Ad

திங்கள், 24 ஜனவரி, 2022

டெம்பா பவுமா: மக்களின் நாயகன் வென்றது கோப்பையை மட்டுமல்ல... காலங்காலமாக அரங்கேறும் நிறவெறி அரசியலை!

இந்தியாவில் சாதிப் பிரிவினைகளால் மக்கள் ஒடுக்கப்படுவதை போல, தென்னாப்பிரிக்காவில் நிறத்தால் நடத்தப்படும் கொடுமைகள் காலம் காலமாக நடந்துவருகிறது என்பது உலகம் அறிந்த உண்மை. உலகம் முழுவதும் கிரிக்கெட்டில் இட ஒதுக்கீடு குறித்தான கருத்துக்கள் பல்வேறு விதமாக இருந்தாலும், தென்னாப்பிரிக்காவை பொறுத்தவரை கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீட்டை போராடி வாங்கியுள்ளனர் அம்மக்கள் என்பது உலகம் அறிந்த உண்மை. இது கறுப்பின மக்களின் சம உரிமைக்கான முதல்படி என்பதை மறுப்பதற்கில்லை. அதன்படி அந்நாட்டின் கிரிக்கெட் வரலாற்றிலேயே கறுப்பினத்தைச் சேர்ந்த முதல் நிரந்தர கேப்டனாய் செயல்பட்டு வரும் டெம்பா பவுமா தன் சமீபத்திய செயல்பாடுகளால் உலகின் கண்களை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

Temba Bavuma | டெம்பா பவுமா

1990-ம் ஆண்டு கேப்டவுனில் உள்ள லங்கா நகரத்தில் பிறந்தவர் டெம்பா பவுமா. எந்த வித கிரிக்கெட் பின்னணியும் இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும், அவர் வாழ்ந்த லங்கா நகரத்தில் கிரிக்கெட் மிக பிரபலம். தாமி சோலக்கில் போன்ற கறுப்பின கிரிக்கெட்டர்கள் பவுமாவுடன் ஒரே தெருவில் விளையாடியவர்கள். கிரிக்கெட்டுடன் சேர்த்து படிப்பிலும் ஒரு பக்கம் உயர்நிலை கல்வி வரை முடிக்கிறார் பவுமா.

இப்படி வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்க 2008-ல் முதல் தர அணியான காட்டெங்க்குத் தேர்வாகிறார் பவுமா. பின்னர் 2010 - 2011 ஆண்டுகளில் அந்நாட்டின் பிரபல அணியான லயன்ஸில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவ்வாய்ப்பினை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளும் பவுமா லயன்ஸ் அணிக்காகத் தொடர்ந்து நான்கு வருடங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவிக்கிறார். இதன் பலனாக 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்படுகிறார் பவுமா.

Temba Bavuma | டெம்பா பவுமா

2016-ல் கேப்டவுனில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் தனது முதல் சதத்தை அடிக்கிறார் பவுமா. தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு கறுப்பின வீரர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது அதுவே முதல்முறை. அச்சாதனையை தன் பிறந்த ஊரிலேயே நிகழ்த்துகிறார் அவர். அதுவரை வெள்ளை ஜெர்ஸியில் மட்டும் ஆடி வந்த அவருக்கு அதே ஆண்டு பச்சை ஜெர்ஸி அணியும் வாய்ப்பும் கிடைக்கிறது. அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் அவர், 2019-ம் ஆண்டில் டி20 அணியிலும் இடம்பிடித்தார்.

Also Read: தென்னாப்பிரிக்காவிடம் ஒயிட் வாஷ் ஆன இந்தியா; வெற்றி தோல்வியில் இல்லை; அணியாக இணைவதிலேயே பிரச்சனை!

அடுத்த இரண்டே ஆண்டுகளில் டி20 அணியின் கேப்டனாகவும் உயர்கிறார் பவுமா. ஒரு காலத்தில் தென்னாப்பிரிக்க அணியில் விளையாடும் 11 வீரர்களுமே மிகச்சிறந்த வீரர்களாகத்தான் இருப்பர். ஆனால் பலரது ஓய்விற்குப் பிறகு ஆடும் 11 வீரர்களின் பெயர்களும் பரிட்சயம் இல்லாத அளவிற்கு சரியான வீரர்களைக் கண்டெடுத்து வளர்க்காமல் சொதப்பியது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம். அதே போல நிறத்தின் அடிப்படையில் பல பிரச்னைகளும் அந்நாட்டு கிரிக்கெட்டில் வெளிப்படையாகவே நடந்து வந்தன. இப்படி இருக்கையில் மிக சுமாரான ஒரு அணியை தலைமைதாங்கி கிட்டதட்ட அரையிறுதி வரை கரைசேர்த்தார் பவுமா. அதுவும் பலம் வாய்ந்த அணிகள் கொண்ட குரூப்பில் இடம்பெற்று அவர்களுக்குச் சமமாக ஆடி இறுதியில் ரன்ரேட் அடிப்படையிலேயே வெளியேறி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது தென்னாப்பிரிக்க அணி.

Temba Bavuma | டெம்பா பவுமா

2018-ம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியுள்ளது இந்திய அணி. முதல் ஒரு டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெறவே, அந்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்கள் சிலர் இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி விமர்சித்தனர். ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த ஐந்து போட்டிகளிலுமே வென்று இந்திய அணிக்கு தொடர் தோல்விகளை பரிசாக அளித்தது தென்னாப்பிரிக்கா. கறுப்பின வீரர்களின் சிறப்பான பங்களிப்புதான் இந்த டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா வெல்ல முக்கிய காரணம். இதைத்தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் இந்தியாவை வைட்வாஷ் செய்தது பவுமா தலைமையிலான படை.

கோப்பையை கையில் ஏந்தி நெகிழ்ச்சியாகச் சிரிக்கிறார் பவுமா. அது வெறும் கிரிக்கெட் தொடரின் வெற்றி அல்ல, காலங்காலமாக ஒடுக்கப்பட்டு வரும் கறுப்பின மக்களின் மாபெரும் வெற்றி. பலம் வாய்ந்த இந்திய அணி பலமற்றதாகக் கணிக்கப்பட்ட ஓர் அணியிடம் தோற்கிறது என்றால், சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட்! பார்க்கத்தான் உயரத்தில் குறைவானவர் பவுமா, ஆனால் அவர் தன் வாழ்வில் எட்டிய இந்த உயரமோ காலத்திற்கும் நிலைத்திருக்கும்.



source https://sports.vikatan.com/cricket/peoples-hero-the-inspiring-story-of-south-african-captain-temba-bavuma

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக