Ad

புதன், 19 ஜனவரி, 2022

`பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி?!'...சொல்லும் கருத்துக் கணிப்புகள் - கள நிலவரம் என்ன?!

ஐந்து மாநிலத் தேர்தலில் அதிக முக்கியத்துவம் பெற்றிருப்பது உத்தரப்பிரதேசத் தேர்தல் களமாக இருந்தாலும், பஞ்சாப் தேர்தல் களத்திலும் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. பிரதமர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிகள் விவகாரம் சற்றே அடங்கியிருக்கும் இந்த நேரத்தில், பஞ்சாப் முதல்வரின் உறவினர்கள் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திவரும் சோதனையால் மீண்டும் பரபரப்பு பற்றிக் கொண்டிருக்கிறது பஞ்சாபில்!

பஞ்சாப்பில், பிப்ரவரி 20-ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருகின்றன.

காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி, பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்திருக்கிறார். ஐந்து முறை பஞ்சாப்பை ஆட்சி செய்த பிரகாஷ் சிங் பதாலின் சிரோமணி அகாலி தளம் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியோடு கூட்டணி சேர்ந்திருக்கிறது. இந்த இரு கூட்டணிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வந்தாலும், போட்டி என்னவோ காங்கிரஸுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையில்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

மோடியுடன் அமரீந்தர் சிங்

Also Read: பஞ்சாப்: கூட்டாக வலியுறுத்திய அரசியல் கட்சிகள் - சட்டமன்றத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதன் பின்னணி!

பஞ்சாப்பிலுள்ள 32 விவசாயச் சங்கங்களில், 22 விவசாயச் சங்கங்கள் இணைந்து ஆரம்பித்த சம்யுக்தா சமாஜ் மோர்ச்சா கட்சி, 117 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. பஞ்சாப்பின் மிகப்பெரிய வேளாண் சங்கமான பாரதிய கிஷான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்), விவசாயிகளின் கட்சிக்கு ஆதரவும் தரவில்லை, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, சம்யுக்தா சமாஜ் மோர்ச்சாவும் பஞ்சாப் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றுதான் கூறப்படுகிறது.

காங்கிரஸ் Vs ஆம் ஆத்மி!

2017-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி, என்னென்ன பிரச்னைகளைச் சரி செய்வோம் என வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்ததோ, அந்தப் பிரச்னைகள் எதுவுமே சரி செய்யப்படவில்லை என்றே சொல்லப்படுகிறது. அதோடு, மின் கட்டண குளறுபடிகள், மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகளும் சேர்ந்துகொண்டதால், ஆளும் காங்கிரஸ் அரசுமீது பஞ்சாப் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் மீதிருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி, பஞ்சாப் தேர்தலில் அதகளம் செய்துவருகிறது ஆம் ஆத்மி.

``காங்கிரஸ் அரசு செய்யத் தவறிய அனைத்தையும் நாங்கள் செய்வோம்; ஏற்கெனவே டெல்லியில் இதையெல்லாம் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்!'' என `டெல்லி மாடல்' என்பதை முன்னிறுத்தி பிரசாரம் செய்துவருகிறது ஆம் ஆத்மி. காங்கிரஸோ, ``டெல்லி மிகச் சிறிய யூனியன் பிரதேசம்; அங்கு செய்வதையெல்லாம் பஞ்சாப் போன்ற பெரிய மாநிலத்தில் செய்துவிட முடியாது'' என எதிர்ப் பிரசாரம் செய்துவருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் பக்வந்த் மான்

மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், 18 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து எளிய மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது ஆம் ஆத்மி. தொலைப்பேசி எண் ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் மக்களிடம் கருத்துக் கேட்டு முதல்வர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களில் அதிகம் பேர், பக்வந்த் மான் பெயரைச் சொன்னதால் அவரை முதல்வர் வேட்பாளராக ஆக்கியிருக்கிறது ஆம் ஆத்மி. ஜாட்-சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்த பக்வந்த் மான், நகைச்சுவைக் கலைஞர் என்பதால் பஞ்சாப் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸைப் பொறுத்தவரை தற்போதைய முதல்வரான சரண்ஜித் சிங் சன்னியையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னிதான். பஞ்சாப்பில் சுமார் 30 சதவிகிதம் தலித் மக்கள் வாழ்ந்து வருவதால், அவர்கள் வாக்குகளைக் குறிவைத்து சரண்ஜித் சிங்கையே முதல்வர் வேட்பாளராக நிறுத்துவார்கள் எனத் தெரிகிறது.

கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?

பஞ்சாப் தேர்தல் களம் குறித்து வெளியான கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவற்றில், `ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியமைக்கும்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆம் ஆத்மி சுமார் 37 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் கட்சி சுமார் 35 சதவிகித வாக்குகளையும் பெறும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் ஆம் ஆத்மியே முந்தி நிற்கிறது. ஆனால், காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான வாக்கு சதவிகிதம் என்பது மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது!

முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி

Also Read: `ரிசல்ட்' தெரிந்துதான் அகிலேஷிடம் ஐக்கியம் ஆகிறார்களா உ.பி பாஜக தலைவர்கள்?!

கள நிலவரம் என்ன?

பஞ்சாப் அரசியலை உற்று நோக்கும் சிலர், தேர்தல் கள நிலவரம் குறித்துப் பேசும்போது, ``பஞ்சாப்பில், காங்கிரஸுக்கு, ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தலித் மக்களின் வாக்குகளைக் குறிவைத்து சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராகக் களமிறக்கலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இந்த முடிவு அதிகார மட்டத்திலிருக்கும் ஜாட் சமூகத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம் ஆத்மி, ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பக்வந்த் மானை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இது காங்கிரஸுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் கடைசி நேரத்தில் காங்கிரஸ், ஜாட் சமூகத்தைச் சேர்ந்த நவ்ஜோத் சிங் சித்துவைகூட முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம். தற்போதைய நிலவரப்படி, ஆளும் காங்கிரஸ் அரசுமீது இருக்கும் அதிருப்தியால் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி ஒருபடி முந்தி நிற்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் எது எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்'' என்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/punjab-election-2022-current-status-will-aap-will-win

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக