கடந்த சில மாதங்களாக உக்ரைன்-ரஷ்ய எல்லையில் போர் பதற்றம் நீடித்துவந்தது. இந்த நிலையில், உக்ரைன் எல்லையில் சுமார் ஒரு லட்சம் வீரர்களைக் குவித்ததோடு மட்டுமல்லாமல், உயர் ரக பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் குவித்திருக்கிறது ரஷ்யா. மேலும், உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்கள் தீவிர ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டிருப்பது எல்லைப் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடையே என்ன பிரச்னை?
Also Read: யூரோ டூர் - 9 |உலகப் போரில் ஜெர்மனி தனித்து நின்றதும், இங்கிலாந்து, ரஷ்யா கூட்டு சேர்ந்ததும் ஏன்?
தனி நாடான உக்ரைன்!
ஒன்றுபட்ட சோவியத் யூனியனின் ஓர் அங்கமாக இருந்ததுதான் உக்ரைன். 1991-ல் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து தனி நாடானது. இதனால் கலாசார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ரஷ்யாவோடு ஒத்துப்போகும் நாடாக இருந்துவருகிறது. உக்ரைன் தனிநாடான பின்னரும், அதன்மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்தது ரஷ்யா. இதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலப் பிரச்னைகளுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
உக்ரைன் ஒரே நாடாக இருந்தாலும், அரசியல்ரீதியாக இரண்டு பிரிவுகளாகச் செயல்பட்டுவருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் வசிக்கும் மக்களில் அதிகம் பேர் ரஷ்யர்கள். அவர்கள் அனைவரும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே உக்ரைன் இருக்கவேண்டுமென விரும்புகிறார்கள். அதுவே மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள், உக்ரைனையே பூர்வீகமாகக்கொண்டவர்கள். இவர்கள், மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து உக்ரைன் செயல்படவேண்டுமென விரும்புகிறார்கள்.
உக்ரைனைக் குறிவைக்கும் மேலை நாடுகள்!
ஒருபுறம் ரஷ்யாவோடு எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் உக்ரைன், மற்ற பகுதிகளில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. சோவியத்திலிருந்து உக்ரைன் பிரிந்ததிலிருந்தே, மேலை நாடுகளுக்கு உக்ரைனைக் கைப்பற்றினால், கிழக்கு ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற எண்ணம் இருந்துவருகிறது. இந்த எண்ணம்தான் ரஷ்யாவை உறுத்துகிறது.
கிட்டதட்ட ஒரே கலாசாரத்தைப் பின்பற்றும் நாடு, எல்லையிலிருக்கும் நாடு, அதிக ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் நாடு என்பதால் உக்ரைனை, மேற்கத்திய நாடுகளுக்கு விட்டுக்கொடுக்க ரஷ்யாவுக்கு மனமில்லை. அதுமட்டுமல்லாமல், ``உக்ரைன் எங்களுடன் NATO (அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளோடு 28 ஐரோப்பிய நாடுகள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் நேட்டோ!) அமைப்பில் இணைந்து பணியாற்றலாம். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் பலம்வாய்ந்த ராணுவப் பாதுகாப்பு, பிற ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்தும் உக்ரைனுக்குக் கிடைக்கும்” என அந்த நாட்டை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கின்றன மேலை நாடுகள்.
``ரஷ்யாவின் எல்லையிலிருக்கும் ஒரு நாட்டில், அமெரிக்க, ஐரோப்பிய ஆயுதங்களும், வீரர்களும் வந்திறங்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதே அல்ல; அது எங்களுக்கான நேரடி அச்சுறுத்தல்” என இதை எதிர்க்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.
சமீபத்திய பிரச்னை?
பல ஆண்டுகளாக இந்தப் பிரச்னை நீடித்துவந்தாலும், இப்போது ஏன் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழலாம். தற்போது உக்ரைன் அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கி, தான் பதவியேற்றது முதலே அமெரிக்கா ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். ரஷ்யாவின் ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்படக்கூடிய ஜெலன்ஸ்கி, நேட்டோவில் இணையும் பணிகளை வேகமெடுத்திருக்கிறார். இதனால்தான் படைகளையும், ராணுவத் தளவாடங்களையும் உக்ரைன் எல்லையில் குவித்திருக்கிறார் புதின்.
Also Read: உக்ரைன் - ரஷ்யா இடையே போர்ப் பதற்றம்? - தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அமெரிக்கா!
போர் மூளுமா?
இந்த நிலையில், ரஷ்ய-உக்ரைன் எல்லையில் கடந்த சில மாதங்களாக நீடித்துவந்த எல்லைப் பதற்றம், தற்போது பல மடங்கு அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்துப் பேசும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், ``மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த உளவு அமைப்புகள் சில, `2022-ம் ஆண்டில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்' என எச்சரித்திருக்கின்றன. அமெரிக்கா, நவீன போர் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பியிருக்கிறது. மேலும், உக்ரைனில் இருக்கும் தனது தூதரக அதிகாரிகளை குடும்பத்துடன் உடனே வெளியேறுமாறும் அமெரிக்கா உத்தரவிட்டிருக்கிறது. எல்லைப் பகுதியில், ரஷ்ய ராணுவ வீரர்களும் தீவிரப் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள். இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் இரு நாடுகளுக்குமிடையே போர் மூளுவதற்கான சூழல் இருப்பதாகவே தெரிகிறது'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/international/article-about-russia-ukraine-border-tension
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக