எதிர்வரும் ஐந்து மாநிலத் தேர்தல்களில், அதிக கவனம் பெற்றிருப்பது உத்தரப்பிரதேசத் தேர்தல் களம்தான். அங்கு பா.ஜ.க, சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இருந்தும், ஆளும் கட்சியான பா.ஜ.க-வும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடியும்தான் களத்தில் உறுதியாக நிற்கின்றன. எப்படியாவது ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென யோகி ஆதித்யநாத்தும், மீண்டும் முதல்வர் அரியணையில் ஏறிவிட வேண்டுமென அகிலேஷ் யாதவும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில், உ.பி-யில் காங்கிரஸை மீட்டெடுக்க வேண்டுமென, தன் பங்குக்கு அரசியல் களமாடிக் கொண்டிருக்கிறார் பிரியங்கா காந்தி. அவரின் அரசியல் நகர்வுகளுக்கு என்ன பலன் கிடைத்தது... உ.பி தேர்தல் களத்தில் காங்கிரஸின் நிலை என்ன?
Also Read: `ரிசல்ட்' தெரிந்துதான் அகிலேஷிடம் ஐக்கியம் ஆகிறார்களா உ.பி பாஜக தலைவர்கள்?!
பிரியங்காவின் முதல் படி!
ஒரு காலத்தில் காங்கிரஸின் கோட்டையாக இருந்த உ.பி-யில், சொந்தக் கட்சித் தலைவர்களின் அலட்சியத்தாலும், மாநிலக் கட்சிகளின் அசுர வளர்ச்சியாலும் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது காங்கிரஸ்! இந்த முறை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, பிரியங்கா காந்தியை உ.பி மாநிலத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது கட்சித் தலைமை. கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி உ.பி-யில் முகாமிட்ட பிரியங்கா, முதல் படியாகக் கட்சிக்குள் இருக்கும் பிரச்னைகளைச் சரி செய்ய முயன்றார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டார். ஆனால், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் உட்கட்சிப் பூசல்களால் சில நிர்வாகிகள் மாற்றுக் கட்சிக்குத் தாவிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களைச் சந்திப்பது!
உன்னாவ், ஹத்ரஸ் பாலியல் சம்பவங்கள், லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலைச் சம்பவம் என உ.பி-யின் எந்த மூலையில் என்ன பிரச்னை நடந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தார் பிரியங்கா. அதோடு மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன், பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர், வேட்பாளர்களில் பெண்களுக்கு 40 சதவிகித இட ஒதுக்கீடு எனப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதன்மூலம் உத்தரப்பிரதேசப் பெண்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
வேட்பாளர் தேர்வு!
கடந்த வாரத்தில் 125 பேர் அடங்கிய முதற்கட்ட காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார் பிரியங்கா. உன்னாவ் சிறுமியின் தாய், யோகி ஆதித்யநாத்தைச் சந்திக்கச் சென்றபோது காவல்துறையினரால் தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர், சிஏஏ போராட்டத்தின்போது சிறை சென்றவர் என முக்கியப் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது காங்கிரஸ். இதனால், இந்தியா முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் கவனம் பெற்றது. மேலும், இளைஞர்களுக்காகத் தனியாகத் தேர்தல் வாக்குறுதிகளைக் காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருப்பதும் உ.பி இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்கிறது.
கள நிலவரம் என்ன?
உ.பி தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலவரம் என்ன என்பது குறித்து அரசியல் வல்லுநர்கள் சிலர், ``உத்தரப்பிரதேசத்தில், பிரியங்கா காந்தியின் என்ட்ரிக்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஓரளவு உயிர்பெற்றிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், பெரிய மாநிலமான உ.பி-யின் பல்வேறு பகுதிகளுக்கும் அவர் பயணப்பட்டிருக்கிறார். முன்பெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள், தலைநகர் லக்னோவில் மட்டுமே இருந்துகொண்டு அரசியல் செய்தார்கள். இதன் காரணமாகத்தான் காங்கிரஸ் கட்சி அங்கு வலுவிழந்தது. சமாஜ்வாடியும் பகுஜன் சமாஜும், லக்னோவைத் தாண்டி பல்வேறு இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து கட்சியை வளர்த்துக் கொண்டன. பா.ஜ.க-வும் அப்படியே கட்சியை வளர்த்திருக்கிறது. இப்போது பிரியங்கா காந்தி, உ.பி-யின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றதன் விளைவாக, காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் மீண்டும் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறது. ஆனால், இந்த கவனம் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்!
Also Read: பெண் வாக்காளர்களை ஈர்க்கும் பிரியங்கா காந்தி! - உ.பி-யில் காங்கிரஸ் கொடி பறக்குமா?!
உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரை சமாஜ்வாடிக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையில்தான் போட்டி என்பது தெளிவாகத் தெரிகிறது. மூன்றாம் இடம்கூட மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், காங்கிரஸ் கட்சிக்கு நான்காம் இடம்தான். உத்தரப்பிரதேசத்தில், 1989-ம் ஆண்டில்தான் கடைசியாகக் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தது. அதன் பிறகு 32 ஆண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. பிரியங்கா காந்தியின் வரவால் ஓரளவு மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறத் தொடங்கியிருக்கிறது. உ.பி-யில் இந்த முறை, காங்கிரஸ் கட்சிக்கு நான்காம் இடம் கிடைத்தாலும், அதன் வாக்கு சதவிகிதம் கடந்த தேர்தலைவிட நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இளைஞர்கள் மத்தியில் பிரியங்கா காந்தியின் நகர்வுகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தேர்தல் முடிந்த பின்பும் உ.பி-யில் கவனம் செலுத்தினால் அடுத்த தேர்தலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இல்லையென்றால், மீண்டும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும்!'' என்கிறார்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/priyanka-gandhis-moves-and-status-of-congress-in-uttarpradesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக