Ad

வெள்ளி, 21 ஜனவரி, 2022

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் விவகாரம்: மாநில அதிகாரத்தில் கை வைக்கிறதா மத்திய அரசு?!

மாநில அரசுகளின் ஒப்புதலின்றி மத்திய அரசின் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமிக்கும் மசோதாவை மத்திய அரசு வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யும் முடிவில் இருக்கிறது. இது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநில அரசுகள் தங்களின் தொகுப்பைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பரிந்துரை செய்வதனடிப்படையில் அவர்கள் மத்திய அரசின் பணிகளில் நியமிக்கப்படுவது தற்போது நடைமுறையில் இருக்கிறது. ஆனால், இதற்கேற்ப பல மாநிலங்கள் போதிய எண்ணிக்கையில் மத்திய அரசின் பணிகளுக்கு அனுப்புவதில்லை என மத்திய அரசு புகார் கூறி வருகிறது.

இந்தச் சூழலில் மாநில அரசுகளின் ஒப்புதல் இன்றியே மத்திய அரசின் பணிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்யும் முறையைக் கொண்டுவரவுள்ளது மத்திய அரசு. இதன்படி மத்திய அரசு நினைத்தால் மாநில அரசின் கீழ் பணியாற்றும் எந்த அதிகாரியையும் அழைத்துக்கொள்ளலாம். இது குறித்து மாநில அரசுகளுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. மாநிலத்தில் பணியாற்றும் அதிகாரிகளை மத்திய அரசுப் பணிகளுக்கு அழைத்துக் கொள்வது குறித்து கருத்துச் சொல்ல கடந்த டிசம்பர் மாதம் இரண்டு முறை மத்திய அரசு கடிதங்களை அனுப்பியது. மீண்டும் மத்திய அரசு ஜனவரி 12-ம் தேதி ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில் ஜனவரி 25-ம் தேதிக்குள் மாநிலங்கள் கருத்து தெரிவிக்கவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

பிரதமர் மோடி

மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்குத் தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பீகார், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் நியமனத்தை மத்திய அரசு கையிலெடுத்திருப்பதற்கான பின்னணியும் மாநில அரசுகளின் எதிர்ப்பும் குறித்து ஓர் அலசல்…

Also Read: திருப்பி அனுப்பப்பட்டாரா மோடி? - மத்திய அரசு, பஞ்சாப் அரசு... யார் சொல்வது உண்மை?!

மத்திய அரசின் முடிவுக்கான பின்னணி...

மேற்கு வங்கத்தில் கடந்த மே இறுதியில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காகப் பிரதமர் மோடி சென்றிருந்தார். பிரதமர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் மம்தாவும், தலைமைச் செயலர் பந்தோபாத்யாயாவும் புறக்கணித்தனர். இதையடுத்து மேற்கு வங்கத் தலைமைச் செயலர் பந்தோபாத்யாயை மத்திய அரசின் குறைதீர்க்கும் நலன் பிரிவுக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மம்தா பானர்ஜி பந்தோபாத்யாயைத் தலைமைச் செயலர் பதவியிலிருந்து விடுவிக்கவும் மறுத்தார். மேலும், அவரை முதல்வர் மம்தாவின் தலைமை ஆலோசகராக மூன்று ஆண்டுகளுக்கு நியமித்தும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே மத்திய அரசின் உத்தரவுகளை மதிக்காமல் பந்தோபாத்யாய் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டி அவர் மீது மத்திய அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததோடு அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த விசாரணைக் குழுவை மத்திய பணியாளர் நலத்துறை மூலம் நியமித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சி.ஏ.டி., எனப்படும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் கொல்கத்தா கிளையில் பந்தோபாத்யாய் மனுத் தாக்கல் செய்தார். பந்தோபாத்யாய் தாக்கல் செய்த மனுவை டில்லி அமர்வுக்கு மாற்ற, சி.ஏ.டி., கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் வரை செல்ல மத்திய அரசு உச்ச நீதிமன்றம் செல்ல என மிகப்பெரிய கலவரமே நடந்தது. இறுதியில் பந்தோபாத்யாய் மீதான மத்திய அரசின் ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

மம்தா பானர்ஜி

தமிழ்நாடு அரசும் பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்-ஐ மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்ப அழைத்துக்கொண்டது. மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகளே ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் நியமனத்தில் தற்போது மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மத்திய அரசின் மசோதாவுக்கு மாநிலங்களின் எதிர்ப்பு

``மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது. மற்ற சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களைவிட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் நியமனச் சட்டத்தில் கொண்டுவரப்பட உள்ள திருத்தம் கொடுமையானது. மத்திய அரசு உடனடியாக இதைக் கைவிட வேண்டும்” என மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். பீகார் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி, “ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் நியமனங்களில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறையே சிறப்பாக இருக்கிறது. அதில், எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை” எனச் சுட்டிக்காட்டி உள்ளார்.

“மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளை மத்திய அரசின் பணிகளுக்கு அழைக்கும் நடைமுறையில் செய்யப்பட மாற்றங்கள் குறித்து மாநில அரசுகளுக்குத் தெளிவான விளக்கம் கொடுக்க வேண்டும். அப்படி விளக்கி, அதில் மாநில அரசுகள் சொல்லும் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரலாம்” என மகாராஷ்டிரா அரசு சார்பில் மத்திய அரசுக்குக் கடிதம் எழுத உள்ளதாக அந்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் நிதி ராவத் தெரிவித்துள்ளார். கேரளா சட்ட அமைச்சர் ராஜீவி, “மத்திய அரசின் இத்தகைய முயற்சியை நிச்சயம் நாங்கள் எதிர்ப்போம்” எனக் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கடுமையாக எதிர்க்கும் என மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார். தமிழ்நாட்டிலும் வி.சி.க தலைவர் திருமாவளவனும், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழக அரசு இதில் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பினராயி விஜயன், மம்தா பானர்ஜி, உத்தவ்

மத்திய அரசுத் தரப்பில் இது குறித்து, ``மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிட நினைக்கவில்லை. மத்திய அரசு தங்கள் பணிகளுக்குச் சரியானவர் என நினைக்கும் அதிகாரிகளை அந்தப் பணியில் நியமித்துக்கொள்ளும் அதிகாரம் வேண்டும். இது மத்திய, மாநில அரசுகள் இணைந்துதான் இதில் செயல்பட வேண்டும். மக்கள் நலனுக்காக மத்திய அரசு எடுக்கும் முடிவில் தேவையின்றி அரசியல் சாயம் பூச வேண்டாம்” என்கின்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/article-about-central-govt-decision-in-ias-officers-posting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக