Ad

வியாழன், 20 ஜனவரி, 2022

`அன்னா ஹசாரே, கெஜ்ரிவால், கிரண்பேடி வரிசையில் மம்தா பானர்ஜி!’ -ரகசியம் உடைக்கிறார் பீட்டர் அல்போன்ஸ்

தேசிய அரசியலில், ஐந்து மாநிலத் தேர்தல்களை எதிர்கொள்ளவிருக்கும் நேரம் என்பதால் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. மத்திய ஆளுங்கட்சியான பா.ஜ.க., மாநிலங்களில் வெற்றிக்கொடி நாட்டுவதற்காக முழு முயற்சி எடுத்துவரும் நேரத்தில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியிலோ நிறையத் தடங்கல்கள்.

வெளிநாடு சென்றுள்ள ராகுல் காந்தி இன்னும் இந்தியா திரும்பவில்லை என்பதில் ஆரம்பித்து, கூட்டணிக் குளறுபடிகள், உட்கட்சித் தகராறுகள் என பிரச்னைகள் ரவுண்டு கட்டிவருகின்றன. இந்தச் சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் சிறுபான்மையினர் நல ஆணைய தலைவருமான பீட்டர் அல்போன்ஸிடம் பேசினேன்....

``நாடே எதிர்பார்க்கக்கூடிய உத்தரப்பிரதேச தேர்தலிலும்கூட காங்கிரஸ் கட்சி கூட்டணி சேராமல் விலகி நிற்பது வெற்றியை வசப்படுத்துமா?''

சோனியா - ராகுல்

''நாங்கள் விலகி நிற்கவில்லை.... சாதி - மதமற்ற, பெண்கள் - பட்டியலின முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட மாற்று அரசியலை முன்னெடுக்க விரும்புகிறோம்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளோடு காங்கிரஸை ஒப்பிட்டுப் பேசமுடியாது. சமுதாயம் சார்ந்த கட்சிகள், சமுதாயத்துக்குள்ளேயே இருக்கிற உட்பிரிவுக் கட்சிகள் என உ.பி களமே சாதியப் போராட்டக் களமாகத்தான் இருந்துவருகிறது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியும் இதுபோன்ற வேஷத்தைப் போட்டுக்கொள்ள முடியாது. உடனடியாக ஒரு கூட்டணியை ஏற்படுத்திவிட முடியும் என்றும் எனக்குத் தெரியவில்லை!

மதவாத அரசியலை முன்னெடுத்துவரும் பா.ஜ.க-வும்கூட, சாதிய வாக்குக் கணக்குகளை நோக்கியே நகர்ந்துவரும் உ.பி தேர்தல் களத்தில் திணறித்தான் வருகிறது. எனவே, காலம்தான் பதில் சொல்லும்!''

''தேசிய அரசியலிலும், பா.ஜ.க-வுக்கு எதிராக காங்கிரஸ் தவிர்த்த கூட்டணியைக் கட்டமைக்க மம்தா பானர்ஜி முயற்சி செய்கிறாரே?''

''கடந்தகாலத்தில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அன்னா ஹசாரே, கெஜ்ரிவால், கிரண்பேடி ஆகியோர் மறைமுக ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். அதாவது, காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சியாக சித்திரிப்பதுதான் இந்த ஒப்பந்த நோக்கம். அதற்குப் பலனாக, அன்னா ஹசாரே தன்னுடைய என்.ஜி.ஓ-வை வசதிப்படுத்திக்கொண்டார். கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிவிட்டார். கிரண்பேடி ஆளுநரும் ஆகிவிட்டார்.

இந்தவரிசையில், இப்போது 'காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டும்' என்ற ஒப்பந்தத்தை செயல்படுத்தும் முயற்சியாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். அவரது இந்த முயற்சிக்கு கைம்மாறாக அவரோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.''

மு.க.ஸ்டாலின்

''மேக்கேதாட்டு அணை விவகார வழக்கில், நல்லதொரு தீர்ப்பு கிடைக்கச்செய்யும் வகையில், தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்தானே?''

''மேக்கேதாட்டு அணை தொடர்பான வழக்கில், திறமையான வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வாதாடுவது, அனைத்துக்கட்சித் தலைவர்களோடு ஆலோசனை, சட்டமன்றத் தீர்மானம், பிரதமரிடம் கோரிக்கை என மிகச் சரியான முன்னெடுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துவருகிறார். எனவே, இந்தப் பிரச்னையில், முதல்வர் காட்டிவருகிற திசையிலேயே தமிழகக் காங்கிரஸும் பயணிப்பதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது.''

''தி.மு.க கூட்டணியில், தொடர்ச்சியாக காங்கிரஸுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்று கே.எஸ்.அழகிரி ஆதங்கப்படுகிறாரே... வரப்போகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலாவது கூடுதல் இடங்கள் கிடைக்குமா?''

''அதைப்பற்றிய தகவல்கள் எதுவும் என்னிடம் இல்லை. இந்தக் கேள்விக்கான பதிலை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்தான் கூறவேண்டும்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறுவதென்பது வேறு...! உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரையில், வெற்றி வாய்ப்புடன் கூடிய தகுதி உள்ளவர்களை எந்தக் கூட்டணியுமே நிராகரித்துவிட முடியாது. ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு விதமான தயாரிப்புகள், தொடர்புகள், உள்ளூர் மக்கள் செல்வாக்கு என அனைத்து அம்சங்களும் தேவையாக இருக்கிறது. ஆக, இத்தனை அம்சங்களும் கூடியிருப்பவர்களை எந்தக் கூட்டணியாலும் நிராகரித்துவிட முடியாது.''

கே.எஸ்.அழகிரி

''அப்படியென்றால், கடந்தகாலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின்போது தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் தகுதிக்கு உரிய இடங்கள் கிடைத்திருக்கின்றன என்கிறீர்களா?''

''கடந்தகாலத்தில், பல்வேறு இடங்களிலும் அரசியல் ரீதியாக தேர்தல் நடைபெறவில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தே.மு.தி.க-வைச் சேர்ந்தவர்களேகூட, தேர்தல் முடிந்த உடனேயே தி.மு.க-வில் வந்து இணைந்துகொண்டார்கள். எனவே, இதில் பெரிய அரசியல் இருப்பதாக பார்க்கவேண்டாம்.

தமிழ்நாட்டளவில் கூட்டணி அமைத்து இடங்கள் ஒதுக்கீடு செய்வதென்பது வேறு. உள்ளாட்சியைப் பொறுத்தளவில், ஒவ்வொரு மாவட்ட அளவிலும் கட்சியின் செல்வாக்கு என்பது வித்தியாசப்படும். உதாரணமாக எங்கள் தென்காசி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகம். எனவே, எங்களுக்கு அதிகமான இடங்களும் கிடைத்தன. இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திலும் கிடைத்தது. எனவே இவையெல்லாம் தவிர்க்கமுடியாதது.

ஆக, காங்கிரஸ் கட்சிக்கு எங்கெல்லாம் அழுத்தமான தலைவர்களும் ஆதரவும் இருக்கிறதோ... அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியைத் தவிர்க்கவே முடியாது!''

Also Read: வேகமெடுக்கும் விஜயலட்சுமி வழக்கு; ஹரி நாடார் கைது - சீமானுக்கு சிக்கல்?!

''பிரதமரின் பஞ்சாப் பயணப் பாதுகாப்பில் எந்தத் தவறும் இல்லை என்று அறிவித்திருந்த அந்த மாநில காங்கிரஸ் முதல்வர், தற்போது நேரடியாக பிரதமரிடமே வருத்தம் தெரிவித்திருக்கிறாரே?''

''பிரதமர் என்பவர் நம் நாட்டிலுள்ள அனைவருக்கும் பிரதமர்தான். இதில், பா.ஜ.க பிரதமர், காங்கிரஸ் பிரதமர் என்றெல்லாம் எந்தவித வேறுபாடும் கிடையாது. எனவேதான், பிரதமரின் பஞ்சாப் பயணம் தடைபட்டுப்போன அன்றே, 'இந்தத் தவறுக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை' என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தேன்.

பஞ்சாப் விவசாயிகள் போராட்டம்

ஆனால், இந்த சம்பவத்தில் நிறைய விஷயங்கள் தெளிவுப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதாவது, பஞ்சாப் மாநில விவசாயிகள் ஏற்கெனவே போராட்டக்களத்தில்தான் இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், பிரதமர் தங்கள் மாநிலத்துக்கே வருகை தருகிறபோது, தங்கள் போராட்டக்குரலை இன்னும் உயர்த்தி அவரது கவனத்தைப் பெற முயற்சி செய்வார்கள் என்பதில் யாருக்குமே சந்தேகம் வேண்டாம். ஆக, இந்த விஷயத்தை மாநில அரசு மட்டுமல்ல... பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தை முழுமையாக தங்கள் கட்டுக்குள் வைத்திருக்கும் எஸ்.பி.ஜி படையும் முன்னரே எதிர்பார்த்திருக்க வேண்டும்.

Also Read: விகடன் ஆப்-ல் தினமும் பரிசுமழை… வாசகர்களின் பேராதரவுடன் #VikatanDailyQuizChallenge

அடுத்து, பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில், முதல்வர் பொறுப்பிலிருக்கக்கூடிய காங்கிரஸ் முதல்வரான சரண்ஜித் சிங் ரொம்பவும் புதியவர். மேலும் இது தேர்தல் நேரமும்கூட. இந்தச் சூழ்நிலையில், போராட்டம் செய்துவரும் விவசாயிகள் மீது தடியடி நடத்திவிட முடியுமா என்பது உள்பட பல்வேறு அரசியல் கேள்விகள் அவருக்குள் இருந்திருக்கலாம். அதற்காக இந்த ஒற்றைக் காரணத்துக்காக பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தை அவர் ஆலோசிக்காமல் விட்டதும் சரியல்ல.

பிரதமரின் பாதுகாப்புக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள 'எஸ்.பி.ஜி' படையில் மூன்றாயிரம் வீரர்கள் உள்ளனர். இந்த மூன்றாயிரம் பேரின் ஒரே வேலை, பிரதமரைப் பாதுகாப்பது மட்டுமே. மாநில அளவில் உள்ள உளவுத்துறையினரே, எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சாதிக்கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்களது நடவடிக்கைகளை முழுவதுமாகக் கண்காணித்து தகவல்களை சேகரித்துவருவார்கள். இந்த உளவுத்துறையினரின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது.

நரேந்திர மோடி

இப்படியிருக்கும்போது, பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பஞ்சாப் மாநிலத்தில், மத்திய உளவுத்துறையினர் எவ்வளவு விழிப்போடு பணி செய்துவருவார்கள். பிரதமரின் பயண வழியில், இத்தனைப் பெரிய போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்பதெல்லாம் இந்த மத்திய உளவுத்துறைக்கு எப்படித் தெரியாமல் போய்விடும்?

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அவர் பிரதமர். அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருப்பவரின் பாதுகாப்பில் எல்லோருமே எவ்வளவு அக்கறை செலுத்தவேண்டும்.... ஆனால், பிரதமரின் கார் அருகே எப்படி பா.ஜ.க-வினர் சென்று கொடி அசைக்க முடிந்தது? இதையெல்லாம் அனுமதித்தது யார்? ஆக இந்த விவகாரத்தில் கட்சிப் பேதமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

எல்லைப்பகுதியில் உள்ள ஒரு மாநிலத்தில், 100 கி.மீ தூரம்வரையில் பிரதமர் சாலைப்பயணமாக செல்ல எஸ்.பி.ஜி படை எப்படி அனுமதி அளித்தது? விவசாயிகள் போராட்டத்தை விடவும், இதுதானே மிகப்பெரிய ரிஸ்க்! எனவே, இந்த விவகாரத்தில், பஞ்சாப் மாநில காவல்துறை பதில் சொல்லவேண்டிய கேள்விகளை விடவும், எஸ்.பி.ஜி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் அதிகம்.''



source https://www.vikatan.com/government-and-politics/politics/congress-senior-leader-peter-alphonse-shares-his-views-on-current-political-happenings

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக