Ad

ஞாயிறு, 30 ஜனவரி, 2022

நடால் - கடல் நீ, கரையும் நீ, காதல் கூட நீ!

கிணற்றுக்கு அருகில் கிரிக்கெட்டோ கால்பந்தோ விளையாட பயப்படும் மனம், மகா சமுத்திரத்தின் மடியில் விளையாட அஞ்சுவதில்லை. எங்கு பந்தை விழுங்கிவிடுமோ என்று சந்தேகிப்பதில்லை. கடல் - அனுப்புவதையெல்லாம் உடனே திருப்பி அனுப்பிடும் என்ற நம்பிக்கையை எப்போதும் கொடுக்கிறது. நடால் போல்!

நடால் - ஒரு பேரதிசயம். அனைத்தையும் மறக்கச் செய்து தன்னை நோக்கி நம்மை இழுத்துக்கொண்டே இருக்கும் பெரும் காந்தம். கடல் போல்!

ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனல் ஐந்தாவது செட்டுக்குச் சென்றுவிட்டால் டேனி மெத்வதேவை வெல்வது கடினம் என்றார்கள். மெத்வதேவின் டிஃபன்ஸை, அவர் மனநிலையை உடைப்பது கடினம் என்றார்கள். முதல் இரண்டு செட்களையும் தோற்றபோது, கடந்த 15 ஆண்டுகளில் நடால் கம்பேக் கொடுக்கவில்லை என்றார்கள். தொலைக்காட்சியில் காட்டப்பட்ட Win Predictor, 90 சதவிகிதம் மெத்வதேவ் தான் ஜெயிப்பார் என்றது. முதல் செட்டை வென்ற 37 ஹார்ட் கோர்ட் (hard court) போட்டிகளிலும் அந்த ரஷ்ய வீரர் வென்றிருக்கிறார் என்றார்கள்.

Rafael Nadal

இந்த எண்களெல்லாம் கடற்கரை மணலில் எழுதி வைத்ததுபோல். நடால் எனும் பெருங்கடல் நேற்று எழுப்பிய பேரலையில், இவை மறைந்து போய்விட்டன! ஆனால், 21 என்ற எண்ணின் தடத்தை மட்டும் விட்டுச் சென்றிருக்கிறது அந்த அலை. வரலாற்றில் அழிக்க முடியாத சுவடாகவும் அது பதிந்திருக்கிறது.

நேற்று, மெத்வதேவ் அனுப்பிய ஒவ்வொரு பந்தும் திருப்பி அனுப்பப்பட்டது. எதிராளியைத் தவறு செய்ய வைக்கும் மெத்வதேவே தவறு செய்யும் வரை பந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன. அவரின் மிகப்பெரிய ஆயுதமான அந்த அதிவேக ஃபர்ஸ்ட் செர்வ்கள் பெரும்பாலும் திருப்பி அனுப்பப்பட்டன. அனைவரையும் குலைக்கும் அவரது பேக்ஹேண்ட் ஷாட்கள் திருப்பி அனுப்பப்பட்டன. கடைசியில் அதிகம் முயற்சி செய்யப்பட்ட டிராப்கள், வின்னர்களாக மாறும் என்று கருதப்பட்ட அவரது double handed backhand ஷாட்கள் எல்லாமே திருப்பி அனுப்பப்பட்டன. அதுவும் 5 மணி நேரம், 24 நிமிடங்கள் ஆனபோதும்!

35 வயது. 2 மாதங்களுக்கு முன்பு வரை விளையாடுவாரா என்பது உறுதியில்லை. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஐந்து மாதங்களில் ஒரேயொரு தொடரில்தான் விளையாடியிருந்தார். ஆனால், எதுவும் கரை தாண்டும் அக்கடலைத் தடுக்கவில்லை. டென்னிஸின் எதிர்காலம் என்று கருதப்படும் மெத்வதேவும் தடுக்கவில்லை. போட்டி முடிந்ததும், “நீங்கள் சோர்வடையவே இல்லையா” என்று நடாலிடம் கேட்டிருக்கிறார் மெத்வதேவ். கடலை நோக்கி வீசும் நானும் நீங்களும்தானே சோர்வடைகிறோம். அலைகள் ஓய்வதில்லையே, டேனி! ஆழ்கடல் உறங்குவதில்லையே. நடால் - அந்தக் கடல் போல்.

*****

Rafael Nadal

கடல் ஆழமானதுதான். அகலமானதுதான். ஆனால், எந்த அளவுக்கு அதன் எல்லைகள் பரந்து விரிந்து கிடக்கிறதோ, அந்த அளவுக்கு நம் எல்லையைச் சுறுக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. கால்கள் கரையைத் தொட்டவுடன், துப்பிய அலையை இழுப்பதுபோல் நம்மை இழுக்கத் தொடங்கிவிடும். அருகில் சென்று நின்றதும் கால்களை நனைத்து, நம்மை அப்படியே நிறுத்திவைக்கும். நனைத்துச் செல்லும் அலைகள், மனதுக்குள் இருந்ததையெல்லாம் அள்ளிச் செல்லும். பார்வை விரிந்து கடலைப் பார்க்கப் பார்க்க, நம் உலகமும் வாழ்க்கையும் சுருங்கத் தொடங்கும். நம் கண் முன் இருக்கும் காதலனையோ, காதலியையோ மட்டும்தான் புலன்கள் உணரும். இல்லையேல், பிரிந்து சென்ற அவர்களின் முகங்களை, சூரியக் கதிரின் பிரதிபலிப்பிலோ, சந்திரனின் பிம்பத்திலோ படம் பிடித்துக் காட்டும்.

கடற்கரையில் நிற்கும்போது கவனித்திருக்கிறீர்களா? அந்த அலைகளின் சத்தத்தை கேட்கத் தொடங்கிவிட்டால், வேறு எதுவும் கேட்காது. நாய்கள் குரைக்கும் சத்தமோ, காகம் கரையும் சத்தமோ கேட்காது. பக்கத்திலிருக்கும் காதல் ஜோடிகளின் முத்தச் சத்தமோ, காதலைத் தொலைத்தவரின் புலம்பல் சத்தமோ கேட்காது. அங்கு நம் மனதின் ஓசையும், அலையின் ஓசையும் தவிர்த்து எதுவும் இருக்காது.

கடல் - ஒவ்வொருவரின் உலகத்தையும் நான்கு அடிகளுக்குள் சுருக்கி, சவுண்ட் ப்ரூஃப் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்ப அதிசயம். நடால் போல்.

ஆயிரம் ஆயிரம் வேலைகள் இருக்கும். தொலைக்காட்சியில் பார்ப்பதற்குக்கூட நிறைய இருக்கும். ஆனால், டென்னிஸ் களத்தில் நடால் ஆடுவதைப் பார்த்துவிட்டால், அவையெல்லாம் மறந்து போகும். கோர்ட்டின் மூலைக்குச் செல்லும் பந்தைப் பாய்ந்து அடித்து நம்மை அதற்குள் இழுப்பார். அசராமல் செல்லும் ரேலிகள் நம்மை அந்த சேனலிலேயே இருக்கவைக்கும். எந்த மூளைக்குச் சென்றாலும், அலைபோல் மீண்டும் பழைய இடத்துக்குச் செல்லும் கால்கள், மற்ற திட்டங்களையெல்லாம் மறக்கடிக்கும். ஒவ்வொரு ஷாட்டையும், ஒவ்வொரு நகர்வையும் கவனிக்கத் தொடங்கினால், நம் நாள் நடால் எனும் ஒற்றைப் புள்ளியில் சுருங்கத் தொடங்கும். அவர் மீதான காதலை மட்டுமே புலன்கள் உணரும். ஃபெடரர், ஜோகோவிச் ரசிகர்களாய் இருந்தாலும்கூட, பேஸ் லைனில் கடலென வழிந்தோடும் வியர்வையில் தெரியும் அவர் பிம்பத்தில் உங்கள் ஆச்சர்யம் பிரதிபலிக்கும்.

Nadal fans

அனைத்திற்கும் மேலாக, நடாலின் சத்தத்தை கேட்கத் தொடங்கிவிட்டால் வேறு எந்த ஓசையும் கேட்காது. ஒவ்வொரு ஷாட்டின்போதும் அவர் அடிவயிற்றிலிருந்து எழும் அந்த ஓசை, உங்களை ஆட்கொண்டுவிடும். வீட்டில் ஒலிக்கும் ராஜாவின் இசையோ, ரஹ்மானின் குரலோ கேட்காது. அழைக்கும் அம்மாவின் குரலோ, அணைக்கும் அன்பர்களின் அழைப்போ கேட்காது. போர்க்களத்தின் மையப் பகுதியில் புரவிகளும் சேனைகளும் சூழ்ந்திருப்பதைப் போலத்தான் போட்டியின் சூழ்நிலை நம்மை வைத்திருக்கும். ஆனால், எந்தச் சத்தமும் கேட்காது. படபடத்து அடித்துக் கொள்ளும் இதயத்தின் ஓசையையும், நடாலின் சத்தத்தையும் தவிர எதுவும் கேட்காது.

என்ன, அலைகள் அமைதியைக் கொடுத்து நம்மை ஆட்சி செய்யும். நடால் கொஞ்சம் நேரெதிர். அமைதியைக் கெடுத்து, பயத்தைப் பரிசளித்து, தோல்வியின் விளிம்புக்கு அழைத்துச் சென்று… இத்தனை நடந்தாலும் மீண்டு வருவார் என்று நினைக்க வைப்பவர். வெற்றியின் கரங்களை இருக்கப் பற்றிக்கொள்ளச் சொல்லித் தந்தவர். அவர் நம்பிக்கை மூலம் ஆட்சி செய்பவர்.

*****

வெறும் போராட்ட குணத்துக்காக மட்டுமே நடாலைக் கொண்டாடுவதும் சரியில்லை. டெக்னிக்கலாக அவர் எந்த அளவுக்கு தன்னை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதும் முக்கியம். டெக்னிக்கலாக, தன் எதிராளிகளை எப்படி உடைத்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்வதும் அவசியம்.

Rafael Nadal

நடால் அட்டாகிங் வீரரா, டிஃபன்ஸிவ் வீரரா? ஃபெடரர், பீட் சாம்ப்ரஸ் போல் அட்டாக் செய்துகொண்டே இருப்பவர் அல்ல; எதிராளி எப்படி ஆடுகிறார்கள் என்பதெல்லாம் இவர்களுக்குப் பிரச்னையில்லை. ஜோகோவிச், மெத்வதேவ் போல் டிஃபன்ஸிவாகவே ஆடிக்கொண்டிருப்பவரும் அல்ல; எதிராளி எப்படி ஆடினாலும் இவர்களுக்குப் பிரச்னையில்லை.

நடால், ஒரு டிக்டேட்டர். எதிராளி எப்படி ஆடுகிறார் என்பதைத் தீர்மானிப்பதே இவர்தான். அவர்களின் பிரச்னை என்ன என்பதைக் கண்டறிந்து, அதை நோக்கி அவர்களை இழுப்பார். இழுத்துக்கொண்டே இருப்பார். ஒட்டுமொத்தமாக உடைந்து கை, கால்கள் சோர்வடைந்து, நுரையீரல் காற்றைத் தள்ளப் போராடும் நேரம், அந்தப் புள்ளியை எடுத்துவிடுவார். நீந்த நினைத்து நுழைபவரை இழுத்து மூழ்கடிக்கும் கடல் போல!

நேற்று மெத்வதேவுக்கு நடந்ததும் அதுதான். ஆனால், அது கொடூரத்தின் உச்சம். மெத்வதேவ் பேக் ஹேண்டில் வல்லவர். அப்படியிருக்கும்போது அவரின் ஃபோர்ஹேண்ட் பக்கம்தான் நடால் அதிகம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. பேக் ஹேண்ட் பக்கமே அதிகம் அடித்தார். முதல் இரண்டு செட்களில் ஏதேதோ முயற்சித்தார். எதுவும் பலிக்கவில்லை. வெற்றியை நோக்கி நீந்தத் தொடங்கினார் டேனி மெத்வதேவ். ஆனால், மூன்றாவது செட்டில் சீற்றம் கொண்ட கடலிடம் சிக்கினார் அவர்.

இப்போதும் பேக்ஹேண்ட் பக்கமே ஒவ்வொரு பந்தும் வந்துகொண்டிருந்தது. மெத்வதேவ் அதைத் திருப்பிக்கொண்டே இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு பந்தும் அதிக பலத்தோடும், அதீத துல்லியத்தோடும் வந்துகொண்டிருக்கிறது. சைட் லைன் நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறார் மெத்வதேவ். போதாக்குறைக்கு கணக்கில்லாமல் வந்துகொண்டிருக்கும் ‘Slice’ ஷாட்கள், எதிர்பார்த்து நிற்கும் இடத்தைவிட ஒரு அடி அதிகம் எடுத்துவைக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகின்றன. மெத்வதேவ் ஒருபக்கமாக இழுக்கப்படுகிறார். பேக் ஹேண்ட் போல் பலம் கொண்டிராத அவரது ஃபோர்ஹேண்ட் பக்கம், அதிகம் expose ஆகிறது. அதுவரை எதிர்ப்புறம் அடித்து இழுத்தவர், இப்போது இந்தப் பக்கம் பந்தைச் செலுத்துகிறார். அதை எடுக்கப் பாயும் மெத்வதேவ், மொத்தமாக உடைந்து போனார். பந்தைத் திருப்பி அனுப்பினாலும், கை, கால்கள் சோர்வடைந்து, நுரையீரல் கதறும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அந்தக் கடலுக்குள் மூழ்கியும் போனார்.

Nadal with Medvedev

அந்தக் கடலைக் கடக்கவேண்டுமெனில் எதிர்நீச்சல் அடித்தாகவேண்டும். இந்தப் பிரபஞ்சத்தில் அதைச் செய்வதர்கள் மிகச் சொற்பம் தானே!

இரண்டு செட்கள் பின்தங்கியிருந்தவர், வெற்றி பெறவே வாய்ப்பில்லை என்று நினைத்தார்கள். ஆனால், உள்வாங்கும் கடல் பேராபத்தாகிற்றே. அது எழுப்பிய சுனாமி, அனைத்து சாதனைகளையும் அடித்துச் சென்றிருக்கிறது. மெத்வதேவையுமே அதிசயிக்கவைத்திருக்கிறது.

கடல் - நம் காதலுக்கு இடம் கொடுக்கிறது. அதை வளர்க்கிறது. காதலைத் தொலைத்தவர்களுக்கு அடைக்களம் தருகிறது. மீண்டெழும் நம்பிக்கையும் கொடுக்கிறது. எல்லோருக்கும் காதலாகவே மாறிப்போகிறது. ரஃபேல் நடால் பரேராவைப்போல்!



source https://sports.vikatan.com/tennis/rafael-nadal-wins-the-21st-grand-slam-title-by-defeating-danii-medvedev

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக