Ad

சனி, 29 ஜனவரி, 2022

`மூன்று குண்டுகளால் மகாத்மாவை அழித்திட முடியுமா...!'- காந்தியின் நினைவு தினப் பகிர்வு

காந்தி இந்திய வரலாற்றில் இன்றளவிற்கும் தவிர்க்க முடியாத பெயர். ஒருபக்கம் அவரை புனிதராக மக்கள் வழிபடுகிறார்கள். மற்றொருபுறம் அவர் மீதான விமர்சனங்கள் காட்டமாக முன்வைக்கப்படுகின்றன. காந்தி இரண்டையும் பொருட்படுத்தியவர் கிடையாது. மற்ற நாடுகளில் தேசத்தந்தை என்கிற அடையாளம், முதலில் பதவி வகிக்கும் பிரதமருக்கோ அல்லது விடுதலை போராட்டத்திற்கு முதலில் குரல் கொடுத்தவருக்கோ தான் தரப்படும். காந்தி இந்தியாவின் முதல் பிரதமர் கிடையாது. அவர் அரசியலில் தனக்கு சாதகமா ஒரு பதவியில் கூட இருந்தவர் இல்லை. காந்திக்கு முன்னாடியே இங்கு விடுதலைக்கான போராட்டத்தில் குரல் கொடுத்தவர்கள் நிறைய பேர். பிறகு ஏன் காந்தி தேசத்தந்தை என்றால், காந்திதான் இந்தியர்களின் உண்மையான இயல்பை உலகிற்கு காட்டியவர். அறப் போராட்ட வடிவை உலகிற்கு அறிவித்தவர். அகிம்சைதான் போராட்டத்திற்கான கருவி. உண்ணாவிரதம்தான் ஆயுதம். ‘உண்ணாவிரதத்தை கடைசி கத்தி போலதான் பயன்படுத்த வேண்டும்’ எனப் போதித்தவர் காந்தி. ஆனால் அவரின் ஒரு உண்ணாவிரத போராட்டத்தின் நோக்கத்தையே மாற்றி அதனாலேயே அவரைக் கொலை செய்தவர்களின் கதை உங்களுக்கு தெரியுமா.

Gandhi

காந்தி தனக்கு வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்திருந்திருந்தார். ஜனவரி 30 காந்தியின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதற்கு முன்பே குறைந்தது 5 முறையாவது முயற்சி செய்யப்பட்ட தாக்குதல்களின் இறுதி. ஒவ்வொருமுறையும் மரணத்தின் தொண்டை குழி வரை காந்தி சென்று மீண்டிருக்கிறார். காந்தி எளிய மக்களை சந்தித்து அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து கொண்டிருந்த காலம் அது. ஊர் பொது கிணறில் தண்ணீர் எடுக்க அனுமதி கிடையாது போன்ற கட்டுப்பாடுகள் இருந்த நிலையில் காந்தி எளிய மக்களுக்காக குரல் கொடுத்தார். அவர் ஆங்கிலேயர்களை மட்டுமல்ல இந்தியாவில் இந்தியர்களே தன் மக்களுக்கு துன்பம் இழைப்பதையும் எதிர்த்தார். 1934 ஜூன் 25 பூனாவில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற காந்தியோடு கஸ்தூரிபாயும் உடன் இருந்தார். ரயில் கிராஸிங்கில் காந்தியின் கார் நிற்க அவருக்கு முன்பு கடந்து சென்ற அவரின் காரைப் போலவே இருக்கும் இன்னொரு கார் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அதில் மீண்ட காந்தி தனக்கு பதிலாக உயிர் நீத்த அலுவலர், காவலர்கள், மக்களுக்காக வருந்தினார். அவரின் மீதான தாக்குதல் அதன் பிறகு 1944 ஜூலை, செப்டம்பர், 1946 ஜூன் என தொடர்ந்துகொண்டே இருந்தது. அவர் செல்லும் ரயிலை கவிழ்க்க சதி நடந்தது.

நான்காவது முறையாக 1948 ஜனவரி 20 அன்று பிர்லா பவனில் அவர் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தின் மேடைக்கு அருகே இருந்த சுவர் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தாமதமாக செல்ல நேர்ந்ததால் அதிர்ஷ்டவசமாக காந்தி உயிர் பிழைத்தார். "இந்த நிகழ்வு என்னை வருந்தச் செய்கிறது. எனக்கு இறப்பதற்கு விருப்பமில்லை. இருப்பினும் அப்படி நடந்தால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். என்னைக் கொல்வது எளிது. அதற்காக ஏன் சம்பந்தமே இல்லாத அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படவும் காயப்படவும் வேண்டும்?" எனக் குண்டுவெடிப்பு குறித்த தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார் காந்தி. இந்த நிகழ்வில் மதன்லால் கைது செய்யப்படுகிறார். மதன்லால் உடன் நாதுராம் கோட்சே, நாராயணன் ஆப்தே, விஷ்ணு கார்கே, திகம்பர் பட்கே, கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தையா உள்ளிட்டோர் இதில் பங்கு பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மதன்லால் மட்டுமே சிக்கவும் அவரை விசாரித்த காவலர்கள், கொலையாளிகள் தங்கியிருந்ததாக அடையாளம் காட்டப்பட்ட ஹோட்டல் அறையை சோதிக்கின்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி இருந்தனர்.

Gandhi

இந்த நிகழ்விற்கு பிறகு காந்திக்கு பாதுகாப்பை அதிகரிக்க பட்டேல் கோரிக்கை வைக்கிறார். அவரை காண வருபவர்களை சோதிக்க வேண்டும் என கமிஷனர் காந்தியிடம் கேட்கிறார். காந்தி மறுத்துவிடுகிறார். “பாதுகாப்பில் பெறுகிற சுதந்திரம் என்பது சுதந்திரமே கிடையாது” என்கிறார். இருப்பினும் காந்தி மீதான தாக்குதலை கண்காணிக்க மாற்று உடைகளில் காவலர்கள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். எல்லாவற்றையும் தாண்டி அந்த நாளில் துயரம் மிகுந்த சம்பவம் நடந்தேறியது.

காந்தியின் இறுதி நாள்

காலத்துக்கும் தன்மீது விழப் போகிற கறை அகலப் போவதில்லை என்கிற குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஜனவரி 30 வழக்கம் போல ஆரம்பிக்கிறது. காந்தியின் நாள் எப்போதும் காலை 3:30 மணிக்கு பிரார்த்தனையோடு தொடங்கும். பிரார்த்தனையோடு தொடங்கி பிரார்த்தனையோடு முடியும் நாளே காந்தியின் காலண்டரில் நிரம்பி இருக்கும். எல்லோரையும் பிரார்த்தனைக்கு அழைத்த போதும் அவரின் உடன் எப்போதுமே இருக்கும் காந்தியின் சகோதரரின் மகளான ஆபா காந்தி அன்றைக்கு பிரார்த்தனையில் கலந்து கொள்ளவில்லை. "பிரார்த்தனை உள்ளத்தை தூய்மையாக்கும். என் பெயரைச் சொல்லி ஆபா கலந்து கொள்ளாதது வருத்தமளிக்கிறது" என்று பேத்தி மனுபென்னிடம் சொல்கிறார் காந்தி. மனுவும் ஆபாவும் தான் காந்தியை இறுதி வரை கவனித்து கொண்டவர்கள்.


அன்றைக்கு அதிகாலையில் ஆர்.கே.நேரு அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்னால் காந்தியை பார்த்துவிட வந்திருந்தார். காந்தி, ‘ஏழை நாட்டிலிருந்து செல்வதால் எளிமையான வாழ்வையே வாழ வேண்டும்’ என எழுதி தனது புகைப்படத்தில் கையெழுத்திட்டு கொடுக்கிறார். மார்க்கெட் பூரூக் ஒயிட் என்ற புகைப்படக்காரர், தி லைஃப் பத்திரிக்கையின் பேட்டிக்காக காந்தியை அணுகும் போது, "125 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் என எந்த நம்பிக்கையில் சொல்லி வருகிறீர்கள்?" எனக் கேட்கிறார். தான் இனியும் அந்த நம்பிக்கையில் இல்லை. பயங்கரமானவை அரங்கேறி கொண்டிருக்கின்றன. நான் இருட்டில் வாழ விரும்பவில்லை எனப் பதில் சொல்கிறார்.

Gandhi

காந்தியின் நாள், விருந்தினர்களால் நிறைகிறது. பாகிஸ்தானின் உதவி கமிஷனர் என்.ஆர்.மல்கானி, சிந்துவில் நடைபெறும் இந்து மக்கள் மீதான வன்முறை குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். பிபிசியின் பாப் ஸ்டிம்சன், கத்தியவார் அரசியல்வாதிகள், சில நாட்களாக காந்தியுடன் உரையாடி வருகிற எழுத்தாளர் வின்ஸன்ட் ஷீன் என அனுமதியில்லாமல் அவரை எப்படியும் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு பார்வையாளர்கள் அவரைக் காண குவிந்திருக்கின்றனர். யாரும் காணாத தூரத்திற்கு அன்றைய நாள் அவரை அழைத்து செல்லவிருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. காந்திக்கு தெரிந்திருந்தது போலும். காந்தியை பார்ப்பதற்காக வந்திருந்தவர்களைப் பற்றி காந்தியிடம் சொன்னபோது, “அவர்களை காத்திருக்க சொல்லுங்கள். பிரார்த்தனை முடிந்ததும் உயிரோடு இருந்தால் சந்திக்கிறேன்” எனச் சொல்லி சென்றதாக உடன் இருந்தவர்கள் பதிவு செய்கிறார்கள்.

சர்தார் பட்டேலுக்கும் நேருவுக்கும் இடையிலான அதிகார போட்டிகள் இந்தியாவின் நலனிற்கு உகந்தது அல்ல என்று கருதிய காந்தி இருவரையும் வேறு வேறு நேரங்களில் அதே நாளில் சந்திக்க இருந்தார். பட்டேல் மாலை 4 மணிக்கு அவரது மகள் மற்றும் உதவியாளரோடு வரவே காந்திக்கும் பட்டேலுக்குமான உரையாடல் 5 மணி தாண்டியும் நீண்டு கொண்டிருந்தது. 5 மணிக்கு பிரார்த்தனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இருவரின் உரையாடலுக்கு நடுவே நுழைய மனுவும் ஆபாவும் தயங்கினார்கள். இருவரிடமும் காந்தி, "நீங்கள் செவிலிகள் போன்றவர்கள், நோயாளிகளுக்கு நேரத்திற்கு மருந்து கொடுக்க தவறக்கூடாது" என உரிமையுடன் பேசுகிறார். இடது பக்கம் ஆபாவும் வலது பக்கம் மனுவும் அவரைத் தாங்கி கொள்ள 30-40 அடிகளுக்குள் இருக்கும் பிரார்த்தனை இடத்தை நோக்கி காந்தி நகர்கிறார்.

Gandhi

200 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் காந்தி வழியமைத்து முன்னேறி செல்லும் போது கோட்சே நான்கைந்து அடிகளில் காந்திக்கு முன்னர் கூட்டத்தில் இருந்து வெளிப்படுகிறார். வணங்குவது போல காலைத் தொட பாவனை செய்தவாறே தான் மறைத்து வைத்திருந்த இத்தாலியன் பெரெட்டா துப்பாக்கியால் காந்தியை மூன்று முறை சுடுகிறார். குண்டுகள் காந்தியின் உடலில் பாய்கின்றன. அவரைத் தாங்கிக் கொண்டிருந்த ஆபா, மனுவைப் பற்றியிருந்த காந்தியின் கைகள் பிடி தளருகின்றன. கோடிக்கணக்கான மக்களுக்காக இடையறாது இயங்கிக் கொண்டிருந்த 78 வயது மனிதரின் தேகம் வாடிய மாலை போல சரிகிறது. அந்த இடத்தில் மக்களின் கூச்சல் அதிகமாகிறது. சிலர் கண்ணீர் விடுகின்றனர். கலைகின்றனர். கோட்சேவைக் கையில் கிடைத்தவர்கள் எல்லாம் தாக்குகிறார்கள். கண்ணாடியும் ஒற்றை செருப்பும் நழுவ காந்தி அங்கேயே சரிகிறார். அவரது கடிகாரம் 5:17 என்பதை காட்டியவாறே நின்றுவிட்டது.

கோட்சே நீதிமன்றத்தில் வாசித்த தன்னுடைய அறிக்கையில், "காந்திஜி ஜனவரி 13 இல் தொடங்கிய உண்ணாவிரதம் இந்து-இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைக்கு உறுதியளிக்க வேண்டி எனச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் என எனக்கும் சிலருக்கும் தோன்றுவது, இந்திய அரசால் நிச்சயமாக மறுக்கப்பட்ட 55 கோடியை பாகிஸ்தானுக்கு பெற்று தரவே என உணர முடிகிறது" எனக் குறிப்பிடுகிறார்.

Gandhi death

காந்தி எந்தளவிற்கு மக்களால் நேசிக்கப்பட்டாரோ அதைவிட அதிகமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். காந்தியின் உண்ணாவிரதம் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக கருத்து உருவாக்கப்பட்டது. கோட்சே மட்டுமில்லை இன்னும் பலரும் காந்தியின் உண்ணாவிரதம் 55 கோடிக்கானது மட்டும் தான் எனச் சுருக்கி விடுகின்றனர். ஜனவரி 16 இல் இந்திய அரசு, காந்தியின் பொருட்டும் பாகிஸ்தானுடனான விரிசலை முடிவுக்கு கொண்டு வர நல்லதொரு சமிக்ஞை அளிக்கும் பொருட்டும் 55 கோடியைத் தருவதாக அறிவிக்கிறது. காந்தியின் உண்ணாவிரதம் அத்தோடு முடிவு பெறவில்லை. அவர் அதை வரவேற்றார் எனினும் பிரச்சனை அதனால் மட்டும் முடிவுக்கு வராது என நம்பவே உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். ஜனவரி 18 இல் பலரின் வேண்டுகோளுக்கும் உறுதிமொழிக்கும் பிறகு தான் காந்தி உண்ணாநோன்பை கைவிடுகிறார்.

இந்து-இஸ்லாமிய மக்களின் ஒற்றுமைதான் அவருக்கு தேவைப்பட்டது. காராச்சியிலும் டெல்லியிலும் நடந்தேறுகிற சம்பவங்கள் அவருக்கு உவப்பானதாக இல்லை. இரு பக்கமும் மக்கள் கொத்துகொத்தாக வீழ்ந்து மடிந்து கொண்டிருக்கின்றனர். "என் குரலைக் கேட்பவர் யாருமில்லை. நான் இருளில் உழல்கிறேன்” என்று பிரிவினையை நோக்கி நாடு நகர்ந்த போது காந்தி கண்ணீரோடு பதிவு செய்கிறார். "என் பிணத்தின் மீது பிரிவினை நிகழட்டும்” என்ற காந்தியே அதற்கு ஒப்புக்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட கடுமையான வன்முறை மற்றும் கொலைகளே காரணமாக இருந்தன.

Gandhi

காந்தியின் இறப்பினால் நாடே ஸ்தம்பித்து தான் போனது. பல இலட்சக்கணக்கான மக்கள் 5 மைல் தொலைவிற்கு நின்று காந்தியை வழியனுப்ப வந்ததாக அன்றைய நாளிதழ்கள் எழுதின. காந்தி உடல் வடிவில் இருந்து ஒளி வடிவாக ஆனதாக எஸ்.ராமகிருஷ்ணனின் 'காந்தியைச் சுமப்பவர்கள்' கதையில் ஒரு வரி வரும். அதே தான். ரூப வடிவில் இருந்து காந்தி ஒருவராலும் அழிக்க முடியாத அரூப வடிவாக மாறினார். அவரின் எளிமையும் அன்பும் தூய மனதும் இன்னும் பல வருடங்கள் இந்தியாவைக் காக்கும். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, ஆங் சான் சூயி எனக் காந்தியை பிரதிபலிப்பவர்கள் காந்தியை உலகெங்கும் கொண்டுசெல்கிறார்கள். காந்தி இப்போது தத்துவமாக காற்றெங்கும் கலந்திருக்கிறார், மூன்று குண்டுகளால் அழிந்துவிடக்கூடியவரா மகாத்மா!



source https://www.vikatan.com/oddities/miscellaneous/a-special-article-about-mahatma-gandhi-on-his-remembrance-day

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக