Ad

சனி, 29 ஜனவரி, 2022

ஷியாம் சிங்கராய் படம் மட்டுமல்ல இவையும் கன்டென்ட்தான்; முகம் மாறும் தெலுங்கு சினிமா!

இப்போதைய சூழலில் டோலிவுட் சினிமாதான் இந்திய சினிமாவில் மிக ஆரோக்கியமாக இருக்கிறது என்கிறார்கள். கடந்த பத்து வருடங்களில் அத்தனை மாற்றங்கள். பார்த்தாலே பனைமரம் பற்றிக்கொள்வது, அதி வேகமாக வரும் ட்ரெயின் அசால்டாக நிறுத்துவது, ஒரே சமயத்தில் பல பேரை அடித்து துவம்சம் செய்து சிதைப்பது, பாடல் காட்சிகளுக்காக பெயர் தெரியாத நாடுகளுக்கு போய் டான்ஸ் ஆடுவது, பக்கம் பக்கமாக பன்ச் பேசுவது ஆகியவைதான் தெலுங்கு சினிமா என்றிருந்தது. அதற்கான முகம் மாறத் தொடங்கி இன்று நல்ல நல்ல கன்டென்டுகளை கொடுத்து தன்னை வேறு மாதிரி வடிவமைத்து கொள்கிறது டோலிவுட் சினிமா.

'பாகுபலி' போன்ற படங்கள் ஒரு பக்கம். 'ஜதிரத்னலு' போன்ற படங்கள் ஒரு பக்கம் என பக்காவாக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது. தெலுங்கு சினிமாவுக்கு இருந்த வழக்கமான டெம்ப்ளேட்டை உடைத்து, அதிரடி காட்டி வருகிறது. ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிவிட்டாலே டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இணைந்துவிடலாம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அப்படியில்லை. 'ரங்கஸ்தலம்' டோலிவுட் சினிமாவின் ட்ரென்ட் செட்டர் என்றே சொல்லலாம். கிராமத்து பின்னணியில் யதார்த்தமான ஓர் இளைஞனாக ராம் சரணை காட்டி, அதில் அழுத்தமான கதையை சொன்னார் இயக்குநர் சுகுமார். ஏகப்பட்ட மாஸ் படங்கள் அந்த சமயத்தில் வெளியாகி இருந்தாலும் புழுதி பறக்க ரத்தம் தெறிக்க புது சாயலில் வெளியான 'ரங்கஸ்தலம்' மிகப்பெரிய வெற்றியடைந்தது. ரஸ்டிக் ஃப்ளேவரில் ஒரு படம் இயக்க இன்ஸ்பிரேஷன் 'பருத்திவீரன்'தான் என்று ஒரு பேட்டியில் சொல்லிருந்தார், இயக்குநர் சுகுமார்.

புஷ்பா

அதனைத் தொடர்ந்து, அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் வெரைட்டி காட்டியிருந்தார். 'அலா வைகுந்தபுரமுலோ' படத்தில் செம ஸ்வாகாக இருந்தவர், 'புஷ்பா'வில் லுங்கியை ஏத்திக்கட்டி, ஒரு பக்கம் தோளை தூக்கி, சித்தூர் வட்டார வழக்கைப் பேசி என தன்னை புஷ்பராஜாக மாற்றிக்கொள்ள பயங்கரமாக மெனக்கெட்டிருக்கிறார். நான் ஸ்டைலான நடிகர் மட்டுமல்ல நல்ல பெர்ஃபார்மர் என நிரூபித்திருக்கிறார். அதே போல, வெங்கடேஷ். 'அசுரன்' போன்ற கிளாஸிக் படத்தை ரீமேக் செய்ய நினைப்பது சாதாரணமாக எடுத்த முடிவாக இருக்காது. வெங்கடேஷ் எப்படி இந்த லுக்கிற்கு பொருந்துவார் என்று கேள்விக்கு பதிலாய், படுமாஸாக வெளியானது 'நாரப்பா'வின் ஃபர்ஸ்ட் லுக் !

எல்லோரும் மாஸ் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று ராணா ஒரு பக்கம் சில பரிசோதனை முயற்சிகளில் இறங்கி பார்க்கிறார். 'பாகுபலி'யில் மிரட்டியவர், 'காடன்' படத்தில் மெலிந்து தன் உடல்வாகை மாற்றி உடல் மொழியை மாற்றி நடித்தது கவனிக்கப்பட்டது. படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பது வருத்தமாக இருந்தாலும் அவரின் முயற்சி பாராட்டப்பட்டது. அவரது நடிப்பில் 'விரட்டப்பர்வம்' என்ற படம் வெளியாக காத்திருக்கிறது. நக்ஸலைட்டுகள் பத்தின கதை. சாய் பல்லவி, பிரியாமணி, நந்திதா தாஸ் என பலர் இருக்கும் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also Read: ``ஷங்கர், முருகதாஸ், அட்லி... !" சுவராஸ்யம் பகிரும் அல்லு அர்ஜுன் #VikatanExclusive

'சைரன் ஆஃப் தசரா' போஸ்டர்

நானி படத்திற்கு படம் சேஞ்ச் ஓவர் காட்டி வருகிறார். 'ஜெர்ஸி' - கிரிக்கெட் படம், 'கேங் லீடர்' - ஃபேமிலி டிராமா, 'V' - நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார். ஆனால், சரியாக போகவில்லை. மீண்டும் பழைய டெக்னிக்கை கையிலெடுத்தார், 'டக் ஜெகதீஷ்'. ஃபேமிலி டிராமாதான். சமீபமாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற 'ஷியாம் சிங்கராய்'. டூயல் ரோலில் கலக்கியிருந்தார். பீரியட் போர்ஷனில் வரும் நானிதான் ஹைலைட் ! அடுத்ததாக, நஸ்ரியாவுடன் காமெடி படமொன்றில் நடித்து முடித்திருக்கிறார். பிறகு, 'சைரன் ஆஃப் தசரா' என்ற படம். கிராமத்து கதை. முடி, தாடியெல்லாம் வளர்த்து ரஸ்டிக்கான லுக்கில் வருகிறாராம். தவிர, குறிப்பிட்ட ஒரு வட்டார வழக்கைதான் படம் முழுக்க பேசவிருக்கிறாராம். இந்தப் படம் நானி கரியரில் முக்கியமானதாக இருக்கும் என்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசை, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு என டெக்னிக்கலாக நம்ம ஊர் நபர்கள்தான்.

ரவிதேஜாவும் இந்த வகை படத்துக்குள் வந்துவிட்டார். வழக்கமான ரவி தேஜா படமென்றால் மாஸ், ஆக்‌ஷன், காமெடி இவை மூன்றும்தான். தன் பங்கிற்கும் தானும் ரஸ்டிக் படமொன்று நடிக்கவேண்டும் என்று நினைத்துவிட்டார் போல. 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்பதுதான் படத்தின் பெயர். 1970களில் ஸ்டூவர்ட்புரம் பகுதியில் வாழ்ந்த ராபின்ஹூட்டான நாகேஸ்வர ராவ் என்பரின் பயோபிக்தான் இது. ஜிவி பிரகாஷ் இசை, மதி ஒளிப்பதிவு என இதற்கும் நம்ம ஊர் நபர்கள்தான் டெக்கனிக்கல் டீம். ஐந்து மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இப்படி தெலுங்கு சினிமா முழுக்க இப்படியொரு ட்ரென்ட் உருவாகி அதன் முகம் மாறி வருகிறது.

Also Read: "விஜய் `ரங்கஸ்தலம்' பார்த்துட்டு, என்கூட வொர்க் பண்ணணும்னு நினைச்சார்! ஆனா..."- `புஷ்பா' சுகுமார்

RRR

இந்திய சினிமா என்றால் பாலிவுட்தான் என்ற எண்ணத்தை மாற்ற போராடிக்கொண்டிருக்கிறது டோலிவுட். மார்கெட் ரீதியாக டோலிவுட்டின் மாஸ்டர் ப்ளான் என்னவென்றால், பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும், அதில் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னட சினிமாத்துறையில் ஜொலிக்கும் நபர்களை நடிக்க வைக்க வேண்டும். அப்படி செய்தால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய ஐந்து மாநில மக்களை ஈர்த்துவிடலாம். அதனை இந்தியில் டப் செய்து வெளியிட வேண்டும். இதன் மூலம் வணிக ரீதியாகவும் நிறைய கதவுகள் திறக்கும் ; அதில் நடிக்கும் நடிகர்களுக்கான பிசினஸும் விரிவடையும். தமிழில் இருந்து விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் படத்தை டோலிவுட் இயக்குநர்களை வைத்து தயாரிக்கிறார்கள். தவிர, மலையாளத்தில் இருந்து துல்கர் சல்மான், ஃபகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களையும் சுதீப், தனஞ்செயா, துனியா விஜய் போன்ற கன்னட நடிகர்களையும் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க வைக்கிறார்கள். சமீபமாக, 'RRR', 'புஷ்பா' பட விழாக்களில் இது தெலுங்கு சினிமா அல்ல ; இந்திய சினிமா என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியிருப்பார்கள். இந்தி படம் மட்டும் இந்திய சினிமா கிடையாது. நாங்களும் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறார்கள்.

டோலிவுட் ராக்ஸ்..!



source https://cinema.vikatan.com/tamil-cinema/an-article-about-the-transformation-of-tollywood-cinema

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக