இயல்பான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக்கூட மற்றவர்களை நம்பியிருக்கும் காலகட்டாயத்தில் முதியவர்களுக்குத் துணையிருப்பது அவர்களுடைய மனோபலம் ஒன்று மட்டுமே. இதை வைத்துக் கொண்டு போராடத் தேவையில்லை. வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தப் பிரச்சனையையும் மிகப் பொறுமையுடன் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மிக அவசியம். அதற்குத்தான் இந்தப் புரிதல் தேவைப்படுகிறது. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது, பிறர் மேல் கோபப்படுவது, தன் உரிமைகளை நிலை நாட்ட முயலுவது போன்ற செயல்களை முடிந்தளவு குறைத்துக் கொள்வது நல்லது. அந்த கால பெரியோர்கள், முதுமையை துறவற வாழ்க்கையோடு ஒப்பிட்டார்கள். மாபெரும் மன்னர்களே கூட முதுமையில் ஆட்சிப் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் சென்று முனிவர்களோடு வாழ்க்கையைக் கழிப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. துறவறம் என்பது பற்றற்ற நிலைதானே! இந்தக் காலத்தில் மனதால் அந்தத் துறவறத்தை எதிர்கொள்ளலாம். எதிர்பார்ப்புகளையும் அதிகாரங்களையும் குறைத்துக் கொள்வதே சிறந்தது.
எதையும் நேர்மறையாகவே பார்க்கும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பல கசப்பான நிறைவுகளை இந்த குணம் வடிகட்டிவிடும். 'எதிலும் வெற்றி! எப்பொழுதும் வெற்றி!' என்ற மனநிலையிலேயே வாழ்க்கையை நடத்திச் செல்ல முயல வேண்டும். எதைப் பேசினாலும், செய்தாலும் அதன் விளைவுகள் நன்மை தருவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது 'வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும்’ என்று செயல்படுவது நிம்மதியை தரும். 'இன்று புதியதாய் பிறந்தோம்’ என்பது போன்ற மனநிலையுடன் தைரியமாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு வயது ஆக ஆக எல்லா உறுப்புகளின் செயல் திறன்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே போகும். குறையாதது ஒருவருடைய மனநிலை மட்டும்தான். மனம் மட்டும் எப்பொழுதும் எதையாவது எண்ணி ஓய்வின்றி அசை போட்டுக் கொண்டே இருக்கும். அதற்கு பல உதாரணங்கள் உள்ளன. முதுமையில் மனம் ஒரு குரங்கு போல் என்பர். வேறு சிலர் மனம் ஒரு மதம் பிடித்த யானையை போல் என்பர். வேறு சிலரோ பாலைவனத்தில் கானல் நீரில் தண்ணீரை தேடி அலையும் மானைப் போல என்பர். முதுமையை நலமுடன் கடக்க வேண்டும் என்றால் முதலில் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி ஒரு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
ஒருவரின் மனோபலத்துக்கு மரணத்தைக் கூட வெல்லும் சக்தி உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்திலிருந்து வந்த ஒரு முதியவருக்கு வயிற்றுவலிக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் ஆபரேஷன் போது வயிற்றில் புற்றுநோய் தீவிர நிலையிலிருந்ததால் அறுவை சிகிச்சை ஏதுவும் செய்ய முடியவில்லை. உறவினர்களிடம் மட்டும் உண்மையைச் சொல்லிவிட்டு, பெரியவரிடம் வாயுத் தொல்லை என்று மருந்து கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சில மாதம் கழித்து மறுபரிசீலினைக்கு அவர் வரவில்லை. சுமார், இரண்டு ஆண்டு கழித்து முதியவரின் உறவினர் மூலம் அவரை நேரில் சென்று பார்க்கும் போது (அவர் இறந்திருப்பார் என்று எண்ணி) என்ன ஆச்சரியம்! முதியவர் வயல்காட்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்! புற்றுநோய் என்று அவருக்கு முன்பே தெரிந்திருந்தால் அவர் ஒரு வேளை இறந்திருப்பாரோ!
ஆரோக்கியமாக வாழ்ந்து, முதுமையை முடிந்தளவிற்கு தள்ளிப்போட நாம் நம்மை முதலில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதை செய்து முடிக்க அல்லது சாதித்துக் காட்ட முதலில் மனதில் அதீத உறுதி வேண்டும். நம் முயற்சியில் நாம் கண்டிப்பாக வெற்றி அடைவோம் என்ற எண்ணத்தை நம் ஆழ்மனத்தில் விதைக்க வேண்டும். பின்பு அதே உறுதியில், நாம் நினைத்ததை செயல்படுத்த வேண்டும். இதை தவறாமல் வாழ்க்கையில் கடைப்பிடித்தால் முதுமையையும் வெல்ல முடியும்.
மனநலம் காக்கும் மந்திரங்கள்
தனிமையைத் தவிர்க்கும் பழக்கம்
முதுமையின் விரோதி தனிமை. எப்பாடுபட்டாவது தனிமையைத் தவிர்க்கவேண்டும். முதுமையில் தனிமையில் முடங்கிக் கிடப்பவர்களுக்கு மூப்பின் விளைவு ஆறுமடங்கு அதிகமாக ஏற்படக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. நடுத்தர வயதிலிருந்தே முதுமைக் காலத்திற்காக நல்ல பொழுதுபோக்கு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். ஆனால், எந்த ஒரு பொழுதுபோக்கும் உங்கள் மனதுக்கு அமைதி தருவதாக அமைய வேண்டும் என்பது முக்கியம்.
தீயன துரத்தும் தியானம்
மனம் என்பது கட்டுக்கடங்காத ஒரு எண்ண அலைகளைத் தன்னுள் அடக்கிய சுரங்கம். ஒரே நேரத்தில் உடனுக்குடன் தாவும் குரங்குபோல மனம் எதையெல்லாமோ எண்ணிக் கொண்டிருக்கும் அல்லது சிந்தித்துக் கொண்டு இருக்கும். சிதறி ஓடும் எண்ணங்களை ஒரு நிலைப்படுத்துவதே தியானம். தியானத்தால் மனம் அமைதி அடைகிறது. தெளிவான சிந்தனை கிடைக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தி, நாம் நினைத்ததைச் சாதிக்கக்கூடிய தெளிவு பிறக்கிறது. மனோபலம், சகிப்புத்தன்மை, எதையும் எதிர்நோக்கும் பாங்கு இவை கிடைக்கின்றன.
பிரச்னை தீர்க்கும் பிராணாயாமம்
பிராணனை (பிராணவாயுவை) ஒழுங்குபடுத்தி (ஆயமம் செய்து) அதன்மூலம் யோக நிலைக்குப் படிகள் அமைப்பதே ‘பிராணாயாமம்’ எனப்படும். பிராண வாயுவை வெளியேற்றி வீணாக்காமல் செய்யும் செயலுக்கு பிராணாயாமத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். பிராணாயாமம் மூலம் ஐம்புலன்களை அடக்கும் வலிமை பெறலாம், ஆயுளையும் கூட்டலாம், வயதின் பாதிப்புகளைக் குறைத்து இளமையுடன் இருக்கலாம். ஆனால் இதை முறை தெரியாமலோ, புத்தகத்தில் பார்த்துப் படித்தோ செய்யக்கூடாது. தகுதியானவர்களிடம் முறையாகப் பயிற்சிபெற்று பிராணாயாமம் செய்தல் வேண்டும்.
மனவலிமை தரும் மௌன விரதம்
மௌனம் ஓர் உன்னதமான வழிபாட்டு முறையாகும். இதை முடிந்தளவிற்கு, தினமும் கடைப்பிடித்து வந்தால் மனம் ஒருநிலைப்படும். சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மௌளத்தை கடைப்பிடித்து அதை நாளாக, நாளாக சுமார் ஒரு மணி நேரம் வரை நீட்டிப்பது மிகவும் நல்லது. தொடர்ந்து மௌனத்தைக் கடைபிடித்து வருபவர்கள் எளிதில் சஞ்சலம் அடையமாட்டார்கள். மனமும் வலிமை அடையும், அவர் எண்ணங்களும் உறுதிப்படும். மௌன விரதத்தைத் தொடர்ந்து பழகிவரும்போது ஆனந்தம், அமைதி, புத்துணர்ச்சி ஆகியவற்றை அனுபவத்தில் உணர முடியும். முதுமையிலும் மனம் அமைதி பெறும்.
உடலை சீராக்கும் உண்ணாவிரதம்
வாரத்தில் ஒரு நாளாவது ஒரு வேளையோ, இரு வேளையோ உண்ணாவிரதம் இருப்பது மிக நல்லது. உண்ணாவிரதம் இருக்கும்போது கழிவுப்பொருட்களை வெளியேற்றி உடலை சீரான நிலைக்குக் கொண்டுவர இயலுகிறது.
திருப்தி தரும் தொண்டு
மனிதப்பிறவி எடுப்பதே மற்றவர்களுக்குத் தொண்டு செய்வதற்குத்தான். அப்படி இருக்கையில் முதுமையில் தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருத்தல் கூடாது. மற்றவர்களுக்காக வாழும் ஒரு நல்லெண்ணத்தை (thinking outside yourself) ஆழ் மனதில் பதியவிட வேண்டும். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் உதவும் பொழுது உங்கள் பிரச்னைகள் தானாகவே குறைகின்றன. தொண்டு என்பது உடலால் மட்டும் செய்யக்கூடியவை என்று எண்ணவேண்டாம். ‘பாவம், அவன் சிரமப்படுகிறானே’, என்று மனதில் நினைத்து, அவன் துன்பம் தீர மனதார நினையுங்கள் அல்லது பிரார்த்தனை செய்யுங்கள். தொண்டின் மூலம் மனம் இலகுவாகும். கஷ்டங்கள் குறையும். இதனால் மனம் திருப்தி அடையும்.
அமைதியாக்கும் ஆன்மிக சிந்தனை
கடவுளை நம்பாதவர்கள்கூட வயது ஆக ஆக நமக்கு மேலே ஒருவன் இருக்கிறான் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். நம்மை அறியாமலேயே நமது மனம் வயது ஆக ஆக ஆண்டவன் மீது நாட்டம் அதிகமாகிவிடுகிறது. முக்கியமாக பல பிரச்னைகள் எழும்பொழுது கடவுள் ஒருவர் தான் நம்மை கைவிடமாட்டார் என்ற நம்பிக்கை மனதில் எழுகிறது. ஆன்மிகத்தில் ஈடுபடுவது மூலம் மனச்சுமை குறைவதாக எண்ணுகிறார்கள். பல தீய எண்ணங்களில் இருந்து மனம் விடுபட்டு ஒரே நிலையை அடைகிறது.
மேற்கண்ட வழிமுறைகளை நடுத்தர வயதிலிருந்தே தினமும் தவறாமல் கடைப்பிடித்தால் நல்ல மனநலத்தோடு வாழலாம்.
பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ். நடராஜன், முதியோர் நல மருத்துவர், டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை
source https://www.vikatan.com/lifestyle/mind-and-age
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக