Ad

புதன், 26 ஜனவரி, 2022

புதுப் புது வேதங்கள்! #MyVikatan

‘சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.’

என்று அன்றே பகர்ந்தார் ஔவையார். இந்த உலகத்தில் இரண்டே சாதிகள்தான்.தன்னிடம் உள்ள நல்லனவற்றை உலக மக்களுக்காக,எந்தப் பிரதிபலனும் கருதாமல் அள்ளிக் கொடுப்போர் பெரியோர்-அதாவது உயர்ந்தோர்.அவ்வாறு செய்யாமல் எல்லாம் இருந்தும் எல்லாவற்றையும் தனதென்று பாராட்டும் குணம் படைத்தோரை ஔவையார் குறைவான சாதியினர் என்று கூடச் சொல்லி நிறுத்தவில்லை; அதற்கும் கீழே போய் இழிவான சாதியினர் என்று அடையாளப் படுத்துகிறார். இங்கு பொருள் தானத்தை மட்டும் அவர் குறிப்பிடவில்லை.அருள் ஞானம் உட்பட அனைத்தையும் கணக்கில் கொள்ள வேண்டுமென்கிறார்.

போதி மரத்தடியில், தான் பெற்ற ஞானத்தைப் புத்தர் தன்னோடு வைத்துக் கொள்ளவில்லை.அதன் மூலம் உலகம் அமைதி பெற வழி தேடினார்.இயற்கை நமக்களிக்கும் சிறப்புக்களை மற்றவர்களுக்கும் பயன்படுமாறு செய்தலே உயர்ந்தோர் பின்பற்றும் வழி.அதுவே தருமமும் கூட.

இந்த இடத்தில் என் தாயாரின் கூற்றும்,செயலும் ஞாபகத்திற்கு வருகின்றன. ‘உன்னிடம் இருக்கும் திறமைகளை நீ உரிய விதத்தில் பயன்படுத்தவில்லையென்றால் அதனை உனக்குக் கொடுத்ததே தப்பு என்று எண்ணி,மேற்கொண்டும் தனித் தன்மைகளை உனக்களிக்க இறைவன் யோசிப்பான். எனவே உள்ள திறமைகளை உதாசீனப்படுத்தாமல், உனக்கும் மற்றவர்களுக்கும் உபயோகப்படுத்தி உயர்வடைய முயல வேண்டும்’ என்பார்.

எங்கள் வீட்டு மாடிப்படி ஓரத்தில் மல்லிகை பூத்த காலத்தில், நாங்கள் வேலைப்பளு காரணமாகச் சில நாட்கள் பூக்களைப் பறிக்காமல் விட்டு வைத்ததைப் பார்த்த அவர், ’எவ்வளவு வேலையிருந்தாலும் பூத்த பூவை செடியிலேயே காய விடக்கூடாது’ என்று கூறித் தினமும் அதனைப் பறித்து மாலையாக்கி விடுவார். இது அவரின் செயல். இவ்வளவுக்கும் அவருக்குக் கேள்வி ஞானம்தான்.கையெழுத்துப் போட மட்டுமே எங்களிடம் கற்று வைத்திருந்தார்.

பாரதி

ஔவையாரின் புலமைத்திறம், விஞ்ஞானம் சார்ந்தது என்பதைப் பலவகையாலும் நாம் அறியலாம்.ஒரு சிறு உதாரணம்.திருக்குறளைப் புகழ வந்த ‘இடைக்காடர்’ என்னும் புலவர்,

‘கடகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்’ என்க, ஔவையாரோ,

‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்’

என்று, அணுவைப் பற்றி மக்கள் அதிகம் அறிந்திராத அக்காலத்திலேயே பேசி, ஆச்சரியம் ஏற்படுத்தினார்.

உருவ அமைப்பில் வேற்றுமை இருந்தாலும் உடலின் உள்ளுறுப்புகளும், உள்ளோடும் ரத்தத்தின் நிறமும் ஒன்றேதான். ரத்தத்தின் வகை மாறுபடலாம். நிறமும் பணியும் நிரந்தரமாக ஒன்றுதானே? ஆனாலும், சாதி,மத ஏற்றத் தாழ்வுகள்இன்னமும் இந்த உலகத்திலிருந்து நிரந்தரமாக விடுபட்டபாடில்லை.

‘சாதிகள் இல்லையடி பாப்பா -குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

நீதி உயர்ந்தமதி கல்வி -அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்’

என்று மீசைக்கவிஞர் மீட்டினார் இசையை - வளரும் பருவ பாப்பாக்களைப் பார்த்து.

ஆனாலும், சாதி அரக்கனுக்குச் சாவு மணி முழுதாய் அடிக்கப்படவில்லை.பாடல்களால், கதைகளால், இசையால் இப்படி ஒவ்வொருவரும் தாம் சார்ந்த துறைகள் மூலம் சாதியை ஒழிக்கச் சவுக்கை எடுத்தார்கள்.சவுக்குகளின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டே போகிறதேயொழிய,சாதி அரக்கன் தன் வீச்சை நிறுத்தியபாடில்லை.

எல்லாத்துறைகளும் களத்தில் குதித்து விட்டபிறகு மக்களிடம் மிக நெருக்கமான சினிமாத்துறை மட்டும் சும்மா இருந்து விடுமா என்ன? சாதிக் கொடுமைகளின் கொடூரங்களை அவனிக்குக் காட்ட, அத்துறையினரும் முழு முயற்சியில் ஈடுபட்டுத்தான் வருகிறார்கள்.

அந்த வகையில் ‘80 களில் வெளிவந்த இரண்டு படங்கள் நம் நெஞ்சக்கூட்டுக்குள் இன்றும் சிறகடித்துப் பறக்கின்றன. ஓயாது ஓடிக் கொண்டிருக்கும் கடல் அலைகளைப் போல் அவை ஏற்படுத்திய ஆரவாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. புதிய வேதம் படைக்கப் புறப்பட்ட அவை எடுத்துச் சொன்ன கருத்துகள் ஏராளமானவை. ஆனாலும் ‘சாதி அலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை’ என்ற நிதர்சனமும் நம்மை நெகிழவே செய்கிறது.

‘அலைகள் ஓய்வதில்லை’ விச்சுவும் மேரியும் கடற்கரை மணலில் காதலை வளர்க்க,திருமணம் என்று வருகின்றபோது சாதியும் மதமும் சங்கடமேற்படுத்த, அந்த சாதியும் மதமும் தங்களுக்குத் தேவையில்லை என்று கூறி அவர்கள் தங்கள் மதச் சின்னங்களையே (பூணூலையும் சிலுவை டாலரையும்) தங்களிடமிருந்து அகற்றிவிட, படம் ஓர் இறுக்கத்துடனேயே முடியும்.

‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே’ என்று பாடியபடி கும்மாளமிட்ட அந்த இளசுகளுக்கு இளவட்ட நண்பர்களே அதிகம் இருந்ததால், மதத்தில் ஊறிப்போய், தன் கௌரவத்தையே பிரதானமாக எண்ணும் ‘டேவிட்’ டை எதிர்ப்பது இயலாததாகிப் போக, அடி உதை பட்டாவது அன்புக் காதலர்களைச் சேர்த்து விடத் துடிக்கும் நட்பு வட்டம் படும்பாடு, நம் இதயங்களில் இரக்கத்தைக் கசிய வைக்கும்.

அலைகள் ஓய்வதில்லை

பத்துக்கும் மேற்பட்ட பாடல்களால் காதல் வேகம் உணர்த்தப்பட,

‘விழியில் விழுந்து இதயம் நுழைந்து

உயிரில் கலந்த உறவே’

‘வாடி என் கப்பக் கிழங்கே

எங்க அக்கா பெத்த

முக்கா துட்டே பாடாதே

வாயைத் தெறந்தே’ போன்ற பாடல்கள் சிறப்புப் பெற்றன.

முட்டம் கடற்கரை அழகும், முதிராத கார்த்திக்கும் ராதாவும், காதலுக்கு அழகு சேர்த்தார்கள். ஓட ஓட விரட்டப்படும்போதுதான் மனதில் உறுதி ஏற்படும் என்பதைப்போல, அவர்கள் மனத்தில் உறுதி நிறைந்திட, பெரும்பாலான பெரிய மனிதர்கள் மனைவிக்குச் செய்யும் துரோகத்தை ‘டேவிட்’ டும் செய்ய, மனைவியும் தனக்குப் பக்க பலமாக இல்லாது போக, நடைமுறை வாழ்வை அழகாகச் சித்தரித்திருப்பார் பாரதிராஜா. கமுக்கட்டுக்குள் வெங்காயத்தை வைத்து ஜூரம் வரவழைப்பது இன்னமும் வழக்கத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை!

நடைமுறை வாழ்க்கையை ஒட்டியே நகரும் கதை இறுதியில் மதச் சின்னங்களை அகற்றி விட்டு ‘இனி நாங்கள் எந்த மதத்திற்கும் சொந்தமில்லை என்பதும்,எந்த மதக் கோட்பாடுகளும் எங்களைக் கட்டுப்படுத்தாது என்பதும்’ அந்தக் காலகட்டத்தில் பெரும் புரட்சியே. அது ஒருவிதப் புரட்சியென்றால் ‘நறுக்’ வசனங்களால் நாத்திகவாதியின் கதை சொல்லி, சாதி, மதங்களெல்லாம் மனித நேயத்திற்குப் பின்தான் என்று உணர்த்திய ‘வேதம் புதிது’ திரைப்படம் மற்றொரு மாஸ்டர் பீஸ்.

‘வேதம் புதிது’ வைதேகியும் சங்கர பாண்டியும் ஒரே மதத்தைச் சேர்ந்த இருவேறு சாதியினர். ’கண்ணால் தோன்றும் காதலுக்கு…கண்ணில்லை!’ என்று நம் முன்னோர் சொல்லி வைத்தார்கள். மூச்சுக்கு மூச்சு ‘ பாலுத்தேவர்’ என்று தன் பெருமை பேசிக்கொள்ளும் கிராமத்துப் பெருங்குடிக் குடும்பத்தில் வளரும் ராஜா, கல்லூரிப் படிப்பை முடித்து ஊருக்கு வந்ததும், சாஸ்திரக் குடும்பத்தைச் சேர்ந்த வைதேகியைக் காதலிக்க, வைதேகியின் தந்தை ‘நோ’ சொல்ல,பாலுத் தேவரோ பச்சைக் கொடி காட்ட, சமுதாய எதிர்ப்பால் திருமணம் தடைப்பட, வைதேகி(அமலா) இறந்து விட்டதாகப் போக்குக்காட்டி விட்டு, நிழல்கள் ரவியின் நிழலில் தங்க, தன் மகள் இறக்க ராஜாவே காரணம் என்று சாஸ்திரிகள் ராஜாவிடம் சண்டையிட, அந்த அமளி துமளியில் இருவரும் தாமிரபரணியில் விழுந்து இறந்துவிட, ஆதரவற்றுப் போகும் வைதேகியின் தம்பியை பாலுத்தேவரும் மனைவி சரிதாவும் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்து தங்க வைக்கின்றனர். சாஸ்திரிகள் குடும்பத்துச் சிறுவனுக்காக, தங்கள் வீட்டில் வளரும் கோழிகளையும் ஒழித்து விட்டுத் தாங்களும் சைவச் சாப்பாட்டுக்கு மாறுகின்றனர். வைதேகி தனக்குக் கிடைக்காத கோபத்தினால் ஜனகராஜ் அன்ட் பார்ட்டி வைக்கோல் போரைக் கொளுத்தி விட்டுத் தெய்வ குற்றம் என்று நாடகமாட, பாலுத் தேவர் போராடி இறக்க, தனக்கு மந்திரங்கள் கூடச் சொல்லிக் கொடுக்க மறுத்த தன் சமுதாயத்தினரை வெறுத்து இறுதியாகப் பாலுத் தேவருக்கு, மகன் முறையில் சிறுவனே கொள்ளி போடுவதுடன் முடியும் கதை.

வேதம் புதிது

தாமிரபரணியில் விழுந்த மகன், ‘கிடைத்தானா?’ என்ற பாலுத்தேவரின் கேள்விக்குக் ‘கிடைச்சிடிச்சு’ என்ற பதிலிலேயே முடிவைத் தெரிவித்து விடும் அந்த வசனத்தை என்னென்பது?

ஆற்றைக் கடக்கையில் பாலுத்தேவரின் தோளில் அமர்ந்தபடி சிறுவன் தன் தந்தை ஞாபகம் வந்ததாகச் சொல்ல,பாலுத்தேவரோ மகனை நினைத்துக் கொண்டதாகக் கூற,ஆற்றில் மட்டுமல்ல தண்ணீர்… நம் விழிகளிரண்டிலும்தான்! கதை கேட்டசிறுவனுக்குத் தோணியோட்டி-வேதம் கற்றவர் கதை சொல்லும் பாலுத்தேவர் முடிவில், ‘பொழைப்புக்கு எது தேவையோ அதைத்தான் கத்துக்கணும்’ என்பது வேத வாக்கியமல்லவா? ’இந்த சுடுகாட்டு ஆல மரத்தில துருப்பிடிச்ச ஆணியை அடிச்ச மாதிரி நம்ம பயலுக நெஞ்சில சாதிங்கற ஆணியை ஆழமா அடிச்சுப்புட்டாணுவ’ என்பது உண்மையிலும் உண்மையல்லவா?

”பாலு என்பது உங்கள் பெயர்.தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா?” என்று சிறுவன் கேட்க,செவிளில் அறை வாங்கியதைப்போல் பாலுத்தேவர் தவித்து,கத்தி,கபடாவையெல்லாம் ஆற்றில் போடும் காட்சி அருமை என்றால்,”நான் கரையேறிட்டேன்! நீங்க இன்னும் கரையேறாம நிக்கறளே?” என்பது அற்புதமான வசனமல்லவா!

திரையில் நல்ல கருத்துகளைப் பார்க்கின்ற,கேட்கின்ற நாம், தியேட்டரோடு அதனை மறந்து விடுவதுதான் வருத்தம் தரும் வாடிக்கை. வைராக்கியத்தில் மூன்று வகை சொல்வார்கள்.

- பிரசவ வைராக்கியம்

- இதிகாச/புராண வைராக்கியம்

- மயான வைராக்கியம்

பிரசவ வேதனையை அனுபவிக்கும் பெண், அந்த நேரத்தில் இனி கணவனை ஏறிட்டும் பார்க்கக் கூடாது என்று நினைப்பாளாம்.எவ்வளவு நேரத்திற்கு? குழந்தை பிறக்கும் வரை மட்டுமே. பிறந்ததும் தன் கணவன்தான் முதலில் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுவாளாம்.

ராமன் மணிமுடியைத் துறந்து காட்டுக்குப் போனதும்,பரதன் ராமனின் பாதணிகளை அரியணை ஏற்றியதைப் பார்க்கும் போது, இனி சகோதரர்களிடம் சண்டையே போடக் கூடாது என்று நினைக்கும் ஆண்கள், விடிந்ததும் வீச்சரிவாளைத் தூக்குவார்களாம் - சகோதரர்களை வெட்ட.

சுடுகாட்டில்,உடம்பில் இருப்பவற்றையெல்லாம் கழற்றி விட்டுத் தணல் மூட்டுகையில், ’சே! இதற்குத்தானா இத்தனை ஆர்ப்பாட்டமும்!’ என்று நினைத்துத் திருந்த நினைக்கும் மனசு, ஆற்றிலோ, குளத்திலோ தலை முழுகிய பிறகு, பழைய நிலைக்குத் திரும்பிப் பகையைக் கொண்டாட ஆரம்பிக்கும். இதுதானே நாட்டு நடப்பு.

பாரதிராஜா

இதிலிருந்து மாறி, எப்பொழுது முழுமையான வைராக்கியத்துடன் நாம் சாதிக்குச் சாவு மணி அடித்து, அதனைச் சவக் குழிக்குள் புதைக்கப் போகிறோம்? ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்ற கண்ணனின் நாடகம்தான், பாரதி ராஜாவால் ‘வேதம் புதிது’ என்று திரைக்கு வந்தது. ’பராசக்தி’, ’மனோகரா’, ’வீரபாண்டிய கட்டப்பொம்மன்’ போன்ற படங்கள் வசனத்திற்காகச் சிறப்புப் பெற்றாலும், அவையெல்லாம் நீண்ட வசனங்கள் கொண்டவை - டெஸ்ட் கிரிக்கெட் போல. ஆனால், கண்ணனின் வசனங்கள், 20 ஓவர் கூட இல்லை…10 ஓவர் கிரிக்கெட் போல. அதனால்தான் இப்படம் வெளிவந்த பிறகு ‘வேதம் புதிது கண்ணன்’ என்றே அவர் அழைக்கப்படுகிறார்.150 நாட்கள் ஓடிய இப்படம் சத்யராஜுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுத்ததோடு, ஆறு விருதுகளையும் பெற்றுக் கொடுத்து, குணசித்திர நடிகர் பட்டத்தையும் வாங்கிக் கொடுத்தது. படம், சில சாதியினரைக் குறை கூறுவதாக அடையாளப்படுத்தப்பட்டு, ரிலீஸ் ஆவதற்குத் தடங்கல் ஆனபோது, அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரே, ‘எனக்குப் படத்தைப் போட்டுக் காட்டுங்கள். பார்த்து விட்டு முடிவு சொல்கிறேன்’ என்று படத்தைப் பார்த்தாராம். படம் முடிந்ததும் ‘குறை சொல்ல ஏதுமில்லையே’ என்று கூறிவிட்டுப் படக்குழுவினரையும் பாராட்டினாராம். பாரதி ராஜாவின் படம் என்றால் கேட்கவா வேண்டும்? எம்.ஜி.ஆர்., பார்த்த கடைசிப்படம் இதுவென்றும் கூறப்படுகிறது.

எத்தனை நடந்து என்ன பயன்? இன்னும் சாதி,சமுதாயத்தில் நடமாடிக் கொண்டுதானே இருக்கிறது.

சாதியை ஒழிப்போம். சமதர்மம் வளர்ப்போம்.

- ரெ.ஆத்மநாதன், காட்டிகன், சுவிட்சர்லாந்து


source https://cinema.vikatan.com/tamil-cinema/tamil-cinema-religion-casteism

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக