`நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே... வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே..!' - எஸ்.பி.பி பாடிய உணர்வுபூர்வமான இந்தப் பாடல் வரிகள், அவருக்கே பொருந்திப்போவதுதான் காலத்தின் விந்தை.
கடந்த ஆண்டு கொரோனா பெருந்துயருக்கு மத்தியில் பேரிடியாக அமைந்தது பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மறைவு. கொரோனாவின் பிடியிலிருந்து உலகம் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பாத சூழலில், ஓராண்டுக்காலம் ஆகியும் எஸ்.பி.பி-யின் இழப்பை, அவரின் குடும்பத்தினராலும் ரசிகர்களாலும் இன்னும் முழுமையாக ஜீரணிக்க முடியவில்லை. நம் மனதில் நிழலாடும் எஸ்.பி.பி-யின் பாடல்களும் நினைவுகளும், அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் (செப்டம்பர் 25) நம் இதயங்களை மீண்டும் கனமாக்குகின்றன. காலம் எவ்வளவு வேகமாக நகர்கிறது என்பதை உணர்த்தும் எஸ்.பி.பி நினைவுகளிலிருந்து நம்மை மீட்டெடுக்க, அவரின் பாடல்களே இசை மருந்தாகவும் அமைகின்றன. மகத்தான கலைஞன் `பாடும் நிலா பாலு'வுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து, பின்னணிப் பாடகி சுனந்தாவிடம் பேசினோம்.
`வெள்ள மனம் உள்ள மச்சான்...' என்று இனிமையான குரலால் தாலாட்டுப் பாடிய சுனந்தாவை மறக்க முடியுமா? அந்தப் பாடலைப் பாடுவதற்காகச் சென்றபோதுதான், முதன்முறையாக எஸ்.பி.பி-யைச் சந்தித்திருக்கிறார் இவர். அந்த மலரும் நினைவுகளை அசைபோடுகிறார் சுனந்தா.
``காலேஜ் படிச்சுட்டிருந்த காலத்துல, இளையராஜா சார்தான் என்னைப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அவர் இசையில பாடிய `வெள்ள மனம்' எனக்கு ரெண்டாவது பாடல். அந்தப் பாடலைப் பாட பிரசாத் ஸ்டூடியோ போனப்போதான், எஸ்.பி.பி சாரும், ஜானகி அம்மாவும் டூயட் பாடல் பாடிட்டு ரெக்கார்டிங் தியேட்டரிலிருந்து வெளியே வந்தாங்க. என்னைப் பத்தி தெரிஞ்சுகிட்டு, `நல்லா பாடுங்க... பெரிய பாடகியா வருவீங்க'ன்னு மனசார வாழ்த்தினார் அவர். எஸ்.பி.பி சார் அப்பவே முன்னணிப் பாடகர். ஆனா, ஒவ்வொருமுறையும் ரெக்கார்டிங் தியேட்டர்ல சந்திக்கும்போதெல்லாம், என்னையும், சக புதுமுக பாடகர்களையும் தமாஷ் பண்ணி, பாகுபாடின்றி ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார்.
அவர்கூட டூயட் பாடணும்ங்கிற என் ஆசையும் சீக்கிரமே நிறைவேறுச்சு. `தங்கச்சி'ங்கிற படத்துல எஸ்.ஏ.ராஜ்குமார் சார் இசையில, `முதல் முறையாய் நான்'னு தொடங்கும் பாடல்தான் எஸ்.பி.பி சார்கூட நான் இணைஞ்சு பாடிய முதல் டூயட் சாங். மலையாளியான நான் தமிழ் வார்த்தைகளைப் புரிஞ்சுகிட்டு பாட ரொம்பவே சிரமப்பட்டேன். உச்சரிப்பு உட்பட பல விஷயங்கள்லயும் எனக்கு ஆலோசனை கொடுத்து, பதற்றமில்லாம ரொம்பவே கூலா பாட உதவினார். அந்தப் படத்துல அவரும் நானும் இணைஞ்சு நாலு டூயட் பாடல்கள் பாடினோம். பிறகு, இளையராஜா சார், தேவா சார் உட்பட பல இசையமைப்பாளர்களோட இசையில நாங்க ரெண்டு பேரும் இணைஞ்சு நிறைய பாடல்கள் பாடினோம்.
Also Read: ``நான்லாம் ஒண்ணுமே இல்லை சார்!" - எஸ்.பி.பி... சுவாரஸ்ய தகவல்கள்
`சொல்லவா சொல்லவா' பாடல் பாடுறப்போ, சின்னச் சின்ன சங்கதிகளையெல்லாம் போட்டி போட்டுப் பாடினோம். அவர்கூட சேர்ந்து வேலை செஞ்ச ஒவ்வொரு பாடல் பதிவுமே மறக்க முடியாத அனுபவம்தான். `உழைப்பாளி' படத்துல `அம்மா அம்மா' பாடலைத் தனித்தனி வெர்ஷனா அவரும் நானும் பாடினோம். `வீட்ல விசேஷங்க' படத்துக்காகப் பாடப் போனப்போ, `அம்மா அம்மா' பாடலை, என்னைவிடவும் நீ நல்லா பாடியிருந்தே'ன்னு வாழ்த்தினார். இதுபோல ஒவ்வொருமுறையும், சக பாடகர்களை ஊக்கப்படுத்துவார். அதேசமயம், மனம் புண்படாத வகையில பலரையும் கிண்டல் செஞ்சு சிரிக்கவும் வைப்பார். இதனால, அவருடன் இணைஞ்சு பாடும்போதெல்லாம் பதற்றமில்லாம என்னால பாட முடிஞ்சது.
அந்த ஆரம்பக்காலத்துல குரல் வளம் பாதிக்குமோங்கிற பயத்துல, அடிக்கடி வெந்நீர்தான் குடிப்பேன்; ஸ்வீட், ஐஸ்க்ரீம் மாதிரியான உணவுகளைத் தவிர்த்துடுவேன். இதைக் குறிப்பிட்டு அடிக்கடி கிண்டல் செய்யும் எஸ்.பி.பி சார், `இப்படியெல்லாம் வருத்திக்க வேண்டிய அவசியமில்ல. கூல்டிரிங்ஸ், ஐஸ்க்ரீம்னு எல்லா உணவுகளையும் நான் சாப்பிடுவேன். எனக்கு எந்தத் தொந்தரவும் வர்றதில்ல'ன்னு சொல்லுவார். லஞ்ச் நேரத்துல பழங்கள், பிஸ்கட்தான் பெரும்பாலும் சாப்பிடுவேன். அதை அவருக்கும் கொடுப்பேன். `எனக்கு இதெல்லாம் பத்தாது. ஃபுல் மீல்ஸ்தான் வேணும்'னு சொல்லிச் சிரிக்க வைப்பார்." - எஸ்.பி.பி உடன் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் சுனந்தா, அவர்மீது குருவுக்கு இணையான மதிப்பை வைத்திருக்கிறார்.
Also Read: ``நித்யா மேனன் கொடுத்த அன்பு முத்தம்... எஸ்.பி.பி கொடுத்த வாக்குறுதி!" - பி.சுசீலா ஷேரிங்ஸ்
``அப்போல்லாம் எஸ்.பி.பி சார் பரபரனு ஓய்வில்லாம ஒரே நாள்ல பல பாடல்கள் பாடிட்டிருந்தார். ரெக்கார்டிங் முடிச்சுட்டு கச்சேரிக்குப் போக வேண்டிய அவசர சூழல்ல இருந்திருக்கார். என்னை வாழ்த்தியே ஆகணும்னு, கச்சேரிக்குப் போகுற வழியில, தங்கை எஸ்.பி.சைலஜாவுடன் என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்திட்டுப் போனார். என் கணவர் காஷ்மீர் உட்பட பல இடங்கள்ல வேலை செஞ்சார். அதைக் குறிப்பிட்டு, ̀ `ரோஜா' படத்துல வரும் மதுபாலா மாதிரிதானே நீங்க?'ன்னு கிண்டல் செய்வார். ரொமான்டிக் சாங்ஸ் பாடும்போது எனக்கு ரொம்பவே தர்மசங்கடமாவும் கூச்சமாவும் இருக்கும். `சிங்கர்னா எல்லாவிதமான பாடல்களையும் பாடணும். இந்த மாதிரியான சாங்ஸ் பாடும்போது, உங்க கணவரை நினைச்சுகிட்டு சந்தோஷமா பாடுங்க'ன்னு சொல்லுவார்.
கன்னடம், தெலுங்கு மொழிகள்ல பிழையில்லாம பாடவும் ரொம்பவே சப்போர்ட் பண்ணியிருக்கார். என்கிட்ட ஆர்வமா மலையாளம் கத்துப்பார். ரெக்கார்டிங் தவிர, மேடைக் கச்சேரிகள் பலவற்றிலும் சேர்ந்து பாடியிருக்கோம். வெளியிடங்கள்ல யார்கிட்டயும் நான் அதிகம் பேச மாட்டேன். என்னைப் பேச வைக்குறத்துக்காக, என்கிட்ட ஏதாச்சும் கீர்த்தனைகள் பத்தி சந்தேகம் கேட்டு பேச்சுக் கொடுத்துட்டே இருப்பார்" என்று பசுமையான நினைவுகளை அடுக்கிக்கொண்டே செல்கிறார் சுனந்தா.
Also Read: "எஸ்.பி.பி-யும், ஜானகியும் என்னைப் புரிந்துவைத்திருந்தார்கள்!"- ஆனந்த விகடனில் இளையராஜா!
எஸ்.பி.பி-யின் கடைசி காலகட்டத்தில், கூப்பிடும் தூரத்தில் இருந்தும்கூட, அவரைப் பார்க்க முடியாமல் வருந்தியிருக்கிறார் சுனந்தா. அந்த ஏக்கத்தை சுனந்தாவின் குரல் காட்டிக்கொடுக்கிறது. ``வெளி நிகழ்ச்சிகள்ல சந்திச்சுக்கும்போது, மனம் விட்டுப் பேசுவோம். போன வருஷம் ஆகஸ்ட்ல என் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாம, சென்னையிலுள்ள தனியார் ஆஸ்பத்திரியில அவரைச் சேர்த்தோம். அதே ஆஸ்பத்திரியிலதான் அப்போ எஸ்.பி.பி சாரும் சிகிச்சையில் இருந்தார். இதைக் கேள்விப்பட்டதுமே அவரைச் சந்திக்கணும்னு ஆசைப்பட்டாலும் அது நடக்கல. பிறகு, குணமாகி வீட்டுக்கு வந்த என் அப்பா, மறுபடியும் உடல்நிலை சரியில்லாம செப்டம்பர் 20-ம் தேதி இறந்துட்டார்.
அதற்கடுத்த அஞ்சாவது நாளே எஸ்.பி.பி சாரும் இறந்துட்டார். அவருடைய மறைவுச் செய்தி, என் குடும்பத்தில் ஒருவரை இழந்த தவிப்பை ஏற்படுத்துச்சு. அந்த இறுதிநாள்கள் எனக்கு கூடுதல் சோகம் நிறைந்தது. வாழ்நாள் முழுக்க எஸ்.பி.பி சாரின் இழப்பையும் நினைவுகளையும் என்னால மறக்கவே முடியாது" - விழிகள் குளமாக, உணர்ச்சிமயமாக முடிக்கிறார் சுனந்தா.
இசை ஒலிக்கும் காலம் முழுக்கவே, நம் மனதில் நீங்காமல் நிலை கொண்டிருப்பார் எஸ்.பி.பி.
source https://cinema.vikatan.com/music/singer-sunanda-shares-her-fond-memories-of-sp-balasubramaniam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக