Ad

திங்கள், 31 ஜனவரி, 2022

ஆழமான பாசமும் அதன் தாக்கமும்! #MyVikatan

காதலை மட்டுமே மையக் கருத்தாகக் கொண்டு திரைப்படங்கள் பெருகி வந்தாலும், நடுநடுவே பாசத்தைக் கருவாகக் கொண்ட திரைப்படங்களும் வெள்ளித் திரையை அலங்கரித்தன. அண்ணன்- தம்பி, அண்ணா- தங்கை,அப்பா-மகள்,அன்னை-மகன் என்று பாசத்தை அடித்தளமாகக் கொண்டு பல படங்கள் வெளி வந்தாலும், ஒரு சில படங்களே மக்களின் மனத்தில் எந்நாளும் குடியிருந்து கோலோச்சும் தன்மை பெற்றன. அந்த விதத்தில் ஒரு சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

பாசம் என்றவுடனேயே நம் உள்ளத்தின் உள்ளே ஓடுவது ‘பாசமலர்’ சினிமாதானே! 60 ஆண்டுகளைக் கடந்தும் (ரிலீஸ் மே 1961) நம் அடி மனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதென்றால் அதன் வீச்சினை விளக்கிடவும் வேண்டுமோ? சிறு வயதிலேயே தாயும் இறந்து விட,தங்கையையே உலகமாக நினைத்து வாழும் அண்ணன், தங்கைக்காக தன் வாழ்வையே தியாகம் செய்வதுதான் கதை.இது வழக்கமான கதைதானே…இதில் என்ன புதுமை இருக்கிறது என்கிறீர்களா? இதோடு நிறுத்தியிருந்தால் அது வழக்கமான கதையாகவே போயிருக்கும்.தன்னுடைய மகளைக் காப்பாற்றும் முயற்சியிலேயே தன் பாச அண்ணன் பார்வையை இழந்துள்ளார் என்று அறிந்த அந்தத் தங்கை,அண்ணன் இறக்கும்போது,அவரின் கையைப் பிடித்தபடி தானும் இறக்கிறாளே… அங்கேதான் பீம்சிங்கும் கொட்டாரக்காராவும் சிவாஜியும் சாவித்திரியும் சரித்திரம் படைக்கிறார்கள்; நம் மனதுக்குள் புகுந்து,கண்களில் நீரை வரவழைக்கிறார்கள்; பச்சென்று நினைவுகளில் ஒட்டிக் கொள்கிறார்கள்; மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி,பசுமை மாறாமல் வலம் வருகிறார்கள்.

பாச மலர்

ராஜூ(ராஜசேகரன்)வும் ராதாவும் சிறுவயது முதற்கொண்டே தங்கள் வருமானத்தைத் தாங்களே ஈட்டி வரும் வேளையில்,ராஜூ வேலை செய்யும் தொழிற்சாலை,தொழிலாளர் பிரச்னை காரணமாக மூடப்பட,அவன் அதிர்ச்சியடைய,அப்பொழுது தான் பொம்மை செய்து விற்று சேர்த்த ரூ 1000/ ஐக் கொடுத்துச் சொந்தமாகவே தொழில் தொடங்க உற்சாகமளிக்கிறாள்,உற்ற தங்கையான ராதா.அவனும் சொந்தமாகத் தொழில் தொடங்கிப் பம்பரமாக உழைக்க,விரைவிலேயே சிறந்த முன்னேற்றம் காண்கிறார்கள்.ராஜூவின் நண்பன் ஆனந்த் (ஜெமினி கணேசன்) ராதாவைக் காதலிக்க,முதலில் மறுத்தாலும்,தங்கையும் காதலிப்பதையறிந்து திருமண ஏற்பாடுகள் செய்கிறான் ராஜூ. திருமணத்திற்குப் பிறகு ஆனந்த் குடும்பமே ராஜூவின் வீட்டில் குடியேற,ஆனந்த்தின் அத்தையும் அவர் மகனும் சொத்தில் பங்கு கேட்க,ராஜூவின் டாக்டர் மனைவி எதிர் வழக்காட,ராதாவின் சிரமத்தைத் தீர்க்கும் பொருட்டு ராஜா கேசை வாபஸ் வாங்கிக் கொண்டு,நீண்ட காலத்திற்கு யாத்திரை சென்று விட்டுத் தீபாவளிக்கு ஊர் திரும்ப,ராதாவைப் பார்ப்பதற்கு ஆனந்த்தின் அத்தை மறுப்பு தெரிவிக்க,திரும்பும்போது வெடி விபத்திலிருந்து ஒரு சிறுமியைத் தன் தங்கை மகள் என்று தெரியாமலேயே அவன் காப்பாற்ற,அதில் ராஜூ பார்வை பறிபோக, அவனைக் காணத் தங்கை ராதா வர,தங்கை முகத்தைக் காண முடியாத ஏக்கத்தில் இறக்கும் அவனின் கையைப் பிடித்தபடி ராதாவும் இறக்கிறாள்.

‘தங்கை உயிர் எண்ணித் தன்னுயிரை வைத்திருந்தான்

அண்ணன் வளர்த்த உயிர் அவனுடனே சென்றதம்மா!’

‘மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்-

அண்ணன் வாழ வைப்பான் என்றே அமைதி கொண்டாள்’

திருமண வீடுகளில் இன்றைக்கும் ஒலிப்பது...

‘வாராய் என் தோழி வாராயோ! மணமேடை காண வாராயோ!

எல்லோர் வாய்களிலும் ஹம்மிங் ஆவது.

‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

வளரும் விழி வண்ணமே வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விளைந்த கலை அன்னமே…

நதியில் விளையாடிக் கொடியில்

தலை சீவி நடந்த இளந்தென்றலே…’

தென்றலுக்கு இப்படி ஒரு வரையறையை இது வரை நம் கண்ணதாசனைப்போல எந்தக் கவிஞனும் கொடுத்ததில்லை என்பது தனிச் சிறப்பு.பாடல்கள் இப்படி என்றால்…காட்சிகளும் வசனமும்!

ஒட்டுப் போட்ட பழைய கோட்டுடன் தங்கையைத் தேடி வரும் ராஜூவைப் பிச்சைக்காரன் என்றெண்ணி, சோறு கொண்டு வரும் ஆனந்த்தின் அத்தையுங்கூட நம் மனத்தில் நிற்கத்தான் செய்கிறார். காந்தி நினைவு வரும் போதெல்லாம் கோட்சே நினைவும் வரத்தானே செய்யும்-அதைப்போல.’ஆனந்தா! என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். அதில ஆனந்தக் கண்ணீரை மட்டும்தான் பார்க்கணும்!’என்ற சிவாஜியின் வசனத்தை மனதிற்குள் முணுமுணுத்தபடிதான் பல்லாயிரக்கணக்கான தமிழக அண்ணன்மார்கள் தங்கள் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.தான் காப்பாற்றிய தன் தங்கையின் பெண்ணின் பெயரைக் கேட்க,அச்சிறுமி ‘சாந்தி’ என்க,’ எனக்கு வாழ்க்கையில் கிடைக்காததை உன் அம்மா உனக்குப் பெயராக வைத்திருக்கிறாள்’ என்பதில்தான் எத்தனை அர்த்தங்கள்! எவ்வளவு வேதனைகள்! ’கை வீசம்மா கை வீசு…கடைக்குப் போகலாம் கை வீசு…மிட்டாய் வாங்கலாம் கை வீசு…’சிவாஜியின் குரலுக்குத்தான் எவ்வளவு வீரியம்!

கிராமங்களில் கூட பாசத்துடன் இருக்கும் அண்ணனைப்பார்த்து ‘ம்... பெரிய பாசமலர் அண்ணன்தான் போ!’ என்று சொல்லுமளவுக்குப் பாசமலர் கிராமத்து மக்களிடையேயும் பிரபலமானதே அதன் வெற்றிக்குச் சான்று.

1962-ம் ஆண்டில் இரண்டாவது சிறந்த தேசிய திரைப்படமாகப் ‘பாச மலர்’ விருது வாங்கியது. இன்றளவும் பார்த்தவர்கள் இதயத்திலெல்லாம் ஒட்டிக் கொண்டுள்ளது. நடித்தவர்களில் பெரும்பாலோர் நம்மை விட்டுச் சென்றுவிட்ட பிறகும்கூட பாசமலரின் வாசம் வீசிக் கொண்டேதான் இருக்கிறது. நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி அது நடந்து கொண்டேதான் இருக்கும். தென்றலும் தமிழும் உள்ளவரை பாசமலர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.

அதே தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக வந்த மற்றொரு படம் ‘ராஜபார்ட் ரங்கதுரை(1973). நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் விதமாக எடுக்கப்பட்ட அப்படத்தில்,பிரசவத்தின்போது தன் தங்கை (ஜெயா) இறந்து விட, ஜோக்கர் வேடத்தில் ‘ஜின் ஜினுக்கான் சின்னக்கிளி’ என்று சிவாஜி போடும் ஆட்டத்தில், கவலை, வருத்தம், அழுகை, வேதனை, சோகம், கடமை அத்தனையும் மிளிர்வதைக் கண்டு, கலங்காத உள்ளங்களே இல்லை எனலாம். கண்ணதாசன், டி.எம்.எஸ்., சிவாஜி கூட்டணி சேர்ந்தால், காலத்தை வெல்லும் கலைப் பொக்கிஷங்கள் உருவாகும். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பாடலும் படமும்.

ராஜபார்ட் ரங்கதுரை

இது போன்ற படங்கள் வெற்றி பெற்றதற்கு நிறைய காரணங்கள் உண்டு.அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, நமது பெண்களுக்கு இப்போதுள்ளது போல் கல்வி கற்கும் வாய்ப்புகளோ,சுயமாகச் சம்பாதிக்கும் சந்தர்ப்பங்களோ மிகக் குறைவு.கல்யாணமான பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் உரிமையும் கிடையாது.தன் வீட்டில் தங்கை இருந்தால்,அத் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்த பிறகே அண்ணன்கள் கல்யாணம் செய்து கொள்வார்கள்.அதோடு மட்டுமல்ல.மணமான பெண்களுக்கு,தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் பிறந்த வீட்டுச் சீதனமாக, வரிசை கொடுக்கும் வழக்கம் இன்றளவும் வழக்கத்தில் உள்ளது. எனவேதான் தாய் மாமன் உறவு முக்கியம் பெற்றது. தாய் மாமன்கள் சகோதரிகள் குடும்பத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.

’மயிருக்கு மிஞ்சின கறுப்பும் இல்லை! மச்சானுக்கு மிஞ்சின உறவும் இல்லை!’ என்ற பழமொழியே வழக்கத்தில் இருந்து வந்தது. தன்னுடைய அனைத்துச் சொத்துக்களும் போனாலும் பரவாயில்லை, தன் தங்கை சந்தோஷமாக வாழ வேண்டுமென்ற எண்ணம் கொண்ட சிவாஜியைப் பல அண்ணன்களும் விரும்பியேற்றார்கள்.அதே போல அண்ணனுக்காகத் தான் சம்பாதித்த ரூ 1000-ஐக் கொடுப்பதும் அந்தக் காலகட்டத்தில் சாதாரணமானதல்ல. ஒரு பெண்ணால் அவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதே சற்று ஆச்சரியமானதுதான். நல்ல திரைப்படங்களை வாழ்க்கைப் பாடமாக ஏற்போம். சகோதரத்துவம் தழைத்தோங்க வகை செய்வோம். சகோதரிகளைக் கண்கலங்காமல் பாதுகாப்போம்.

‘எங்களுக்கும் காலம் வரும் காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே’

இதுவும் பாசமலர்ப்பாடல்தான். அனைவரையும் வாழ வைப்போம்!

- ரெ.ஆத்மநாதன், கூடுவாஞ்சேரி


source https://cinema.vikatan.com/tamil-cinema/pasa-malar-rajapart-rangadurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக