Ad

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

Covid Questions: பார்க்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடலாமா?

என் தந்தைக்கு 86 வயதாகிறது. அவருக்கு இரண்டு வருடங்களாக பார்க்கின்சன்ஸ் பாதிப்பு இருக்கிறது. நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்னை என்பதால் அவருக்கு கோவிட் தடுப்பூசி போட தயக்கமாக இருக்கிறது. போடலாமா, தவிர்க்க வேண்டுமா?

- ஆறுமுகம் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் முத்துச்செல்லக்குமார்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முத்துச்செல்லக்குமார்.

``பார்க்கின்சன்ஸ் பாதிப்புள்ளவர்களும் தாரளமாக கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி பயம் உள்ள சிலர், கோவிட் தடுப்பூசி நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்றொரு புரளியைக் கிளப்பி விட்டுவிட்டார்கள். அதன் காரணமாகவே பார்க்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர் போன்ற மூளை மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடலாமா, கூடாதா... ஒருவேளை போட்டால் நோயின் பாதிப்பு இன்னும் அதிகரிக்குமா... அல்லது வேறு பிரச்னைகளைக் கொண்டுவந்துவிடுமா என்றெல்லாம் மக்கள் பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

பார்க்கின்சன்ஸ் மற்றும் அல்சைமர் என இந்த இரண்டு நோய்களுமே மிகவும் வயது முதிர்ந்தவர்களையே பாதிக்கக்கூடியவை. கோவிட் வைரஸ் தொற்றானது இள வயதினரைவிட, வயதானவர்களைத் தொற்றும்போது அதன் பாதிப்பும் வீரியமும் மிக அதிகமாக இருக்கும், மரணம்வரை அழைத்துச்செல்லும் என்பதை கொரோனாவின் முதல் அலை ஆரம்பத்ததில் இருந்தே கேட்டுக்கொண்டிருக்கிறோம். மேலும் நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள், சிறுநீரக நோய்கள் போல இவையும் இணைநோய்கள்தான். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாகி, ஆபத்தான நிலைக்குக் கொண்டு செல்லும். இவர்களின் மூளை பாதிக்கப்படும்.

Old People (Representational Image)

Also Read: Covid Questions: எகிறும் ரத்தச் சர்க்கரை அளவு; இன்சுலின் போட்டுக்கொண்டுதான் தடுப்பூசி போட வேண்டுமா?

அதே நேரம் கோவிட் தடுப்பூசி போடுவதால் இவர்களின் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதில்லை. எனவே, இவர்களுக்குத் தடுப்பூசி போடுவதுதான் சிறந்தது. அது மட்டும்தான் அவர்களை பேராபத்திலிருந்து காக்கும். எனவே தயங்காமல், தாமதிக்காமல் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யுங்கள்."

கொரோனா தொடர்பாகவும், அது ஏற்படுத்தும் பிற உடல், மனநல பாதிப்புகள் தொடர்பாகவும் அனைவர் மனதிலும் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவற்றுக்கு விடைசொல்லவே இந்த `Covid Questions' பகுதி. இந்தப் பகுதியில் தினம்தோறும் கொரோனா தொடர்பான ஒரு கேள்விக்கு விடையளிக்கப்படும். இதேபோல உங்களுக்கும் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் இருப்பின் அவற்றைக் கீழே கமென்ட் செய்யுங்கள். வரும் நாள்களில் அவற்றுக்கு விடையளிக்கிறோம். விகடனுடன் இணைந்திருங்கள்!


source https://www.vikatan.com/health/healthy/can-people-suffering-from-parkinsons-disease-take-covid-vaccine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக