுபாடு பார்ப்பதில்லை. காங்கிரஸ் கட்சியினர்தான் பிரிவினை பார்க்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்வது, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதைதான். ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எல்லோருமே சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்கள்தான் என்ற வரலாறை காங்கிரஸார் படித்துப் பார்க்க வேண்டும்.

நரேந்திர மோடி - அமித் ஷா

இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்துப் போராடியவர் வாஜ்பாய். இந்து மகாசபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்-ஸில் இருந்துவந்த ஷ்யாம் பிரசாத் முகர்ஜிதான் சுதந்திர இந்தியாவின் முதல் மந்திரி சபையிலும் இடம்பெற்றார்.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் அமைப்பையே கலைக்கச் சொன்னவர் காந்தி. ஆனால், இன்றைக்கு காங்கிரஸ் கட்சி வந்து, சுதந்திரம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது!'' என்றார் எள்ளலாக.



source https://www.vikatan.com/government-and-politics/politics/analysis-on-tn-congress-chief-alagiri-statement-about-bjp-tactics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக