Ad

செவ்வாய், 18 ஜனவரி, 2022

`நடந்ததை நினைச்சா வேதனையா இருக்கு’ -வருந்திய ராஜேந்திர பாலாஜி; நிர்வாகிகள் சந்திப்பில் நடந்தது என்ன?

தமிழக அரசில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மோசடி புகார் எழுந்தது. இது தொடர்பாக விருதுநகர் காவல்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கக் கருதித் தலைமறைவானார் ராஜேந்திர பாலாஜி. இதையடுத்து அவரைப் பிடிக்கத் தமிழக காவல்துறையினர் எட்டு தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜனவரி 5-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹசன் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்து அழைத்து வந்தனர். அதன்பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ``ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” எனத் தெரிவித்த நீதிபதிகள், ``அவரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்களை ஏன் துன்புறுத்தினீர்கள்?” என்றும் கேள்வி எழுப்பினர்.

ராஜேந்திர பாலாஜி

``முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பிறகு அவருக்கு முறையாகச் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் உடனடியாக தலைமறைவானர்” எனத் தமிழக அரசு பதிலளித்தது. மேலும், ``தலைமறைவாக இருக்கும் நபர் ஜாமீன்கோரி எப்படி உச்ச நீதிமன்றத்தை நாட முடியும்?” என்றும் தமிழக அரசு பதில் கேள்வி எழுப்பியதோடு, ``இந்த விவகாரத்தில் நீதிபதிகள் ஒருதலைபட்சமாகச் செயல்படக்கூடாது” எனத் தங்களின் ஆட்சேபனையையும் தமிழக அரசு பதிவு செய்தது.

Also Read: ``விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் வரத் தயார்!" - விருதுநகர் எஸ்.பி-க்கு ராஜேந்திர பாலாஜி கடிதம்

விசாரணை முடிந்து ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனைகளுடன் நான்கு வாரக் காலத்திற்கு இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கியது. அவர் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும், வெளியூர்களுக்குச் செல்லக்கூடாது, காவல்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. சிறையிலிருந்து 12.01.2022 அன்று வெளியில் வந்த ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் அவரது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். கைது நடவடிக்கையின்போதும் சிறையிலிருந்து வெளியில் வந்த போதும், ஜாமீன் வழக்கின் போதும் தலைமை உதவவில்லை எனவும் தொலைப்பேசியில் கூட அழைத்து பேசவில்லை எனவும் ராஜேந்திர பாலாஜி வருத்தத்தில் இருப்பதாகச் செய்திகள் பரவின.

முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம்

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் அணியின் சார்பில் இன்பதுரை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்கள். ராஜேந்திர பாலாஜி உடனான சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தோம்.

``எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் நாங்கள் ராஜேந்திர பாலாஜியைச் சந்திக்கச் சென்றோம். வெளியில் உலாவும் எந்தச் செய்தியிலும் உண்மையில்லை. தலைமை மீது ராஜேந்திர பாலாஜிக்கு வருத்தமும் இல்லை. முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய போது கட்சி சார்பில் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறது அ.தி.மு.க. அதனடிப்படையில் தான் ராஜேந்திர பாலாஜியைச் சந்திக்கச் சென்றோம்” என்றனர் கட்சி நிர்வாகிகள்.

தொடர்ந்து பேசியவர்கள், ``முன்னாள் அமைச்சர் வேலுமணி, வழக்கறிஞர் இன்பதுரை, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்று மதுரையில் ஒன்றாகச் சந்தித்துக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் திருத்தங்கலில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி

வீட்டுக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை வரவேற்ற ராஜேந்திர பாலாஜி, `இந்த வழக்கு தன் மீது தி.மு.க சார்பில் வேண்டுமென்றே புனையப்பட்டுள்ளது. என் மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இதை தி.மு.க அரசு கையாண்டு வருகிறது. அதைப் புரிந்துகொண்டு நின்று எதிர்கொள்ளாமல் தேவையில்லாத சர்ச்சையை நானே உருவாக்கிக் கொண்டேன்' எனத் தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read: `பாஜக-வினர் செய்த உதவியை கூட ஓ.பி.எஸ், இ.பி.எஸ் செய்யவில்லை?' - அப்செட்டில் ராஜேந்திர பாலாஜி?!

ராஜேந்திர பாலாஜியை ஆற்றுப்படுத்திய நிர்வாகிகள், `தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக ஊழல் புகார் தொடங்கி பல்வேறு அவதூறுகளைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இதற்கெல்லாம் நாம் அஞ்சப் போவதில்லை. நமக்குக் கட்சியின் தலைமையும் தொண்டர்களும் உடனிருப்பார்கள். இதற்கெல்லாம் அஞ்சுவோம் என தி.மு.க நினைத்தால் அது அவர்களின் அறியாமை. எனவே, எதையும் யோசிக்காமல் தைரியமாக இருங்கள். நாங்கள் இருக்கிறோம். தலைமை உங்களுடன் இருக்கிறது' எனத் தைரியம் சொல்லியிருக்கிறார்கள்.

பின்னர், அங்கிருந்தபடியே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் தொலைப்பேசியில் பேச வைத்திருக்கின்றனர். `சிறையில் தனி அறைதான் கொடுத்திருந்தனர். ஆனால், அந்த அறையில் எந்த வசதியும் இல்லை. இருந்த நாள்களில் திடீர்த் திடீரென அறைக்குள் நுழைந்து சோதனை என்ற பெயரில் ஏதாவது ஒரு வகையில் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தனர். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதைவிடக் கொடுமை என்னுடைய அறையின் அருகில் சிலை திருடன் ஒருவனையும் தங்க வைத்தனர். கடவுள் நம்பிக்கை மிக்க, சிலை செய்யும் தொழில் செய்யும் என் அருகில் அப்படி ஒருவரைத் தங்க வைத்தது என்ன மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கத்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். தி.மு.க-வினர் தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதற்காக இந்த அளவு இறங்குவார்கள் என நான் சிறிதும் நினைக்கவில்லை' என நொந்து கொண்டாராம். பின்னர் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தனியாக ஆலோசனை செய்தவர் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

ராஜேந்திர பாலாஜி

அரசியல் மேடைகளில் பேசுவது போலவே தன்னுடைய நிலைமை குறித்து நகைச்சுவையோடு அவர் கலந்துரையாடல் செய்தது சென்றவர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. முன்னைப்போல அரசியலில் இன்னும் தீவிரமாகச் செயல்பட இந்த சந்திப்பு உத்வேகம் தரும் எனக் கிளம்பும் போது செல்லி அனுப்பினார்” என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/admk-ex-ministers-met-with-rajendra-balaji-whats-happened-in-this-meeting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக