Ad

திங்கள், 24 ஜனவரி, 2022

கதை அல்ல... வீர்யமான விதை | உலக சினிமா #MyVikatan

19வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தரிசித்த அற்புதங்களில் ஒன்று ‘த சீட்’.

‘ஏன் என்ற கேள்வி கேட்டால் இங்கு வாழ்க்கை இல்லை. ‘நான்’ என்ற எண்ணம் கொண்ட மனிதன் மட்டுமே வாழ முடியும்’ என்பதை முதலாளித்துவ உலகம் நமக்கு வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் உணர்த்திக்கொண்டே இருக்கும்.

எளிய மனிதர்களின் வலி மிகுந்த வாழ்வியலை பதிவு செய்வதில் மேதமை கொண்ட இயக்குநர் கென்லோச். அவரது பாணியில் ஜெர்மன் வாரிசாக வந்திருக்கும் பெண் இயக்குநர் மியா மாரியல் மெயர். அவரது இரண்டாவது படமான ‘த சீட்’ திரைப்படத்தில் இரு மடங்கு பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளார். அப்பா, அம்மா, பதின்வயது மகள் ஆகிய மூவரது வாழ்க்கையை சொல்லிய விதத்தில் இன்றைய ஜெர்மனியின் நிலவரத்தை கவலையோடு பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மியா மாரியல் மெயர்.

The Seed

படத்தின் அனைத்துக் காட்சிகளும் உழைப்புச் சுரண்டலையும் பண்பாட்டுச் சிதைவையும் உரத்தக் குரலில் உணர்த்துகின்றன. ஆண்டாண்டு காலம் விசுவாசத்தோடு உழைத்து இருந்தாலும் முதலாளித்துவம் தன் பிழைப்பு கருதி பிழைப்புவாதிகளிடம் பொறுப்பைச் சுமத்தி விடும்.

ஒரே நாளில் ‘மேலாளர்’ என்ற தளத்திலிருந்து தூக்கியடிக்கப்பட்ட நாயகன் முதளாளித்துவம் தனது கழுத்தில் இடும் முடிச்சுகளை அவிழ்பதில் அமிழ்ந்து போகிறான். பல்லாண்டுகளாக உழைத்த உழைப்பாளியை சப்பை காரணம் சொல்லி பதவி நீக்கம் செய்கிறது நிர்வாகம். நாயகன் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் திரட்டிப் போராடுகிறான். அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாற்றுத் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து திகைக்க வைக்கிறது நிர்வாகம்.

‘வேலைக்குப்போறியா? வீட்டுக்குப் போறியா?’ என்ற கேள்வியில் தொழிலாளர் ஒற்றுமை குலைந்து போகிறது. வேற்றுமையை விதைத்து ஒற்றுமையை சிதைப்பது முதலாளித்துவத்தின் கை வந்த கலை.

கை விடப்பட்ட நாயகன் புழு போல் சுருண்டு விடாமல் புலி போல் தனித்து பாய்கிறான். ‘தானாக எல்லாம் மாறி விடாது’ என்ற உண்மைக்கு உரை எழுதுகிறான்.

Mia Maariel Meyer, Hanno Koffler
Mia Maariel Meyer

‘த சீட்’ திரைப்படத்தின் திரைக்கதையில் பங்காற்றி கதையின் நாயகனாக களமிறங்கிய ‘ஹன்னோ கோஃப்லர்’ அனைத்துக்காட்சிகளிலும் அதகளம் செய்திருக்கிறார். இயக்குநரோடு இணைந்து ஒளிப்பதிவாளர் ‘பெல்கோ லக்முண்ட்’ அனைத்து சட்டகங்களையும் செதுக்கி இருக்கிறார்.

'படத்தில் கதை இருந்தால் மட்டும் போதாது; அதில் வீர்யமான விதை இருக்க வேண்டும்’ என்ற உண்மையை உணர்த்திய படம் ‘த சீட்’.

International title: The Seed

Original title: Die Saat

Country: Germany

year: 2021

Directed by: Mia Maariel Meyer

Screenplay: Mia Maariel Meyer, Hanno Koffler



source https://cinema.vikatan.com/tamil-cinema/german-movie-seed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக