Ad

செவ்வாய், 18 ஜனவரி, 2022

சீர்காழி கோவிந்தராஜன் எனும் தமிழிசை வேள்வி - வாழ்வின் ஆதார உணர்வுகள் அனைத்துக்கும் பாடல்கள் தந்தவர்!

தமிழுக்கு ஒரு குரல் இருக்கும் என்றால் அது சீர்காழியின் குரலைப் போல கணீர் என்று இருக்கும் என்று சொன்னால் அது மிகையில்லை. சீர்காழி என்பது ஊரின் பெயர்தான். ஆனால் அந்தப் பெயரைக் கேட்டதும் முதலில் அது ஊர் என்று நம் நினைவுக்கு வருவதில்லை. அங்கு பிறந்து வளர்ந்து இசை பயின்று தன் காந்தக் குரலாலே தமிழ் உள்ளங்களையெல்லாம் கட்டிப் போட்ட சீர்காழி எஸ். கோவிந்தராஜன் முகமே நம் நினைவுக்கு வரும். அந்த அளவுக்குத் தன் இசையால் தமிழகத்தை ஆண்ட ஆள்கின்ற ஆளப்போகிற இசைக்கும் குரலுக்கும் சொந்தக்காரர் கோவிந்தராஜன்.

சீர்காழி தமிழிசையின் மையம். தமிழிசை மூவர்கள் என்று போற்றப்படும் அருணாசலக்கவிராயர், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மூவரையும் சீர்காழி மூவர் என்று போற்றுகிற வழக்கம் உண்டு. இந்த மூவருமே சீர்காழியில் வாழ்ந்தவர்கள். கர்னாடக இசைக்கு நிகரான தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றித் தமிழிசையை மேம்படுத்தியவர்கள். அப்படிப்பட்ட இசை வளம் செறிந்த பூமியிலிருந்து கோவிந்தராஜன் மற்றுமொரு வரமாகத் தமிழிசைக்குக் கிடைத்தார்.

சீர்காழி கோவிந்தராஜன்

கோவிந்தராஜனுக்குச் சிறுவயது முதலே இசை ஆர்வம் அதிகம். அதனால் பள்ளிக்குப் போகிற வயதிலேயே தன்னை மறந்து இசை ஒலிக்கும் இடங்களுக்குச் சென்று கேட்டுக்கொண்டிருப்பாராம். அந்தக் காலத்தில் தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோரின் பாடல்கள் மிகவும் புகழோடு விளங்கின. கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல்களை ஒருமுறை கேட்டால் போதும் அவற்றை அப்படியே பாடி அசத்துவாராம். இவரின் இசை ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட அவரின் தந்தை இசைப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பல்வேறு இசைப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசில்கள் பெற்றதோடு பல இசைவாணர்களின் கவனத்தையும் ஈர்த்தார் கோவிந்தராஜன்.

சீர்காழியின் தாய் மாமன் எஸ்.பி.கிருஷ்ணன் நாடகக்குழு நடத்தி வந்தார். அதனாலோ என்னவோ கோவிந்தராஜனுக்கு நடிக்கும் ஆசை வந்தது. நாடகத்தில் நடித்துக் கொண்டே பாடத் தொடங்கினார். அதன் பின் தேவி நாடக சபாவில் சேர்ந்து மாத சம்பளத்துக்கு நாடகத்தில் நடித்தார். அப்போதுதான் சினிமா இதழ் ஒன்றை நடத்திவந்த பி. எஸ் .செட்டியார் என்பவரின் கண்ணில் பட்டார் சீர்காழி. கோவிந்தராஜனின் கணீர் குரலும் ஆர்வமான நடிப்பும் செட்டியாரின் கருத்தைக் கவர அவரைத் திரையுலகுக்கு அழைத்து வந்தார்.

பாடுவதிலிருந்து நடிப்பதில் ஆர்வம் மாறிவிட்ட காலகட்டம் அது. ஆனால் தெய்வாதீனமாக ஒருமுறை சங்கீதச் சக்கரவர்த்தி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் ஜி. ராமநாதன் கோவிந்தராஜன் பாடுவதைக் கேட்டார். அந்தக்குரலில் இருந்த ஈர்ப்பும் தெளிவும் அவரை உள்ளூர வருடியது. அவர் சீர்காழியை அழைத்து, "யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால் உன்னைப் போல் யாராலும் பாட முடியாது. உன் குரல் இறைவன் கொடுத்த வரம். இனி நடிப்பை விட இசையில் கவனம் செலுத்து" என்று கூற சீர்காழி தன் பாதை எது என்பதைத் தீர்மானம் செய்தார். அதன்பின் இசை சாதகத்தில் தீவிரமாக இறங்கினார்.

சீர்காழி கோவிந்தராஜன் தன் குடும்பத்தினரோடு

திரையிசையாகவும் ஆன்மிக இசையாகவும் அவர் பாடிய பாடல்கள் வெளிவரத்தொடங்கின. மக்கள் அவரின் குரலில் சொல்லமுடியாத ஓர் உணர்வுத் ததும்பலைக் கண்டனர். தேவன் கோயில் மணியோசை ஆகட்டும், உள்ளத்தில் நல்ல உள்ளம் ஆகட்டும், எங்கிருந்தோ வந்தான் ஆகட்டும் கேட்கும்போது அவர் குரல் நமக்குள் நிகழ்த்தும் ரசவாதம் வார்த்தைகளால் சொல்லமுடியாதது. கண்களைமூடிக் கேட்டு முடிக்கும் தருணம் கனத்த மனம் கூடக் காற்றில் கரைந்து இலகு வாகிவிட்டதுபோல் தோன்றும்.

தோல்வியில் துவண்டுகிடப்பவர்களை எதிர்நீச்சல் போடு என்போம். அதையே சீர்காழி பாட்டாகப் பாடும்போது நமக்குப் பல்மடங்கு நம்பிக்கை வந்துவிடுகிறது. நாள் நட்சத்திரம் பார்த்து மகிழ்வோ சோர்வோ அடைபவர்களுக்காகவே 'சுபதினம்' பாடல் ஒலிக்கும். வீர உணர்ச்சியை வெளிப்படுத்த 'நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' பாடல். இப்படி மனித வாழ்வில் ஆதார உணர்வுகள் அனைத்துக்குமான பாடல் சீர்காழியின் குரலில் உண்டு.

திரை இசை மட்டுமல்ல ஆன்மிக இசையிலும் இவருக்கென்று தனித்த முத்திரை உண்டு. டி.எம்.எஸ் என்றதும் நம் மனதில் முருகன் பாடல்கள் ஒலிப்பதைப்போல சீர்காழி என்றதும் விநாயகர் பாடல்கள் ஒலிக்கும். தினமும் நாம் கேட்கும் விநாயகனே வினை தீர்ப்பவனே, விநாயகர் அகவல் போன்ற காலத்தால் அழியாத பாடல்கள் அநேகம். நீ அல்லால் தெய்வமில்லை, சின்னஞ்சிறு பெண்போலே ஆகிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

சீர்காழி கோவிந்தராஜன்

இசையில் உச்சத்தைத் தொட்டாலும் திரைப்படங்களில் நடிக்கும் ஆவல் அவருக்கு நீங்கவில்லை. ஆனால், நடித்தால் பக்திப்படங்களில்தான் நடிப்பேன் என்று உறுதிபூண்டார். அதன்படி அவர் நடித்த கந்தன் கருணை, திருமலை தென்குமரி, அகத்தியர், ராஜராஜ சோழன், தசாவதாரம், மீனாட்சி திருவிளையாடல் படங்கள் புகழ்பெற்றவை. ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதுவும் தான் பெரிதும் மதிக்கும் இயக்குநருக்காக.

இவர் நடித்த 'அகத்தியர்' திரைப்படம் இவரின் மாபெரும் அடையாளம். தமிழ்த் திரையுலகில் ஔவை என்றால் எப்படிக் கேபி சுந்தராம்பாள் நினைவுக்கு வருவாரோ அதேபோன்று அகத்தியர் என்றால் சீர்காழி கோவிந்தராஜனே நினைவுக்கு வருவார்.

1988-ம் ஆண்டு சீர்காழி கோவிந்தராஜன் மறைந்துவிட்டார். ஆனால் அவர் குரல் எப்போதும் நம்மோடு இருக்கிறது. நம் காலைகளை அழகாக்குகிறது. சுப்ரபாதங்களுக்கு இணையான சிலிர்ப்பைத் தருகிறது. பக்தியும் தமிழும் இசையும் இருக்கும் அளவுக்கு அவரின் குரல் உயிர்ப்போடு நம்மிடையே இருந்து நம்மை வலுச்சேர்க்கும் என்றால் அது மிகை இல்லை.
உங்களுக்கு மிகவும் பிடித்த சீர்காழி கோவிந்தராஜன் பாடலை கமென்ட்டில் தெரிவியுங்கள்.


source https://www.vikatan.com/spiritual/celebrity/remembering-the-legendary-singer-sirkazhi-govindarajan-on-his-birthday

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக