Ad

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

வாழ்வில் இருளை ஒளியாக்கும் தை அமாவாசை வழிபாடு; இன்று மாலை அவசியம் இதைச் செய்யுங்க!

பொதுவாக அமாவாசை என்றாலே அது முன்னோர் வழிபாட்டுக்கான நாள் என்றுதான் பொருள். அதிலும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகியன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதிலும் உத்தராயண புண்ணியகாலத்தில் வரும் தை அமாவாசை மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்கிறார்கள். எனவே இன்று ஏராளமானவர்கள் தங்களின் முன்னோரை வழிபடுவது வழக்கம். இன்று முன்னோரை வழிபட்ட பிறகுதான் தெய்வத்தையே வழிபட வேண்டும் என்பார்கள். அந்த அளவுக்கு இந்த வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்தது.

அவ்வாறு முன்னோரை வழிபட்ட பின்பு இந்தத் தை அமாவாசை நாளில் நாம் கட்டாயம் செய்ய வேண்டிய மற்றொரு வழிபாடு உண்டு. அது அபிராமி அம்மையை வழிபடுவது. பொதுவாக பௌர்ணமியே அம்பிகையை வழிபட மிகவும் உகந்த நாள். ஆனால் தை அமாவாசை அதைவிட உயர்ந்த தினம் என்கிறார்கள்.

அபிராமி அந்தாதி

பொதுவாக அமாவாசை என்பது சந்திரன் ஒளி இல்லாத நாள். சூரியன் சந்திரனைக் கடக்கும்போது சந்திரனின் ஒளி பூமியில் படுவதில்லை. ஜோதிட சாஸ்திரப்படி சந்திரனே மனோகாரகன். எனவே இந்த நாளில் மனம் அலைபாயும். அதிலும் ஜனன கால ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருக்கும் ராசிக்காரர்கள் இந்த நாளில் மிகவும் குழப்பம் அடைவார்கள். மனம் அமைதியாக இருந்தால்தான் வாழ்க்கை குறித்த பல முடிவுகளை எடுக்க முடியும். அப்படி முடிவெடிக்க முடியாமல் மனக் குழப்பத்தில் இருப்பவர்கள் முன்னோரை வழிபடுவதன் மூலம் மனக் குழப்பங்களிலிருந்து வெளிபட முடியும் என்பது நம்பிக்கை. முன்னோரை வழிபட்ட பின்பு இந்த நாளில் இறைவழிபாட்டில் மனம் கூடும்.

தை அமாவாசை அன்றுதான் அபிராமி பட்டருக்கு அன்னை காட்சி கொடுத்து அமாவாசையைப் பௌர்ணமியாக மாற்றினார். இந்த நிகழ்வில் பல்வேறு சூட்சுமங்கள் இருப்பதாகச் சொல்வார்கள்.

சோழநாட்டில் உள்ள சிவ தலங்களில் ஒன்று திருக்கடவூர். இங்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் அபிராமி பட்டர் என்னும் சுப்பிரமணியன்.

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த சரபோஜி மன்னர், திருக்கடவூருக்கு தரிசனம் செய்ய வந்தார். மன்னனைக் கண்டதும் மக்கள் வணங்கி வரவேற்றனர். ஆனால், மன்னர் வந்திருப்பதை அறியாத பட்டர், அவரை வணங்காமல், அன்னை அம்பிகையை தியானித்துக் கண்மூடிய யோக நிலையில் ஆழ்ந்து இருந்தார். இதைக் கண்டவர்கள் மன்னரிடம் பட்டரைக் குறித்து அவதூறு சொன்னார்கள். அதைச் சோதிக்க விரும்பிய மன்னர் அபிராமி பட்டரிடம் 'இன்று என்ன திதி?' என்று கேட்டார். மெய்மறந்த நிலையில் இருந்து மீளாத பட்டர், சற்றும் தாமதிக்காமல், "பௌர்ணமி” என்றார்.

'அப்படியென்றால் இன்று இரவு முழு நிலவு வருமா?' என்று மன்னர் கேட்க, "நிச்சயம் வருமே" என்றார்.

இதைக் கேட்ட மன்னர் கடும்கோபம்கொண்டு, “இன்று இரவு முழுநிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை. இது அரசகட்டளை” என்று கூறிச் சென்றார்.

அபிராமி பட்டரின் வாழ்க்கையில் அதற்கு முன்பு அவரை எல்லோரும் பித்தன் என்றே அழைத்தார்கள். அவர் பக்தி இகழப்பட்டது. உரிய மரியாதை இல்லை. ஆனால் அவற்றை எல்லாம் அவர் பக்தியின் மூலமே கடந்தார். பக்தியின் உச்சத்தில் அம்பிகையையின் திருமுகத்தை தரிசனம் செய்துகொண்டிருந்தவருக்கு அன்னையின் முகம் பௌர்ணமி நிலவாகப் பிரகாசிக்க அன்றைய திதி என்ன என்று கேட்க அவர் பௌர்ணமி என்று சொல்லிவிட்டார். ஆனால் அது ஒரு சோதனை போல அவருக்கு அமைந்துவிட்டது.

பலரும் இன்றைய நாளில் வருத்தப்படும் ஒரு விஷயம், இறைவன் நம் வாழ்வில் அற்புதம் நிகழ்த்துவதே இல்லை என்பதே. ஆனால் நாம் அதைச் செய்ய இறைவனை அனுமதிப்பதில்லை என்பதுதான் உண்மை. இறைமீது பக்தி கொண்டவர்கள் சோதனைகள் வரும்போதுதான் அதிகமாக பக்தி செய்வார்கள். இறையைப் பற்றிக்கொள்வார்கள்.‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே’ என்று இருந்த திருநாவுக்கரசரின் வாழ்வில்தான் இறைவன் நிறைய அற்புதங்கள் செய்தார்.

அபிராமி அந்தாதி

அபிராமிப் பட்டரும் தியானம் கலைந்து எழுந்து நடந்தவற்றை அறிந்தாலும் அவர் மனம் பயப்படவில்லை. அன்று மாலை நெருப்புக்கு நேராக நின்றபோதும் அவர் அம்பிகையைத் துதித்து அந்தாதி பாடினார். அந்தப் பாடல்களில் அம்பிகை மனம் மகிழ்ந்து தன் தோடு ஒன்றைக் கழற்றி வானில் வீச அது பௌர்ணமியாகச் சுடர் விட்டது. அன்னை அந்த நாளில் பக்தனுக்காக இயற்கையையே மாற்றினாள். திருக்கடவூரில் இன்றும் அந்த விழா கொண்டாடப்படுகிறது.

இத்தகைய அற்புதம் நிகழ்ந்த நாளில் அபிராமி பட்டர் பாடியருளியதே அபிராமி அந்தாதி. எந்த அந்தாதியைப் பாடி அம்பிகையை பட்டர் வழிபட்டாரோ அந்த அந்தாதியை இன்றும் பாடுவது மிகவும் சிறந்தது. வாழ்வில் இன்பமும் துன்பமும் தொடர்ந்து வரும் என்பார்கள். அதற்கேற்ப அந்தாதிப் பாடல்களும் முடியும் சொல்லில் தொடங்கும் தன்மையுடையுன. வீட்டில் விளக்கேற்றி அம்பிகையை மனதில் நிறுத்திப் பாடினால் வாழ்வில் உள்ள துன்பங்கள் எல்லாம் விலகும் என்பார்கள்.

அபிராமி அந்தாதி

எனவே இன்று மாலை அனைவரும் தவறாமல் அம்பிகையின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் ஆலயத்துக்குச் சென்று அம்பிகையை தரிசனம் செய்வதும் நம் இன்னல்களை எல்லாம் தீர்க்கும் என்பது நம்பிக்கை. கூடவே அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்தால் பலன்கள் கிடைக்கும்.

அபிராமி அந்தாதியிலேயே உலக நன்மைகள் பலவற்றையும் அருளும் பாடல்கள் உண்டு. குறைந்தபட்சம் அவற்றைப் பாடி இந்த நாளில் அம்பிகையைப் போற்றுவோம்.



source https://www.vikatan.com/spiritual/gods/glory-of-worship-abirami-ambigai-on-thai-amavasai-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக