நார்த் இந்தியன், சைனீஸ் சாப்பாட்டுப் பிரியர்களுக்கு இணையாக இத்தாலியன் உணவுகளைத் தேடிச் சென்று சாப்பிடவும் ஒரு கூட்டம் உண்டு. `அதான் கொரோனா வந்து எல்லாத்தையும் காலி பண்ணிடுச்சே...' என புலம்பாமல், இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீட்டிலேயே விதம்விதமான இத்தாலியன் விருந்து செய்து அசத்துங்கள்...
தேவையானவை:
* மாதுளைச்சாறு – கால் கப்
* சோடா வாட்டர் – கால் கப்
* ஜில்லென்ற பால் – கால் கப்
* ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
* ரோஸ் சிரப் - ஒரு டேபிள்ஸ்பூன்
* ஐஸ்கட்டிகள் - 4 அல்லது 5
செய்முறை:
முதலில் ஃப்ரெஷ் க்ரீமையும் பாலையும் ஒன்றாகக் கலந்துகொள்ளவும். ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டிகளைப் போடவும். அதன்மேல் மாதுளைச்சாற்றையும், ரோஸ் சிரப்பையும் ஊற்றவும். பிறகு அதன்மேல் சோடா வாட்டரை ஊற்றவும். பின்னர் ஃப்ரெஷ் க்ரீம் - பால் கலவையை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.
குறிப்பு:
* மாதுளைச்சாற்றுக்குப் பதிலாக வேறு எந்தவொரு பழச்சாற்றையும் உபயோகப் படுத்தலாம். ரோஸ் சிரப்புக்குப் பதிலாக அந்தந்தப் பழச்சாற்றின் நிறத்துக்குத் தகுந்தாற்போல் தேன், பொடித்த சர்க்கரை ஆகியவற்றையும் பயன்படுத்தலாம்.
தேவையானவை - ராவியோலி செய்ய:
* கோதுமை மாவு - அரை கப்
* சன்னமான ரவை - அரை கப்
* பாஸ்தா சாஸ் - ஒரு கப்
* பேசில் இலைகள் - 5 அல்லது 6
* மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ் (Mixed Italian herbs) - ஒரு டீஸ்பூன்
* பூண்டு பவுடர் - அரை டீஸ்பூன்
* எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* உப்பு - ஒரு சிட்டிகை
ஃபில்லிங் செய்ய:
* பொடியாக நறுக்கிய பாலக் கீரை - ஒரு கப்
* துருவிய சீஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
* துருவிய பனீர் - ஒரு டேபிள்ஸ்பூன்
* பிரெட் தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
* மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் கோதுமை மாவு, ரவை, உப்பு, எண்ணெய் ஆகியவற்றைப் போட்டு வெதுவெதுப்பான நீரை ஊற்றி, சற்றுக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை நாற்பது நிமிடங்கள் ஊறவைக்கவும்.
பொடியாக நறுக்கிய பாலக் கீரையைக் கொதிக்கும் நீரில் போட்டு ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு நீரை வடிகட்டவும். பின்னர் அதை நன்றாகப் பிழிந்து ஆறவைக்கவும். அதனுடன் துருவிய சீஸ், பனீர், பிரெட் தூள், உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து ஃபில்லிங் செய்துகொள்ளவும்.
ஊறவிட்ட மாவை நன்றாக இழுத்துப் பிசைந்து மிக மெல்லிய சப்பாத்திகளாகச் செய்துகொள்ளவும். பிறகு, சப்பாத்தியைப் பூரி போன்ற வட்டங்களாக வெட்டிக்கொள்ளவும். வெட்டிய வட்டத்தின் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் ஃபில்லிங்கை வைத்து, பாதியாக மூடவும். ஓரங்களை ஒரு ஃபோர்க்கை (fork) வைத்து அழுத்தி மூடவும். இதற்குப் பெயர்தான் ராவியோலி.
பின்னர், ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். செய்துவைத்துள்ள ராவியோலிகளை மூன்று நான்காகக் கொதிக்கும் நீரில் மெதுவாகப் போடவும். இரண்டு நிமிடங்களில் ராவியோலி வெந்து மேலே மிதந்து வரும். இவ்வாறு வரும் ராவியோலியை எடுத்துத் தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ளவும்.
பாஸ்தா சாஸை ஒரு பாத்திரத்தில் லேசாகக் கொதிக்கவிடவும். பிறகு, அதில் பூண்டு பவுடர், மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும். வேக வைத்திருக்கும் ராவியோலியையும் அதில் சேர்த்து. ஒரு கொதிவந்ததும் இறக்கவும். அதில் பேசில் இலைகளைப் போட்டுப் பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிதளவு சீஸ் தூவியும் பரிமாறலாம்.
தேவையானவை:
* ஃபிரெஞ்சு பிரெட் (French Bread) - ஒன்று
* குடமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று
* தக்காளி சாஸ் - 5 டேபிள்ஸ்பூன்
* மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்
(mixed Italian herbs) - ஒரு டீஸ்பூன்
* ஒரிகானோ - ஒரு டீஸ்பூன்
* துருவிய சீஸ் - 5 டேபிள்ஸ்பூன்
* உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப
செய்முறை:
குடமிளகாய், வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளவும். அதனுடன் உப்பு, மிளகுத்தூள், ஒரிகானோ, மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிரெட்டை நீளவாட்டிலோ, வட்டமான துண்டுகளாகவோ நறுக்கவும்.
நறுக்கிய இந்த பிரெட் துண்டுகளை ஒரு பேக்கிங் ட்ரேயில் வரிசையாக அடுக்கி ஒவ்வொரு துண்டின் மேலும் கலந்து வைத்திருக்கும் காய்கறிக் கலவையைக் கொஞ்சம் வைக்கவும்.
பிறகு ஒவ்வொன்றின் மேலும் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸை ஊற்றி, அதற்கு மேல் துருவிய சீஸைத் தூவவும். பிறகு அவனை (oven) 180 டிகிரி சென்டிகிரேடில் பத்து நிமிடங்களுக்கு பிரீஹீட் செய்யவும். பிறகு, அவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து 10 - 12 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவும்.
தேவையானவை - பெஸ்டோ சாஸ் தயாரிக்க:
* பேசில் இலைகள் - ஒரு கப்
* பாதாம் அல்லது வால்நட் - கால் கப்
* பூண்டு - ஒரு பல்
* ஆலிவ் ஆயில் - அரை கப்
* எலுமிச்சைப்பழச்சாறு - அரை டீஸ்பூன்
* உப்பு - தேவைக்கேற்ப
சாண்ட்விச் தயாரிக்க:
* பிரவுன் பிரெட் - 4 ஸ்லைஸ்
* சீஸ் ஸ்லைஸ்கள் - 2 (அல்லது) துருவிய
*மோசரெல்லா சீஸ் - 4 டேபிள்ஸ்பூன்
* தக்காளி - 2
* வெங்காயம் - ஒன்று
* பச்சை, சிவப்பு, மஞ்சள்,குடமிளகாய் - தலா ஒன்று
* மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு மிக்ஸியில் பேசில் இலைகள், பூண்டு, பாதாம் அல்லது வால்நட், உப்பு, எலுமிச்சைச் சாறு, ஆலிவ் ஆயில் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து, தண்ணீர் ஊற்றாமல் சட்னி போல கெட்டியாக அரைத்தால் பெஸ்டோ சாஸ் ரெடி
பிரெட் ஸ்லைஸில் தேவையான அளவு பெஸ்டோ சாஸைத் தடவவும். அதன்மேல் வட்டமாக வெட்டிய தக்காளி, வெங்காயம், குடமிளகாய் ஆகியவற்றை வைக்கவும். பின்னர் அதன் மீது உப்பு, மிளகுத்தூள் தூவி, சீஸ் ஸ்லைஸ் வைக்கவும்.
பின்பு மற்றொரு பிரெட் ஸ்லைஸில் பெஸ்டோ சாஸ் தடவி அதன் மீது வைத்து மூடவும். இவ்வாறு செய்த சாண்ட்விச்சை எலெக்ட்ரிக் சாண்ட்விச் மேக்கரில் வைத்து கிரில் செய்து சூடாகப் பரிமாறவும்.
தேவையானவை:
* லாசானியா ஷீட்கள் - 6
* நறுக்கிய காய்கறிகள் (கேரட், புரொக்கோலி, பீன்ஸ், மஷ்ரூம் போன்றவை) - அரை கப்
* வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
* ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
* வெங்காயம் - ஒன்று (நறுக்கவும்)
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்)
* மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ்
(mixed Italian herbs) - அரை டீஸ்பூன்
* ஒரிகானோ - அரை டீஸ்பூன்
* பாஸ்தா சாஸ் - அரை கப்
* பால் - ஒரு கப்
* மக்காச்சோள மாவு - 2 டீஸ்பூன்
* மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
* பூண்டு பவுடர் - ஒரு டீஸ்பூன்
* துருவிய சீஸ் - ஒரு கப்
* உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
காய்கறிகளுடன் சிறிதளவு உப்பு சேர்த்து லேசாக வேகவைக்கவும். ஒரு கடாயைச் சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை லேசாக வதக்கவும். பிறகு, அதனுடன் வேகவைத்த காய்கறிகள், அரை டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயைச் சூடாக்கி அதில் மக்காச்சோள மாவைச் சேர்த்து லேசாக வறுக்கவும். பின்னர் அதில் பாலை ஊற்றி கட்டி தட்டாமல் கைவிடாமல் கிளறவும். கலவைச் சற்று கெட்டியானவுடன் அதில் சிறிதளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி கடாயைக் கீழே இறக்கவும். பின்னர் இந்தக் கலவையை வதக்கி வைத்துள்ள காய்கறிகளுடன் சேர்த்துக் கலந்தால் காய்கறிகள் சேர்ந்த வொயிட் சாஸ் ரெடி. ஒரு பெரிய பாத்திரத்தில் நிறைய தண்ணீரை எடுத்துக் கொதிக்க வைக்கவும். அதில் லாசானியா ஷீட்டுகளை ஒவ்வொன்றாகப் போட்டு 2 - 3 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும். ஒரு கண்ணாடி பேக்கிங் டிஷ்ஷின் (baking dish) அடியில் ஆலிவ் ஆயிலைத் தடவி அதன்மேல் வேகவைத்த லாசானியா ஷீட்டுகளை வரிசையாக அடுக்கவும்.
அவற்றின் மேல் லேசாக உப்பு, பூண்டு பவுடர் தூவவும். அதற்கு மேல் வொயிட் சாஸ் காய்கறிகள் கலவையைச் சரிசமமாக பரப்பவும். பின்னர், அதன்மேல் பாதி அளவு சீஸைத் தூவி அதற்கு மேல் மறுபடியும் ஒரு லேயர் வேகவைத்த லாசானியா ஷீட்டுகளை வரிசையாக அடுக்கி உப்பு, பூண்டுத்தூளைத் தூவவும். அதற்கு மேல் பாஸ்தா சாஸை ஊற்றி சமமாகப் பரப்பவும்.
பின்னர் மிக்ஸ்டு இத்தாலியன் ஹெர்ப்ஸ், ஒரிகானோ மற்றும் மீதமுள்ள சீஸைத் தூவவும். 180 சென்டிகிரேடுக்கு பிரீஹீட் செய்த அவனில் (oven) 20 முதல் 25 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.
source https://www.vikatan.com/food/recipes/spinach-cheese-ravioli-bruchetta-lasagne-italian-special-weekend-recipes
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக