Ad

வெள்ளி, 28 ஜனவரி, 2022

பட்ஜெட் 2022: நிதிநிலை அறிக்கைகளுக்குப் பின் இருக்கும் 5 முக்கிய நபர்கள் இவர்கள்தான்!

அடுத்த வாரத்தின் மத்தியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கிறார். கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டபிறகு, சுற்றுலாத்துறை போன்ற பல சேவைத் துறைகள் கடும் சரிவைச் சந்தித்தன.

தனிநபர் மற்றும் குடும்பங்களின் சேமிப்பு கொரோனாவின் பாதிப்பால் கணிசமாகக் குறைந்துவிட்டது. மேலும், பொருள்களை வாங்கும் திறனும் மக்களிடம் குறைவாக இருப்பதால், பேரிடருக்கு முன்பு இருந்தது போல் பொருளாதார நிலைமை இப்போது இல்லை.

Finance Minister Nirmala Sitharaman

Also Read: பட்ஜெட் 2022: `நடுத்தர மக்கள் தங்கம் வாங்க புதிய முறை!' - அறிவிப்பை வெளியிடுமா அரசு?

இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில்தான் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யவிருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். எனவே, பல தரப்பட்ட மக்களும், பல்வேறு துறையினரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பட்ஜெட்டாக மாறியிருக்கிறது இந்த 2022-23-க்கான பட்ஜெட்.

இந்த பட்ஜெட்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் முக்கியமான புள்ளிகள் யார் யார் தெரியுமா?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்த பட்ஜெட், நிர்மலா சீதாராமன் நிதியமைச்சரான பின் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட் ஆகும். இவருக்கு முன்பு இந்தப் பதவியில் இருந்த அருண் ஜெட்லி போன்றவர்களுக்கு அவர்கள் காலகட்டத்தில் உலகப் பொருளாதாரச் சூழ்நிலைகள் ஓரளவுக்குச் சாதகமாக இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

கொரோனா காலகட்டத்தில், `கரிப் கல்யான்' மற்றும் `ஆத்மநிர்பார்' போன்ற திட்டங்களை அறிவித்ததன் மூலம் மத்திய அரசின் பொருளாதார முகமாக அறியப்பட்டார் நிர்மலா சீதாராமன்.

சென்ற ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், கட்டுமானத் துறையில் அதிக அளவு பொது முதலீட்டை அதிகரித்ததால் பொருளாதாரம் ஓரளவு மீளக் காரணமாக இருந்தார். இதே போல், இந்த வருடத்திலும் சில சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

1. டி.வி.சோமநாதன் (T.V.Somanathan)

நிதியமைச்சகத்தில் இருக்கும் ஐந்து செயலாளர்களில் மூத்தவர்தான் நிதித்துறை செயலாளராக நியமிக்கப்படுவார். அப்படி நிதித்துறை செயலாளராக ஆகியிருப்பவர்தான் டி.வி.சோமநாதன்.

டி.வி.சோமநாதன்

செலவுத் துறைக்குத் தலைமை வகித்து வருபவரும் இவரே. இன்று அரசாங்கத்தில் இருக்கும் செல்வாக்கு மிக்க அதிகாரிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் சோமநாதன். பிரதமர் அலுவலகத்தில், 2015 - 2017 வரை பணியில் இருந்த இவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர் என்று சொல்லப்படுவதுண்டு. பல்வேறு துறைகளில் செலவுகளைக் குறைத்த பெருமைக்குரியவர் சோமநாதன்.

பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட்டில், இதுவரை இல்லாத அளவுக்கு முதலீட்டு செலவீனங்களே அதிகம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் செலவுகளை எல்லாம் எப்படி செய்யப்போகிறார் என்பது சோமநாதனின் கைகளில்தான் இருக்கிறது.

2. தருண் பஜாஜ் (Tarun Bajaj)

வருவாய்ச் செயலரான இவரும் நிதி அமைச்சகத்துக்கு வருவதற்கு முன்னர் பிரதமர் அலுவலகத்தில் ஐந்து வருடங்கள் பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தருண் பஜாஜ்

பொருளாதார விவகாரங்களுக்கான செயலராக 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட இவர், கொரோனா காலகட்டத்தின்போது `ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தை வகுத்ததில் முக்கியப் பங்காற்றியவர். பிறகு, 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் இவருக்கு வருவாய்த்துறை அளிக்கப்பட்டது.

இவரது, காலகட்டத்தில் நேர்முக மற்றும் மறைமுக வரிகளின் மூலம் எதிர்பார்த்ததைவிட அதிகம் வசூலித்து இருக்கிறது. இதே போல், வருகிற வருடத்திலும் வரி வசூல் செய்வது பஜாஜின் பொறுப்புகளில் ஒன்றாக இருக்கும்.

Also Read: பட்ஜெட் 2022: சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் வரிச் சலுகைகள் என்னென்ன?

ஜி.எஸ்.டி கவுன்சில் உரையாடல்களின்போது மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு நடுவில் இருக்கும் உறவு சுமுகமாக இருப்பதைத் திரைமறைவில் இருந்துகொண்டே உறுதி செய்து வருபவர் தருண் பஜாஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டின், இரண்டாவது பகுதியைத் (part B) தயாரித்தவர் தருண் பஜாஜ்தான் என்பது கூடுதல் தகவல்.

3. அஜய் சேத் (Ajay Seth)

பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர்களாக நியமிக்கப்படுவதற்கு முன் பெங்களூரு மெட்ரோவின் மேலான் இயக்குநராக இருந்தார் அஜய் சேத். மத்திய அரசின் நிதித் துறையில் இணைச் செயலராக இருந்த அனுபவமுள்ளவர் இவர்.

அஜய் சேத்

நிதிநிலை அறிக்கையைத் தயார் செய்யும் பிரிவில் இருக்கும் அனைவரும் அஜய்யிடம்தான் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். அவற்றைத் தொகுத்து அறிக்கையைத் தயாரிக்கும் பணி அஜய் உடையது.

நிதி அமைச்சர் தாக்கல் செய்யவிருக்கும் நிதிநிலை அறிக்கையின் பெரும் பகுதியை சோமநாதனுடன் இணைந்து தயாரிக்கவிருப்பவர் அஜய் சேத்.

4. துஹின் கந்த பாண்டே (Tuhin Kanta Pandey)

முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் தற்போதைய தலைவராக இருப்பவர்தான் பாண்டே. ஏர் இந்தியாவின் விற்பனையில் இவரது பங்கு அளப்பரியது. வரும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் எல்.ஐ.சி.யை ஐ.பி.ஓ (IPO) கொண்டு வருவதன்மூலம் சந்தை பிரவேசம் செய்ய வைக்கும் பொறுப்பு இவரிடமே உள்ளது.

துஹின் கந்த பாண்டே

மேலும், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கண்டைனர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பவன் ஹான்ஸ் மற்றும் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் இன்னும் பல மத்திய அரசின் நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் பொறுப்பும் பாண்டேவிடமே உள்ளது.

எனவே, எதிர்வரும் நிதி ஆண்டிலும் வருடமும் அரசுக்குச் சொந்தமான பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப் படுத்தப்படும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

5. தெபாஷிஷ் பாண்டா (Debashish Panda)

நிதிச் சேவைகள் துறைக்குத் தலைமை வகிப்பவர் தெபாஷிஷ். நிதித்துறை சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளுக்கும் பின் இருப்பவர் இவரே. கொரோனாவால் பல துறைகள் சரிவைச் சந்தித்திருந்தாலும் அதில் நிதித்துறையைச் சேர்ந்த வங்கிகளின் வீழ்ச்சி முக்கியமானது.

தெபாஷிஷ் பாண்டா

ரிசர்வ் வங்கியின் ஓர் அறிக்கை, பொதுத்துறை வங்கிகளைவிடத் தனியார் வங்கிகள் அவசர காலத் திட்டத்தின் மூலம் பல மடங்கு அதிக கடன்கள் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது. கொரோனாவின் தாக்கத்தால் இந்தத் தொகையை வசூலிப்பதில் வங்கிகள் தடுமாறி வருகின்றன.

எனவே, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்பட்டு, வங்கிகளின் சிக்கல்களைத் தீர்த்து, நாட்டின் நிதித் துறையைச் சீரான ஒரு நிலைக்குக் கொண்டுவரும் கடமை டெபாஷிஷிடம் உள்ளது.

பட்ஜெட் 2022-க்கான நிதிநிலை அறிக்கைக்குப் பின் இருக்கும் மிக முக்கியமான புள்ளிகள் இவர்களே.



source https://www.vikatan.com/business/finance/who-were-the-5-key-members-behind-structuring-of-upcoming-union-budget-2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக