Ad

சனி, 25 செப்டம்பர், 2021

``ஏன் சினிமாவிலிருந்து விலகிட்டீங்கன்னு வாஞ்சையா கேட்பார்!" - ஜென்ஸியின் எஸ்.பி.பி நினைவுகள்

திரையிசையில் பொன் விழா கண்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு, எவர்கிரீன் 80'ஸ் காலகட்டம் ஏற்றமும் மாற்றமும் கொடுத்த பொற்காலம். இளையராஜாவுடன் கரம்கோத்த இவரின் கூட்டணி, 80-களில் நிகழ்த்திய இசை மேஜிக், இன்றளவும் இன்னிசை கீதங்கள். அதே காலகட்டத்தில், `தெய்வீக ராகம் தெவிட்டாத பாடலா'க ஒலித்த ஜென்ஸியின் தனித்துவமான குரலுக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். அவருக்கோ, எஸ்.பி.பி உடன் இணைந்து அதிகமான பாடல்களைப் பாடாத ஏக்கம் அதிகம் இருக்கிறது. எஸ்.பி.பி-யின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், அவருடனான நட்பு குறித்து பின்னணிப் பாடகி ஜென்ஸியிடம் பேசினோம்.

எஸ்.பி.பாலசுப்ர மணியம்

Also Read: "எஸ்.பி.பி-யும், ஜானகியும் என்னைப் புரிந்துவைத்திருந்தார்கள்!"- ஆனந்த விகடனில் இளையராஜா!

``இளையராஜா சார் இசையிலதான் நான் அதிகமான பாடல்களைப் பாடியிருக்கேன். ரெக்கார்டிங் பாடப் போகும்போது எஸ்.பி.பி சாரை பலமுறை சந்திச்சுப் பேசியிருக்கேன். அந்த நேரத்துல யேசுதாஸ் அண்ணாவுடன் இணைஞ்சுதான் டூயட் பாடல்களை அதிகமா பாடினேன். எஸ்.பி.பி சார்கூட சேர்ந்தும் டூயட் பாட ரொம்பவே ஆசைப்பட்டேன். `கடவுள் அமைத்த மேடை'ங்கிற படத்துல `மயிலே மயிலே' பாடல் மூலமா அந்த ஆசை நிறைவேறுச்சு. நான் சினிமாவுக்கு வந்தது, ரொம்ப சீக்கிரமாவே ஃபேமஸானதுன்னு பல விஷயங்கள் எனக்கே ஆச்சர்யம்தான். அதனாலதானோ என்னவோ, எஸ்.பி.பி சார்கூட தமிழ்ல மூணு, தெலுங்குல ஒண்ணுனு மொத்தமே நாலு பாடல்களைப் பாடுற வாய்ப்பு மட்டுமே எனக்குக் கிடைச்சுது.

எனக்கு பூர்வீகம் கேரளா. ரெக்கார்டிங் இருந்தா மட்டும் சென்னைக்கு வந்து பாடிட்டு உடனே ஊருக்குக் கிளம்பிடுவேன். அதனால, எஸ்.பி.பி சார்கூட பழகுறதுக்கான வாய்ப்பு எனக்கு அதிகமா அமையல. மழைக்காலத்துல முளைக்குற காளான் மாதிரி, பாடகியா குறுகிய காலம் மட்டும்தான் நான் வேலை செஞ்சேன். அதனால, பாலு சார்கூட அதிகமான பாடல்கள் பாடுற வாய்ப்பும் எனக்கு ரொம்பவே கம்மியாதான் அமைஞ்சது.

எஸ்.பி.பி உடன் ஜென்ஸி

Also Read: ``எஸ்.பி.பி-யும் வாலி சாரும் ஒண்ணா உட்கார்ந்தா அவ்ளோ கலாட்டாவா இருக்கும்!''- தாணு

ஒருகட்டத்துல சினிமாவுல பாடாட்டியும்கூட, பல்வேறு இசை நிகழ்ச்சிகளுக்குப் போனேன். அந்த நேரத்துல எஸ்.பி.பி சாரை சந்திச்சுப் பேச வாய்ப்பு கிடைக்கும். `நீங்க இன்னும் நிறைய பாடல்கள் பாடியிருக்கணும். ஏன் சினிமாவிலிருந்து விலகிட்டீங்க?'ன்னு வாஞ்சையா கேட்பார். கலைஞர்களைப் பாராட்டுறதும் ஊக்கப்படுத்துறதும் எஸ்.பி.பி சாரின் சிறந்த குணங்கள்ல முக்கியமானது. அவர் இசைத்துறையில பெரிய இமயம் மாதிரி. அவர்கூட சேர்ந்து வேலை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைச்சதே பெரிய கொடுப்பினைதான். கேரளாவுல வசிச்சாலும் பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களைத்தான் தினமும் கேட்பேன். அதுல, எஸ்.பி.பி சாரின் பாடல்கள்தான் அதிகம் இருக்கும். அதனால, அவரை நான் நினைக்காத நாளில்லை" என்று நெகிழ்ந்து உருகுகிறார் ஜென்ஸி.



source https://www.vikatan.com/news/cinema/singer-jency-recalls-her-sp-balasubramaniam-memories

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக