``எதிர்பார்த்தபடியே கொரானாவைக் காரணம் காட்டி கிராம சபைகளை ரத்து செய்திருக்கிறது தமிழக அரசு. இந்த விஷயத்தில், அதிமுகவிற்கு சளைத்தது அல்ல திமுக என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த தயாராக இருக்கும் மாநில அரசால் கிராம சபைகளை மட்டும் நடத்த முடியாதா?''
ஜனவரி 26 குடியரசுத் தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணைக்கு எதிர்வினையாக, மிகக் காட்டமான அறிக்கை ஒன்றை மக்கள் நீதி மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ளது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர், செந்தில் ஆறுமுகம் வெளியிட்டு அந்த அறிக்கையில்,
``பொங்கல் பரிசுப் பொருட்களின் தரம் பற்றியும், அதை வாங்குவதில் அடித்த கொள்ளை பற்றியும் கிராமசபைகளில் பேசப்படும். அது உள்ளாட்சித் தேர்தல் வெற்றியைப் பாதிக்கக் கூடும் எனும் ஆளும் கட்சியின் அச்சமே இதற்குக் காரணம் என சந்தேகிக்கிறோம். கோவிட் காலத்தில் டாஸ்மாக் கடைகளைப் ‘பாதுகாப்பாக’ நடத்த முடிகிற தமிழக அரசு ’கிராம சபை’ என்று வரும்போது மட்டும் கொரானாவைக் காரணம் காட்டுவது ஏற்புடையதல்ல'' எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மட்டுமல்லாது டாஸ்மாக், எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், கடந்த அதிமுக அரசு எப்படிச் செயல்பட்டதோ, அதேபோலத்தான் தற்போதைய திமுக அரசும் செயல்படுகிறது என்கிற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். இதுகுறித்து, நம்மிடம் மக்கள் நீதி மய்யத்தின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் பேசும்போது,
`` ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என திமுகவினர்தான் அழகாகச் சொல்வார்கள். அதேதான் தற்போது தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடக்கும்போது, கிராமசபைக் கூட்டம் நடத்த முடியாதா என இதே முதல்வர்தான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கேள்வி எழுப்பினார். அதேபோல, டாஸ்மாக்கை மூடவேண்டும் என அரசுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினார். ஆனால், இன்று டாஸ்மாக் திறந்திருக்கிறது. கிராமசபைக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. அரசு மருத்துவர்கள் போராடியபோது நேரில் சென்று ஆதரவளித்தார் முதல்வர். ஆனால், ஆட்சி மாறிய பிறகும் அவர்கள் கோரிக்கைகள் நிறைவேறாமல், அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் கொடுத்த கிரைண்டர் ஓடவில்லை. இந்த ஆட்சியில் பொங்கலுக்குக் கொடுத்த வெல்லம் உருகி ஓடியது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விஷயத்தில், விசாரணைக்கு உத்தரவிட்டது நல்ல விஷயம்தான். ஆனால், அதிகாரிகளும் அமைச்சரும் மட்டுமல்ல முதல்வரும்தான் அந்தத் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இரண்டு முறை மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டபோதும், இன்னும் தடுப்பு நடவடிக்கைகளை இந்த அரசு தொடங்கவில்லை. திரும்ப ஒரு மழை பெய்தால் பழையபடி மக்கள் தத்தளிக்க வேண்டியதுதான். மக்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகள், அடிப்படைக் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு தேவையில்லாத விஷயங்களில்தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். நீட்டை ரத்து செய்யும் சூட்சுமம் எங்களுக்குத் தெரியும் என்றார்கள். இன்றுவரை அது என்னெவென்று சொல்லவில்லை. எட்டுவழிச் சாலை விஷயத்திலும் தெளிவான பதில் இல்லை. சுறுசுறுப்பான முதல்வராக இருக்கிறார். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மக்களுக்கு பயனுள்ள வகையில் ஆட்சி நடைபெறவில்லை என்பதே உண்மை. ஆட்சியைப் பிடிப்பதற்காக பல வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். அதை நிறைவேற்ற முடியாமல் தற்போது திணறி வருகிறார்கள் என்பதே உண்மை'' என்கிறார் அவர்.
``இந்த விஷயங்களில் மட்டுமல்ல, கடந்த ஆட்சியைப்போலவே ஒடுக்கப்பட்ட மக்களின்மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கும் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்டவர்களின்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது'' என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர், இடும்பாவனம் கார்த்தி. அவர் பேசும்போது,
``சாத்தான்குளம் படுகொலை சம்பவம் நடந்தபோது, காவல்துறையினர்மீது கொலை வழக்கு பதிவு செய்யாமல் தவறை மூடி மறைக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்ததுதான் மிகப்பெரிய துரோகம். அதேபோலத்தான் இந்த ஆட்சியிலும், பிரபாகரன் என்கிற மாற்றுத்திறனாளியை, நாமக்கல் கிளைச் சிறையில் கொலை செய்திருக்கிறார்கள். ஆனால், அந்தக் காவல்துறை அதிகாரிகள்மீது இன்னும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றும் உத்தரவையும் மட்டுமே வழங்கியிருக்கிறார்கள். எனில், கடந்த ஆட்சியில் நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது.
அதிமுக ஆட்சியைப்போலவே பாதிக்கப்பட்டவர்களின்மீதே வழக்கு பதிவு செய்யும் நிலை இந்த ஆட்சியிலும் தொடர்கிறது. உதாரணமாக, திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில் பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்கள் மீதே இரண்டு பொய் வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. பாஜகவினர் வியாபாரி ஒருவரைத் தாக்கிய விஷயத்திலும் பாதிக்கப்பட்டவர்மீதே வழக்கு போட்டார்கள். பொங்கல் தொகுப்புப் புளியில் பல்லி இருந்ததைச் சொன்னவர் மீது வழக்கு பதிவு செய்தார்கள். ஆனால், பெரியாரையும் கலைஞரையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்த ஹெச்.ராஜாவின்மீது அவதூறு வழக்கு பதிவு செய்வதற்கான அத்தனை முகாந்திரம் இருந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, முதல்வர் கடிதம் எழுதுகிறார்.
கடந்த ஆட்சியில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் நேரடியாக நடந்துவந்தது. இந்த ஆட்சியில் மறைமுகமாக நடந்துவருகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையாக விமர்சனம் செய்தவர்கள், ஆளும் கட்சியான பிறகு பாஜகவினரிடம் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார்கள். கேட்டால், அப்போதுதான் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் கிடைக்கும் என்கிறார்கள். இதையேதான், கடந்த அதிமுக அரசும் சொன்னது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது. இந்த ஆட்சியிலும் இப்போதுவரை அதுதான் நீடிக்கிறது. தை 1-ம் தேதியில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என வெளியில் சொன்னார்களே தவிர, அதிகாரபூர்வமாக இன்னும் மாற்றவில்லை. அதேபோல,எண்ணூர் அனல்மின் நிலையங்கள் போன்ற நாசகாரத் திட்டங்களுக்கு இந்த ஆட்சியிலும் அனுமதி கொடுக்கப்படுகிறது. நீட், எழுவர் விடுதலையிலும் அதே நிலைதான் நீடிக்கிறது. அதிமுக வெளிப்படையாக செய்ததை, இவர்கள் இலைமறை காயாகச் செய்கிறார்கள் அவ்வளவுதான்'' என்கிறார் அவர்.
மேற்கண்ட விமர்சனங்களை திமுகவின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் முன்வைத்தோம்,
``ஒரு வழக்கை காவல்துறையில் இருந்து, இன்னொரு அமைப்புக்கு மாற்றுவது என்பதே உரிய விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான். உடனடியாக அதைக் கொலை என்று எப்படி முடிவுக்கு வரமுடியும். சாத்தான்குளம் சம்பவத்தை இதனுடன் ஒப்பிட முடியாது. அதேபோல, பரிசுத் தொகுப்பு விவகாரத்தில் அவதூறு தொடரக்கூடாது என்பதற்காகவே அந்த வழக்கு போடப்பட்டது. ஒருவர் அரசின்மீது புகார் கூறும்போது, வழக்குத் தொடுத்து அதனை நிரூபிக்கச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்து அவரை பெரிய ஆளாக ஆக்கிவிட வேண்டாம் என நாங்கள் நினைக்கிறோம். காரணம், அவர் எதிர்பார்ப்பதும் அதைத்தான். கட்சியில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவே இப்படி தடாலடியாக பேசிக்கொண்டிருக்கிறார். அதேபோல, ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் எழுதியுள்ள கடித்தத்தில் எட்டு வழிச் சாலைக்கு ஒத்துழைப்புக் கொடுப்போம் என்று சொல்லவில்லை.
Also Read: அ.தி.மு.க Vs தி.மு.க: தொகுதிப் பங்கீட்டைச் சிறப்பாகக் கையாண்டது யார்? - ஓர் அலசல்!
கடந்த அதிமுக ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆதரவு மனநிலையில் உள்ள அதிகாரிகளில் ஊடுருவிவிட்டார்கள். அதனை எட்டு மாதத்திலேயே சரிசெய்துவிட முடியாது. காரணம், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, கொரோனா, மழை, வெள்ளம் என பல சவால்களை எதிர்கொள்வதிலேயே பல மாதங்கள் கழிந்துவிட்டன. நிர்வாக ரீதியான முறைப்படுத்தல்களை படிப்படியாகத்தான் செய்யமுடியும். மழைத் தடுப்பு நடவடிக்கைகள் முதல்வரின் நேரடியான கண்காணிப்பில் மிக விரைவாக நடந்து வருகிறது. ஓமைக்ரான் பரவல் ஜனவரி கடைசி வாரம், பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்துக்குப் போகும் என வல்லுநர்கள் சொல்கிறார்கள். தவிர, ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படிதான் கூட்டத்தை ஒத்தி வைத்திருக்கிறோம். கிராமசபைக் கூட்டம் நடத்துவதில் எங்கள் அரசுக்கு எந்த அச்சமும் இல்லை. நாங்கள் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், கடந்த ஆண்டு ஜனவரியில் நிலைமை இப்படி இல்லை. கடந்த ஆட்சியும் இப்படி இல்லை. அதனால், அவர்கள் வேண்டுமென்றே நடத்தாமல் இருந்தார்கள்.
பொங்கல் தொகுப்பில் வெல்லம் உருகியதையும் கிரைண்டர் ஓடாததையும் ஒன்றாகப் பார்க்க முடியாது. அதேபோல, டாஸ்மாக்கை மூடுவதற்கான தேவை இப்போது எழவில்லை. நான்கு நாள்கள் அடைப்பதும் பிறகு திறப்பதுமாக இருந்தால்தான், தேவையில்லாத கூட்டம் வரும். இப்போது எந்தவிதப் பிரச்னை இல்லாமலும் நடந்து வருகிறது. மதுக்கடைகளை படிப்படியாகக் குறைக்கவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பமும். ஆனால், அதை முறைப்படி செய்யவேண்டும். தமிழ்ப்புத்தாண்டு இந்த நிமிடம் வரைக்கும் தை 1 இல்லை. ஆனால், ஏப்ரல் மாதத்துக்கு முன்பாகத்தான் எந்த நாள் என்பது தெரியவரும். தவிர, எழுவர் விடுதலை, நீட் உள்ளிட்ட விஷயங்களில் இந்த அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எண்ணூர் உள்ளிட்ட எந்தத் திட்டமாக இருந்தாலும் மக்கள் கருத்து எதுவோ அதைத்தான் இந்த அரசு செயல்படுத்தும். அரசு மருத்துவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறோம். உடனடியாக அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிட முடியாது. படிப்படியாக நிறைவேற்றுவோம்'' என்கிறார் அவர்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/comparison-of-past-aiadmk-rule-with-current-dmk-rule
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக