ஏழை எளிய மக்களின் நோய்களுக்கான தீர்விடம் அரசு மருத்துவமனைகள்தாம். அதனால்தான் வானுயரக் கட்டடங்கள், அதிநவீன தொழில்நுட்பங்கள் என தனியார் மருத்துவமனைகள் பெருகினாலும் 70% மக்கள் செல்லுமிடம் அரசு மருத்துவமனைகளாகவே இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின் வீடியோ ஒன்று அண்மையில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்தது. அந்தப் பதிவில் மருத்துவமனை ஊழியர் ஒருவர், வயதான நோயாளியைக் குளிக்க வைக்கும்போது தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அந்த வீடியோவைப் பதிவிட்ட இளைஞரிடம் பேசினோம். தன் சுயவிவரங்களை வெளியிட அவர் விரும்பவில்லை. ``சில நாளைக்கு முன்னாடி நெஞ்சுவலிக்காக எங்க தாத்தாவை அந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருந்தோம். என்னோட தாத்தாவோட படுக்கை பாத்ரூம் பக்கத்துல இருந்துச்சு. தீடீர்னு அங்க இருந்து ஒரு அலறல் குரல் கேட்டுச்சு. என்னன்னு பாப்போம்னு போனேன். ஒரு வயசானவரை வீல்சேர்ல இருந்து இறக்கி பாத்ரூம் தரையில உக்கார வெச்சிருந்தாரு ஒரு ஊழியர். அந்த வயசானவர் மேல வெந்நீரை அப்படியே ஊத்திக் குளிக்க வெச்சாரு.
சூடு தாங்காம அந்த வயசானவர் `அண்ணா ரொம்ப சூடு... சூடு அண்ணா'னு அலறினாரு. நானும் அந்த ஊழியர்கிட்ட `ஏன் அண்ணா! பச்சத் தண்ணீ வருதுல்ல. அதையும் சேர்த்து ஊத்துங்க'னு சொன்னேன். அதுக்கு அவர் எனக்கு பதில் சொல்லாம தொடர்ந்து அதேபோல சுடுதண்ணிய ஊத்திக்கிட்டே இருந்தாரு. எங்க தாத்தாவைப் பாக்க டாக்டர் வர்ற நேரம்கிறதால அங்க இருந்து வந்துட்டேன்.
டாக்டர் வந்துட்டுப் போனதுக்கு அப்புறம் மறுபடியும் அங்க போனேன். அப்ப அந்த நோயாளியை அடிக்கிற சத்தம் எனக்குக் கேட்டது. மறுபடி ஒரு அறைக்குள்ள கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்கேயும் போய் அடிச்சாங்க. ஆனா, அங்க என்னால போக முடியல.
குளிக்க வைக்கும்போது நடந்த சம்பவத்தை மட்டும் வீடியோ எடுத்தேன். அந்தச் சம்பவம் என் மனசை ரொம்ப பாதிச்சிருச்சு. அவரைப் போல வயசானவருதான் எங்க தாத்தாவும்.
அவரை நாங்க எப்படிப் பார்த்துக்கிறோம், அதே சமயம் இன்னொரு தாத்தா இப்படிக் கஷ்டப்படுறாறேன்னு மனசே தாங்கல. இதை யாருகிட்ட சொல்றதுன்னு தெரியல. அதனாலதான் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்ல போட்டேன். இதை மாதிரி இனி யாருக்கும் நடக்கக் கூடாது" என்றார் வேதனையுடன்.
இந்நிகழ்வு குறித்து கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துசெல்வத்திடம் கேட்டோம்:
``அந்த வீடியோ பார்த்தபோது, எனக்கே வருத்தமாதான் இருந்துச்சு. நடந்தது வேற, ஆனா அந்த வீடியோல வேற மாதிரி கம்யூனிகேட் ஆயிடுச்சு. அந்த நோயாளி மூணு மாசாமா இங்க இருக்காரு.
கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர். நமாஸ் பண்ணணும், அதனால குளிக்கணும்னு கேட்டிருந்தார். அதனால வீல்சேர்ல வெச்சு நம்ம ஊழியர் கூட்டிட்டுப் போயிருந்தாரு. அந்த நோயாளி திடீர் திடீர்னு சத்தம் போடுவாரு. தண்ணீ மேல பட்டாலே பயங்கரமா சத்தம் போடுவார். அந்த நோயாளிக்கு காதும் கேட்காது. அதனாலதான் அந்த ஊழியர் சத்தமாப் பேசியிருக்காரு. அதை வீடியோல பார்க்கும்போது கடுமையா பேசுற மாதிரி இருக்குது.
Also Read: 11 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்; மிரண்டு போன அதிகாரிகள்; பீகாரில் அதிர்ச்சி!
நோயாளியை அடித்தார் என்ற தகவல் எல்லாம் முற்றிலும் பொய். நோயாளிகளை யாரும் அடிக்க மாட்டோம். அந்த ஊழியர்தான் இவரைப் பார்த்துக்கிறாரு. ரொம்ப பணிவான ஊழியர். இவரை மட்டுமல்ல ஆதரவில்லாத இன்னும் இரண்டு நோயாளிகளையும் இவர்தான் கவனிக்கிறாரு. நானே பலமுறை அந்த ஊழியரோட சேவையைப் பாராட்டியிருக்கேன். அதுபோல கடினமா நடந்துக்கிற ஊழியர்களை நாங்க வேலையில வெச்சிருக்க மாட்டோம்" என்றார்.
source https://www.vikatan.com/news/tamilnadu/karur-gh-staff-allegedly-beaten-old-patient-in-a-video-what-hospital-says
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக