Ad

திங்கள், 24 ஜனவரி, 2022

விருந்தோம்பல் | மரவள்ளிக்கிழங்கு போண்டா #MyVikatan

பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் இருந்து ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக என் மகனின் பத்தாவது பிறந்தநாளுக்கு குருவாயூர் செல்லலாம் என்று ஒரு திட்டம் போட்டோம். சென்னையில் இருந்து இரண்டு நாள் பயணமாக கேரளா கிளம்பினோம். முதல் நாள் காலை திருச்சூரில் இறங்கி நண்பர் வீட்டில் காலை உணவு சாப்பிட்டதும், காரில் அதிரப்பள்ளி அருவிக்கு கிளம்பினோம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஆனது. போகும் வழியெல்லாம் மலைக்காடும் காப்பிச்செடிகளுமாக கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. பாதைகள் சீராக இருந்ததால் எந்த பிரச்னையும் இல்லாமல் அதிரப்பள்ளி அருவிக்கு வந்தோம். மலையின் உச்சியில் இருந்து பளிங்கு போல விழும் அருவிகளையும் மறுபுறம் நெழிந்து ஓடும் நீரோடைகளைப் பார்த்தது கண்களுக்கு விருந்தாக இருந்தது. பின்னர் கீழே இறங்கி அருவியை மிக அருகில் கண்டு ரசித்து படங்கள் எல்லாம் எடுத்து முடிந்ததும், மேலே ஏறுவதற்கு சரியான படிகள் இல்லாததால் சிறிது கஷ்டப்பட்டோம். மலைகளின் அழகும் சில்லென்ற காற்றும் பயணத்தை இனிதாக்கியது. மேலே வர சரியாக 3 மணி நேரம் ஆனது. 

பின்னர் கூகுள் மேம்பில் குருவாயூர் செல்வதற்கு டைரக்‌ஷன்ஸ் போட்டு கிளம்பினோம். போகும் வழிகளில் சின்ன சின்ன ஊர்கள் உள்ளன. ஆனால், எந்த இடத்திலும் டீக்கடையோ, ஹோட்டல்களோ இல்லை. மாலை வேளையில் சூரிய ஒளி குறையும் நேரத்தில் ஒரு சிறிய கிராமத்தில் தள்ளுவண்டியில் கணவன் மனைவி இருவரும் பஜ்ஜி, பழம்பொரி  செய்வதை பார்த்தோம். உடனே காரை அங்கு நிறுத்தி ஒரு சின்ன டீ பிரேக் எடுத்தோம். பின்னர் அவர்களிடம் பேசிய போதுதான் தெரிந்தது அவர்களுக்கும் தமிழ் நாடுதான் என்று. முதலில் பஜ்ஜி சாப்பிட்டோம், பிறகு அந்த அம்மா வித்தியாசமாக ஒரு மசாலா தயார் செய்து கொண்டிருந்தார். அது என்ன மசாலா என்று கேட்டதும் கப்பா போண்டாவுக்கு மசாலா என்று சொன்னார்கள். முதலில் எனக்கு புரியவில்லை. ’மரவள்ளிக் கிழங்கை வைத்து போண்டா செய்வோம்’ என்று விளக்கினார்கள். ’இதற்கு முன் இந்த மாதிரி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை’ என்று சொன்னதும், உடனே கரைத்து வைத்துள்ள மாவில் பிரட்டி சூடான போண்டாக்களை தயார் செய்து தந்தார்கள். மிகவும் சுவையாக இருந்தது. 'இன்னும் இரண்டு சாப்பிடுங்கள்’ என்று அன்போடு உபசரித்தார்கள். போண்டா சாப்பிட்டதும் அவர்கள் தந்த சூடான ஏலக்காய் டீ சுவையோ சுவை. எங்கள் தலைவலியும் சரியானது. கிளம்புவதற்கு முன் அவர்களிடம் ரெசிபி கேட்க ஆரம்பித்தேன். 

மரவள்ளிக்கிழங்கு போண்டா

அங்கு டீ குடிக்க வருபவர்களை பார்த்து வியந்தோம். இயற்கையின் பேரழகு கொட்டி கிடக்கும் ஓர் அருமையான இடத்தில் அந்த மனிதர்கள் மரத்தடியில் அமர்ந்து செல்போன் தொல்லைகள் இல்லாமல் டீ குடித்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருந்தார்கள்.

டீ குடிக்க நிறுத்திய போது ஆர்வம் காட்டாத என் பையன் போண்டாக்களைச் சாப்பிட்டதுமே, ’நாளையும் இதே பாதையில் வந்து மீண்டும் போண்டா சாப்பிடலாம்’ என்று கூறினான்!

அங்கிருந்து குருவாயூர் செல்வதற்கு அரைமணி நேரம் ஆனது. மறுநாள் காலை மகனின் பிறந்த நாள் அன்று குருவாயூர் கோவிலில் நல்ல தரிசனம் கிடைத்தது. வெளியே வந்ததும் கோவில் வாசலில் ஹோட்டல் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமில் அருமையான மசால் தோசை சாப்பிட்டுக் கிளம்பினோம்.

சென்னை வந்ததும்‌  மரவள்ளிக்கிழங்கை வாங்கி அவர்கள் கூறியது போல செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அவர்கள் கூறியதுபோல புதுக்கிழங்கை வேகவைத்து மசிக்கும்போதே வித்தியாசம் தெரிந்தது. உருளைக்கிழங்கு போண்டாவை விட மரவள்ளிக்கிழங்கு போண்டா எவ்வளவு நேரம் ஆனாலும், அதன் சுவை மாறாமல் நன்றாக இருந்தது.

இதோ அதன் செய்முறை...

தேவை

மரவள்ளிக்கிழங்கு - 2

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கடுகு & உளுந்து - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

போண்டா மாவு செய்ய 

கடலை மாவு - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1.5 டீஸ்பூன்

ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்

பெருங்காயத் தண்ணீர் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

மரவள்ளிக்கிழங்கு போண்டா

செய்முறை

 1. முதலில் மரவள்ளிக் கிழங்கை வேக வைத்து தயார் செய்து கொள்வோம்.  

மரவள்ளிக்கிழங்கை நறுக்கிய பின்  நன்றாக கழுவியதும் இரண்டு தோல்களையும் நீக்கி மீண்டும் இரண்டு அல்லது மூன்று கழுவி அகலத்துண்டுகளாக நறுக்கிக் கொள் ளுங்கள்.‌ நறுக்கும்  போது நடுவில் இருக்கும் வேர் பகுதியை நீக்கி விட்டு குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஐந்து முதல் எட்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பின் அதிகப்படியான நீரை வடிகட்டிக் கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கு ரொம்பவும் கொழ கொழவென வெந்துவிடக் கூடாது. இதனை அப்படியே சிறிது நேரம் ஆறவிடுவோம். 

2. இப்போது போண்டாவுக்கு மேல் மாவை தயார் செய்ய போகிறோம். 

அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, ஆப்ப சோடா மற்றும் பெருங்காயத்தண்ணீர் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

மாவு ரொம்பவும் கெட்டியாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில் ரொம்ப தண்ணியாகவும் இருக்கக்கூடாது.  இப்போது ஒரு பதினைந்து நிமிடங்கள் மூடி வைப்போம். 

3. அடுத்து மரவள்ளிக்கிழங்கு மசாலாவைத் தாளிக்கப் போகிறோம். 

மரவள்ளிக்கிழங்கை மசித்துக் கொள்ளவும். மசித்த  பின்பு ஒன்று இரண்டு துண்டுகள் இருந்தால் அப்படியே இருக்கட்டும். போண்டா சாப்பிடும்போது துண்டுகள் வருவது சுவையாகத்தான் இருக்கும். 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளுங்கள். 

பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி  மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட்டு, மசித்து வைத்துள்ள மரவள்ளிக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து நன்றாக கலந்து விடுங்கள். ஒரு தட்டில் மாற்றி அப்படியே ஆறவிடுங்கள்.  

4. அந்த மசாலாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறிய உருண்டைகளை பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து தயார் செய்து வைத்திருக்கும்  மாவில் தோய்த்து, ஒவ்வொன்றாக எடுத்து எண்ணெயில் விட்டு பொரித்து எடுக்க வேண்டியதுதான். சூடான சூப்பரான மரவள்ளிக் கிழங்கு போண்டா தயார்.

மரவள்ளிக்கிழங்கு போண்டா செய்முறையை இந்த வீடியோவில் காணலாம்.

மரவள்ளிக்கிழங்கு போண்டா செய்யும்போது கவனத்தில் கொள்ளும்படி கேரள தள்ளுவண்டி கடையினர் அளித்த டிப்ஸ் ‌

• மரவள்ளிக்கிழங்கை வாங்கிய அன்றே செய்ய வேண்டும்.

• புதிய மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சமைக்கும்போதுதான் நல்ல வெண்ணெய் போல மிருதுவான தன்மையோடு இருக்கும்.

• மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கும்போது, பிரவுன் கலர் மற்றும் ரோஸ் கலரில் இருக்கும் கெட்டியான தோலையும் பிரித்தவுடன், நன்றாக இரண்டு அல்லது மூன்று கழுவிய பின், குக்கரில் அல்லது அகலமான பாத்திரத்தில் போதுமான தண்ணீர் விட்டு வேகவைத்து, பின் அதிகப்படியான நீரை வடிகட்டி, மசித்து மசாலா தயார் செய்ய வேண்டும்.

• மரவள்ளிக் கிழங்கை அதிகப்படியாக வேக வைத்து சொத சொதவென ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் மசாலா செய்யும்போது சரியான பதத்தில் இல்லாமல் போனால் தண்ணீர் விடும் பதத்தில் மாறி பின் பூரிக்கு செய்யும் மசாலா போலாகிவிடும்.

• மசாலா செய்யும்போது இஞ்சி, பச்சை மிளகாய் கொஞ்சம் தூக்கலாக சேர்த்தால்தான் நன்றாக இருக்கும்.

• போண்டா மாவுக்கு... பஜ்ஜி போண்டா மிக்ஸ் மாவிலும் செய்யலாம். அல்லது நீங்கள் வழக்கமாகச் செய்யும் முறையில் கரைத்தும் செய்யலாம்.

உங்கள் கவனத்துக்கு: உடல் எடை குறைவாக இருப்பதும் பருமனாக இருப்பது போலவே ஆபத்தானது. ஆரோக்கியமாக எடை அதிகரிக்க மரவள்ளிக்கிழங்கு உதவுகிறது. ஒரு கப் வேகவைத்த மரவள்ளிக்கிழங்கில் தினசரி கார்போஹைட்ரேட் தேவையில் 45 சதவிகிதம் கிடைக்கும் என்பதால் தேவையற்ற கொழுப்புகள் இல்லாமல் கலோரிகளை சேர்ப்பது எளிதாகும். மரவள்ளிக்கிழங்கை தனியாக சாப்பிடாமல் புரதச்சத்துக்கள் நிறைந்த வேகவைத்த பயறு, கடலை அல்லது அசைவ உணவோடு சேர்த்துக் கொள்ளலாம்.


source https://www.vikatan.com/food/tapioca-bonda

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக