Ad

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

உலக நாடுகளின் பாராமுகம்: பஞ்சம், பட்டினியால் சிறுநீரகத்தை விற்று உணவு உண்ணும் ஆப்கானிஸ்தான் மக்கள்!

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியதிலிருந்து, உலக நாடுகள் அந்நாட்டுக்கு வழங்கி வந்த அனைத்து உதவிகளையும் நிறுத்திக்கொண்டன. இதனால், ஏற்பட்ட பொருளாதாரச்சரிவு, உணவுத்தட்டுப்பாட்டால் மக்கள் வேலைவாய்ப்பிழந்து, வருமானமின்றி வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். கொடுமையின் உச்சகட்டமாக, தற்போது ஆப்கானிய மக்கள் தங்களின் உடல் உறுப்புகளையும், பெற்றக் குழந்தைகளையும் விற்று, உணவு உண்ணும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் தரையிறங்கிய ஆப்கானிஸ்தான் மக்கள்

உலக நாடுகளின் நிதி உதவிகள் நிறுத்தம்:

கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில், தாலிபன்கள் ஆப்கனிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அதன்பின்னர் அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டுவந்த சர்வதேச நிதி உதவிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. வெளிநாட்டு முதலீடுகள், வர்த்த உறவுகள், போக்குவரத்து என அனைத்து நடவடிக்கைகளும் துண்டிக்கப்பட்டன. தலைநகர் காபூலில் இருந்த அனைத்து பெரிய நிறுவனக்களும் நாட்டைவிட்டு வெளியேறின. அமெரிக்கா 9400 கோடி டாலர்கள் ரிசர்வ்வை வங்கியிலிருந்து நிறுத்தி வைத்துவிட்டது. உலக வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்டவையும் ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவி வழங்குவதை முற்றிலுமாக குறைத்துக்கொண்டன. இதனால் ஆப்கன் பொருளாதாரம் வரலாறு காணத அளவுக்கு வீழ்ந்தது.

பஞ்சத்தினால் ஏற்பட்ட பரிதாப நிலை:

இதனால், ஆப்கானிதானில் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்தது. உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு பசி, பஞ்சம் தலைவிரித்தாடியது. சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து வருமானமின்றி தவித்தனர். பசிக்கொடுமையால் ஆப்கானிய மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பொருட்களை விற்கத்தொடங்கினர்.

ஆப்கானிஸ்தான் குழந்தைகள்

காபூலின் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்திவந்த, ஃபிரிட்ஜ், டிவி, கட்டில், தரைவிரிப்புகள் என விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்களையெல்லாம் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்தனர். அதன்மூலம் கிடைக்கும் சொற்ப பணத்தில் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பசியாற்றி வந்தனர். பின்னர், வீட்டுப்பொருட்களும் தீர்ந்துபோக, தங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளையே விற்கும் நிலைக்குச் சென்றனர்.

தாலிபன் கொடி

ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை:

ஆப்கானிஸ்தானில் வாழக்கூடிய 95 சதவிகித மக்களுக்கு போதுமான உணவு இல்லை என ஐ.நா. அறிக்கை வெளியிட்டது. சுமார் 2.30 கோடி மக்கள் பட்டினியில் சிக்கித்து வருவதாக பொருளாதார வல்லுனரான அப்துல் நசீர் ரிஷ்டியா உள்ளிட்டோர் கவலை தெரிவித்தனர்.

மேலும், குழந்தைகளின் நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாக ஐ.நா.வின் குழந்தைகள் பாதுகாப்புக்கான யூனிசெஃப்(UNICEF) அமைப்பு அறிக்கை வெளியிட்டது. அதில், 50 லட்சம் ஆப்கானிய குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் சாவின் விளிம்பில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டது.

வீட்டுப்பொருட்கள், குழந்தைகள்... இப்போது உடல் உறுப்புகள்:

​ஆப்கானிய மக்கள் உணவுக்காக, உடைமைகளையும் பெற்றக்குழந்தைகளையும் விற்கும் கொடூரநிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இந்த நிலையில், வறுமையை தாக்குப்பிடிக்க, ஆப்கானிஸ்தானின் 5 வயது சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் சிறுநீரகத்தை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் உணவு உண்டுவருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும், இது சம்மந்தமான புகைப்படங்கள், காணொளிகள் இணையத்தில் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.

ஆப்கானிஸ்தான்

குறிப்பாக, ஆப்கானிஸ்தானின் ஹெரட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாள்களில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்திருக்கின்றனர். மேலும், ஒரு சிறுநீரகத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,000 வரை கிடைப்பதாகவும், அந்தப் பணத்தை வைத்து தற்காலிகமாக தங்களை சாவின் பிடியிலிருந்து தற்காத்துக்கொள்வதாகவும் அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

பசிகொடுமையில் கிட்னையை விற்கும் ஆப்கானிய மக்கள்

உலக நாடுகளுக்கு டேவிட் பஸ்லி வேண்டுகோள்:

இந்த நிலையில் ஐ.நா.வின் உலக உணவு திட்டத் தலைவர் டேவிட் பஸ்லி(David beasley), `ஆப்கானிஸ்தான் மக்கள் பலரும் வறுமை காரணமாக தங்களின் உடல் பாகங்களையும், குழந்தைகளையும் விற்றுக் கொண்டிருப்பதாகவும், எனவே உலக நாடுகள் உடனடியாக ஆப்கன் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்' எனவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து விரிவாகப் பேசிய டேவிட் பஸ்லி, ``ஆப்கனில் தற்போது 4 கோடி மக்களில் 2.3 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். இதனால், ஆப்கானிஸ்தான் மக்களில் பலர் ஒருவேளை சொற்றுக்காக தங்களின் சிறுநீரகங்களை விற்று வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் 5 வயது, 10 வயது பெண் குழந்தைகளையும் விற்று வருகின்றார்கள். இதே நிலைத் தொடர்ந்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் 97 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் செல்லக்கூடிய அபாய நிலை ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

டேவிட் பஸ்லி (David beasley), ஐ.நா.வின் உலக உணவு திட்டத் தலைவர்

மேலும், உலக நாடுகள் இனியும் தாமதிக்காமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிசெய்ய முன்வர வேண்டும் என ஐ.நா. சார்பில் மீண்டும் ஒருமுறை உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்!" என அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தான்

இந்த நிலையில், உலக நாடுகளுக்கு முன்னுதாரனமாக இந்திய அரசாங்கம், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 50,000 டன் கோதுமை, அத்தியாவசிய மருந்துப்பொருட்களை வழங்க முடிவுசெய்திருக்கிறது. மேலும், பல்வேறு நாடுகள் உதவ முன்வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/afghan-people-forced-to-sell-their-kidney-for-survival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக