சென்னை பாரிமுனையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று முன் தினம் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியின்போது ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அமர்ந்தே இருந்திருக்கின்றனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த, பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் `ஏன் எழுந்துநிற்கவில்லை?' என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். மேலும், அவமதிப்பு செயலுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு பதிலளித்த அதிகாரிகள் சிலர், `தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை, இதுதொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவே இருக்கிறது. எங்களால் மன்னிப்பு கேட்க முடியாது!' என்றுகூறிவிட்டு கிளம்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்:
ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஓர் அரசாணையைக்கூட படித்துத் தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்... இல்லை இவர்கள் தமிழக அரசைவிட மேம்பட்டவர்களா?" என கேள்விகேட்டு தமிழக அரசின் அரசாணையையும் பகிர்ந்திருந்தார்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ``குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு அதை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி மலிவாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது. இத்தகைய விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாமல் தடுப்பதும் அவசியம்" என தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதேபோல, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், `` தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக கடந்த டிசம்பர் 17-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல். மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்நாட்டின் விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால்தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
Also Read: ``தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிப்பதா?" - ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பேச்சுக்குக் கனிமொழி கண்டனம்!
கமிஷனர் அலுவலகத்தில் புகார்:
இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி, உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நூலகர் ஜி.ராஜேஷ், நேற்று முன் தினம் ஆன்லைன் வழியாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த மனுவில், ``இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு முழு மரியாதை செலுத்தப்பட வேண்டும். அதேபோல அரசியல் அமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள சரத்தின் படி, மாநில அரசுகளின் ஆணைகளையும் மதிக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் 17-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ‘மாநில பாடலாக’ அறிவித்து, அனைவரும் எழுந்துநிற்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்திருந்தார். ஆனால், சென்னை ரிசர்வ் வங்கியில் 73-வது குடியரசு தின விழா நிகழ்ச்சியின் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது, அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக எடுத்துக்கொண்டு அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்திருக்கின்றனர்.
இது அனைத்து ஊடகங்களிலும் தெளிவாக வெளிவந்துள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் இந்த செயலால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் சூழல் உருவாக வாய்ப்புள்ளது. தமிழக அரசு உத்தரவுக்கு எதிராகவும், மாநில பாடலுக்கு அவமதிப்பு செய்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து முழு விசாரணை நடத்த வேண்டும்" என புகாரளித்திருந்தார்.
முற்றுகைப் போராட்டம்:
இந்த நிலையில், நேற்று காலை சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
`எங்கள் வரிப்பணம் இனிக்கிறது, எங்கள் தாய்மொழி கசக்கிறதா?' என கோஷம் எழுப்பியபடி சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட த.வா.க தலைவர் தி.வேல்முருகன், ``எங்கள் கட்சியின் சார்பாக, தமிழ் தாய் வாழ்த்தை மதிக்காத அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார் அளித்திருக்கிறோம். தமிழக அரசு உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அதிகாரிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.
வருத்தம் தெரிவித்த ரிசர்வ் வங்கி இயக்குநர்:
இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சாமி தலைமையிலான அதிகாரிகள், தமிக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து, `தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு சம்பவத்துக்காக வருத்தம்' தெரிவித்தனர்.
தமிழக அரசாணை என்ன கூறுகிறது:
கடந்த டிசம்பர் மாதம் 17-ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இனி தமிழக அரசின் மாநிலப்பாடல் என அறிவித்தார். மேலும், பாடல் பாடும்போது அனைவரும் எழுந்துநிற்க வேண்டும் என அரசாணையும் வெளியிட்டார்.
அந்த அரசாணையில், ``தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும், நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்படவேண்டும்.
Also Read: `தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம்' - ரிசர்வ் வங்கி விளக்கம்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்கவேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அரசாணையின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
பொதுநிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து' இசைவட்டுகளைக்கொண்டு இசைப்பதை தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்படவேண்டும்." உள்ளிட்ட முக்கியமான விதிமுறைகள் அடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தமிழக அளவில் விவாதத்துக்குள்ளான நிலையில் தமிழக அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்த கையோடு, மத்திய ரிசர்வ் வங்கி விளக்க அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டது.
அதில், `` `தமிழ்த்தாய் வாழ்த்து' தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு என்கிற முறையில், நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம்.
இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை மண்டல அலுவலகத்தின் பிரிதிநிதிகள், மண்டல இயக்குநர் அவர்களின் தலைமையில் தமிழக நிதி அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பான எங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்தனர்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Also Read: "தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுப்பது..." - கமலின் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை!
source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-rbi-tamilthaai-vazhthu-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக