Ad

சனி, 29 ஜனவரி, 2022

விழுப்புரம்: நேர்காணலில் மனைவி, மகன்; செஞ்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளரா அமைச்சர் மஸ்தான் மகன்?

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் தன் கட்சி வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியினை மும்முரமாக செய்து வருகின்றனர் அரசியல் கட்சியினர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளிலும் இப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் செஞ்சி, பேரூராட்சியாகவே இருந்த போதிலும் இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Also Read: ஊரக உள்ளாட்சி மறைமுகத் தேர்தல்... கழகத்துக்குள் நடந்த களேபரங்கள்!

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருக்கும் கே.எஸ்.மஸ்தான் வசிக்கும் பகுதி என்பதினால் மட்டுமின்றி... அவரின் மகன் மொக்தியார் மஸ்தானை செஞ்சி பேரூராட்சி தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிகள் நடப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்களே இப்பகுதி கவனம் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மனைவி மற்றும் மகனை நேர்காணல் செய்யும் அமைச்சர் மஸ்தான்

அமைச்சராக மட்டுமில்லாமல், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கும் கே.எஸ்.மஸ்தான், நகர்புற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த திமுக தொண்டர்களிடம் நேர்காணல் நடத்திய போது, அவருடைய மகன் மற்றும் மனைவியையும் நேர்காணல் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது.

இது தொடர்பாக நம்மிடம் பேசியிருந்த விவரம் அறிந்த திமுக வட்டாரத்தினர் சிலர், ``இப்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் இருக்கும் மஸ்தான்... இதே செஞ்சியில் திமுக சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக ஐந்து முறை பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார். அதன் பின்னர், 2016, 2021 சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதை அடுத்துதான் அவருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

அவர் கடந்து வந்த பாதையில் இதுவரையிலும் செஞ்சி, திமுக-வின் கோட்டையாகவே இருப்பதினால், தன்னுடைய மகன் மொக்தியார் மஸ்தானையும் இந்த தேர்தலில் எளிதில் வெற்றி பெறவைத்து... தான் ஐந்து முறை அலங்கரித்த இடத்தில் தன் மகனை அமர்த்திவிடலாம் என நினைக்கிறார் மஸ்தான்.

அமைச்சரின் மகன் என்பதினால் கட்சியிலும் 'விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்' பொறுப்பை எளிதில் பிடித்துவிட்டார். நகர்ப்புற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பிலிருந்தே... அமைச்சரால் கலந்து கொள்ள முடியாத பல கட்சிக்காரர்களின் குடும்ப நிகழ்ச்சிகளிலும், அரசு திட்டப் பணிகள் போன்றவற்றிலும் இவரே அதிகம் கலந்து கொள்வார். குறிப்பாக, செஞ்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தான் இவரின் ஈடுபாடு அதிகம் இருக்கும்.

பொதுமக்களுக்கு காசு கொடுக்கும் அமைச்சர் மஸ்தான்

பொதுவாகவே தொகுதி மக்களிடம் எளிமையாக பேசுபவர் தான் மஸ்தான். இருந்தாலும், அவர் அமைச்சரானதை தொடர்ந்து எளிய மக்களை சந்திக்கும் சில நேரங்களில் அம்மக்களை வரிசையில் வரச்சொல்லி ரூபாய் நோட்டுக்களை கொடுக்கின்றார். இப்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு கூட செஞ்சி பகுதியில் அதே போல கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ கூட இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இது எல்லாமே, இந்த தேர்தலை மையப்படுத்தி தான் என்றும் தோன்றுகிறது. செஞ்சி பேரூராட்சி தலைவர் பதவியை ஆணுக்கு ஒதுக்கினால் தனது மகனையும், பெண்ணுக்கு ஒதுக்கினால் தனது மனைவியும் வெற்றிபெற வைத்து பொறுப்பில் அமர்த்திவிடலாம் என்ற நோக்கத்தோடு தான்... கடந்த 17-ம் தேதி நேர்காணல் நடத்திய போது விருப்பமனு அளித்திருந்த தனது மகனையும், மனைவியையும் நேர்காணல் செய்திருந்தார் அமைச்சர்.

தேர்தல் ஆணையம் பெண்களுக்கான இடங்களை அறிவித்த போது, செஞ்சி பேரூராட்சி அதில் இடம்பெறவில்லை. அதனால், அவரின் மகனையே போட்டியிட வைப்பதற்கு வேலைகள் ஜோராக நடக்கிறது. யார் யாருக்கு எந்தெந்த வார்டு என கட்சியின் சார்பில் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், செஞ்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 7வது வார்டில் போட்டியிட இருக்கிறார் மொக்தியார் மஸ்தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பிலிருந்தே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கவும் தொடங்கிவிட்டார் அவர். இதனால், வருடக்கணக்கில் கட்சிப் பணியில் இருந்து வரும் மூத்த நிர்வாகிகள் பலருக்கும் மனதளவில் வருத்தம் தான் என்றாலும், யாரும் அதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை, காட்டவும் முடியாது" என்றனர் லேசான குரலில்.

பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மொக்தியார் மஸ்தான்

இது தொடர்பான விளக்கம் கேட்க அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தரப்பில் பேசினோம். ``கட்சியில் இருக்கின்ற தொண்டர்கள் விருப்பமனு அளிப்பதை போலத்தான் அமைச்சரின் மனைவியும், மகனும் விருப்பமனு கொடுத்தார்கள். எல்லோரையும் நேர்காணல் செய்தது போல, அவ்விருவரையும் நேர்காணல் செய்தார் அமைச்சர். நேர்காணலுக்கு பின், மொக்தியார் மஸ்தானை ஒரு வார்டில் நிற்பதற்கு அறிவுறுத்தி இருக்கிறார். தேர்தல் முடிவுக்குப் பின்னர்தான் பேரூராட்சி தலைவர் பற்றிய முடிவையே எடுப்பார்கள்.

அமைச்சர், 1986-ல் பேரூராட்சி மன்ற தலைவராக இருந்ததில் இருந்தே அவரால் முடிந்ததை எளிய மக்களுக்கு செய்வார். அவர் செல்லும் வழியில் கஷ்டப்படுகின்ற மக்களை பார்த்தால், தனது வண்டியில் எப்போதும் தயாராக வைத்திருக்கும் அரிசி, பிஸ்கட், பிரட் போன்ற பொருட்களை எடுத்து கொடுப்பார். கொடுக்கிறதுக்கு உணவுப் பொருள் எதுவுமே இல்லையென்றால், ஏழை மக்களின் பசியைப் போக்குவதற்காக கையிலிருக்கிற காசுகளைக் கொடுப்பார். இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அமைச்சரை பொறுத்தவரைக்கும் சில நேரங்களில் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40 குடும்ப நிகழ்ச்சிகளுக்காவது அழைப்பு வந்திருக்கும். எல்லோருடைய நல்லது, கெட்டது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதால்... அமைச்சரால் போக முடியாத சூழல் இருக்கும் போது தான் அவரின் இரத்த சொந்தமான மகனை அனுப்பி வைத்து, அழைப்பு விடுத்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார்.

வாக்கு சேகரிப்பு பணியில் மொக்தியார் மஸ்தான்

அதேபோல, அரசு நிகழ்ச்சிகளை பொருத்தவரை, நலத்திட்டப்பணி யாருக்கு ஒப்படைக்கப்படுகிறதோ... அவர்கள்தான் அப்பணியைச் செய்வார்கள். அதன் துவக்க விழாவிற்கு அமைச்சரை அழைப்பார்கள். அமைச்சருக்கு பணிச்சுமை இருக்கும் போது அவரால் அங்கு செல்ல முடியவில்லை என்றால், அமைச்சரின் ஆலோசனைப்படி மரியாதை நிமித்தமாக மொக்தியார் மஸ்தான் அதில் கலந்துகொண்டு பார்வையிடுவார் அவ்வளவுதான். வேறு எந்த சூழலிலும் அரசு சார்ந்த பணியில் அமைச்சரின் மகன் என்ற முறையில் அவரது தலையீடு இருக்காது" என்றனர் விரிவாக.

பிரதான எதிர்கட்சியான அதிமுக, இப்பகுதியில் சமூதாய மக்களின் பலத்துடன் இருக்கும் பாமக போன்ற கட்சிகள் எதிர்முனையில் வரிசைக்கட்ட, மக்களின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!



source https://www.vikatan.com/government-and-politics/election/minister-mastan-plan-for-gingee-town-panchayat-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக