Ad

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

புதுக்கோட்டை: `2 மாத சம்பளம் வழங்கவில்லை..!’ - அலுவலகத்தை சூரையாடிய ஆசிரியை சஸ்பெண்ட்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியைச் சேர்ந்தவர் தைலம்மை. மணமேல்குடி அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் பள்ளிக்கு முறையாக வருவதில்லை, அதிகாரிகளுக்கு முறையாக தகவல் கொடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே தான், இவருக்கு கடந்த சில மாதங்களாவே ஊதியம் வழங்கப்படவில்லை, வட்டாரக் கல்வி அலுவலரால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த தைலம்மை, மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த கணினி உள்ளிட்ட பொருட்களை கீழே தள்ளி உடைத்திருக்கிறார்.

மேலும், ஆத்திரம் தீராத அவர் அங்கிருந்த ஆவணங்களை தூக்கியெறிந்ததோடு, வட்டாரக் கல்வி அலுவலரை தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அந்த வீடியோவில், அந்த ஆசிரியை, வட்டாரக் கல்வி அலுவலரை சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும் புகார் கிளம்பியிருக்கிறது.

இதுகுறித்து கல்வித்துறை சார்பில் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஆசிரியை தைலம்மை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில், அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன், ஆசிரியை தைலம்மையை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அலுவலகப் பொருட்களை சேதப்படுத்தியது குறித்து ஆசிரியை மீது மணமேல்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, ``ஆசிரியையின் நவம்பர், டிசம்பர் மாத சம்பளம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளானவர், இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியை தைலம்மையை பணியிடை நீக்கம் செய்துள்ளோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலரிடமும் விசாரித்து வருகிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/teacher-suspend-after-looted-the-education-office

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக